Sunday, September 14, 2008

பயங்கரவாதப் பெருந்தீ - தீர்வு என்ன?

வெள்ளி மாலை யதேச்சையாக தொ.கா பார்த்தபோது, பாக்கிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில் பயங்கரவாதிகளின் வெறியாட்டம் பற்றி செய்தியில் சொன்னார்கள். ரமலான் இரவுத்தொழுகை தொழுதுகொண்டிருந்த மக்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கிரேனைட்டுகளை எறிந்தும் 25 உயிர்களைக் கொன்றிருக்கிறார்கள், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். பாக்கிஸ்தானிகளாக இருந்தாலும், கொல்லப்பட்டவர்களுக்காக மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்தத் தீவிரவாதத்துக்கு ஒரு முடிவு வராதா? யார் இந்த கோழைத்தனமான படுகொலைகளைச் செய்திருப்பார்கள்? இதன் பின்னணி நோக்கம் என்னவாக இருக்கும்? நமது நாட்டில் சொல்லப்படுவது போல, அங்கும் அந்நிய நாட்டுச் சதி என்று சொல்வார்களோ? - புற்றிலிருந்து வெளிக்கிளம்பும் ஈசல்களைப் போல கேள்விகள் முளைத்துக்கொண்டேயிருந்தன.

நேற்று மாலை தமிழ்மணத்தைத் திறந்த போது டெல்லி குண்டுவெடிப்புக் குறித்து ஒரு பதிவு கண்ணில் படவும், அதிர்ந்தவனாக உடனே ஓடிச்சென்று தொ.கா வைத் திறக்க, ஐந்து இடங்களில் குண்டு வெடித்து 30 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் என்று சொன்னார்கள். ஆத்திரமும், வருத்தமுமாக இருந்தது. காட்டப்பட்ட காட்சிகளைக் கண்டு கண்ணீர் துளிர்த்தது.

அப்பாவி மக்கள் மீதான இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? ஜாதி, மதம் பாராமல், இந்த ஈனச்செயலைச் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டாமா? யார் செய்தது இந்தக் கொடூரத்தை? இந்தியாவின் அமைதியைக் குலைக்க நினைக்கிற எதிரிநாடுகளின் கைவண்ணமா? இஸ்லாமியப் பெயராளிகளின் தீவிரவாதமா? அல்லது இந்துத்துவத்தின் இன்னொரு அரசியல் விளையாட்டா? குழப்பச்சேற்றில் மீன் பிடிக்கும் எதிரிகளா? அரசு எப்படியாகிலும் இவற்றைத் தடுத்திருக்கவேண்டுமல்லவா? ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இந்திய அரசின் உளவுத்துறையின் கையாலாகாத்தனமல்லவா வெளிப்படுகிறது? அந்த அப்பாவிக் குடும்பங்களுக்கு என்ன ஆறுதலை இந்த அரசு இயந்திரங்கள் அளித்திட முடியும்? இனியேனும் இவை நடக்காதிருக்க என்ன தான் வழி?

பி.ஜே.பி யினர் கூறுவதைப் போல கடுமையான (POTA) சட்டங்களைக் கொண்டுவரவேண்டுமா? ஆனால் கடுமையான அந்தச் சட்டங்கள் அரசியல்/மதக் காழ்ப்புணர்வுகளைத் தீர்த்துக்கொள்ளத்தானே கடந்த காலங்களில் பயன்பட்டிருக்கின்றன. (கோத்ரா முஸ்லிம்கள் பொடாவில் கைது செய்யப்பட்டனர் ஆனால் குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரிகள் ஒருவர்கூட அப்படி கைது செய்யப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது)

அப்படிக் கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டங்கள் காழ்ப்புணர்வுகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வன்மமாகப் பயன்படுத்தப்பட்ட போது/அரசியல் இன ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்பட்டபோது தீவிரவாதம் இன்னும் அதிகமாக அல்லவா ஆனது?. தீவிரவாதத் தடுப்பு என்ற பெயரில் பாலகர்கள் மீதும் சட்டத்தின் வன்முறையை ஏவினார்களே! ஐ.நா சபையின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை அதைக் குறிப்பிடுகிறதே

தவறு எங்கே இருக்கிறது?

நீதியும் வாழ்வாதாரமும் மறுக்கப்படும் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்களா? இந்த ஒரு கேள்வி ஸ்தம்பிக்க வைத்தது, அப்படியும் இருக்குமோ?.

குஜராத் படுகொலைகளுக்கான நீதி இன்னும் அநீதியாளர்கள் அக்கிரமக்காரர்களின் கையில் இருப்பது நினைவுக்கு வந்தது. பாபர் மசூதி இடிப்பில் தொடங்கிய இந்தத் தீவிரவாதம் பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் கலவரம், குஜராத் இனப்படுகொலைகள், அண்மையில் நடந்தேறிய ஒரிசா அட்டூழியங்கள்என்று நினைவுகள் தொடர இதில் சம்பந்தப்பட்டவர்கள்; பங்காற்றியவர்கள் ஏன் இதுவரை இந்தியத் திருநாட்டில் தண்டிக்கப்படவில்லை என்ற வினாவும் பூதாகரமாக எழுந்தது.

ஒரிசா படுகொலைகளை ராமகோபால வகையறாக்கள் நியாயப்படுத்துவதாக ஒரு செய்தியும் இன்று படித்தேன். என்ன கொடுமை?

"பெரும்பான்மையினரின் தீவிரவாதமே சிறுபான்மையினரின் எதிர்வினைக்குக் காரணமாக அமைகிறது" என்று ஜவாஹர்லால் நேரு சொன்னது சரிதான் என்றல்லவா இந்த ராம கேவலர்கள் நிரூபிக்கிறார்கள்.

என்னதான் தீர்வு?

இந்துத்துவ ஆதிக்கவாதத்தால்; அந்த ஃபாசிசத்தால் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் அட்டூழியங்களை-அது திருவிதாங்கோடு/முத்துப்பேட்டை பிள்ளையார் ஊர்வல சலசலப்பாக இருந்தாலும், குஜராத் கொடூரமாக இருந்தாலும்-அரசு விழிப்புடன் உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுத்து பயங்கரவாதத் தீ மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.
தீவிரவாதிகள் எந்த மதத்தை; இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த சமூகத்தின் துணைகொண்டே தனிமைப்படுத்த வேண்டும். (இதற்கான யோசனைகளை வாசகர்கள் தெரிவிக்கலாம்) ஆனால், ஊடகர்களும், அரசியல் நாடகர்களும் குறிப்பிட்ட சமூகத்தை அல்லவா குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனைகிறார்கள்?

இந்துத்துவ ஆதிக்க/ஃபாசிச சக்திகள் ஆட்டம் போடுவதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட; தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரள வேண்டும். இவர்களுடன் சிறுபான்மையினர் அணிவகுக்க வேண்டும். மத வெறியுணர்வுகளுக்குப் பலியாகக்கூடாது.

சிறுபான்மை சமூக மக்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்கி அவர்களும் இந்திய குடிமக்களே என்று பெருமிதப்படுவதற்கு வழிவகுக்கச் செய்ய அவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி, நீதி, சமூக அந்தஸ்து சரியாகவும் முறையாகவும் வழங்கப்படவேண்டும். சச்சார் உள்ளிட்ட ஆணையங்கள் இவற்றை படம்பிடித்துக் காட்டிய பிறகும் அரசாங்கம் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? ஆதிக்கச்சக்திகள்; பாஸிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி இவற்றை சரிவர நிறைவேற்றுவதில் அரசு முனைப்பு காட்டவேண்டாமா?.

அரசியல் லாபக்கணக்கு பார்க்காத நாட்டுப்பற்று மிக்க ஒரு அரசால் தான் இதைச் செய்யமுடியும்.

Sunday, September 07, 2008

சமூக நல்லிணக்கத்தில் ஆர்வமுள்ளவரா நீங்கள்?


சமூக, மத நல்லிணக்கம் காக்கப்பட விரும்புபவரா நீங்கள்?

அப்படியானால் தினமலரை தயவுசெய்து புறக்கணியுங்கள்.


தினமலர் என்கிற நாளிதழ் பார்ப்பனீய சார்புடன் இருந்துவிட்டு போகட்டும், யாரும் கவலைப்படமாட்டார்கள். தினமலரை பார்ப்பனீய சார்பு என்பதைவிட சங் சார்பு மற்றும் இஸ்லாமிய விரோத நாளேடு என்பதே சரி என்னும் வகையிலேயே அதன் செய்திகளும் போக்கும் அமைந்து வந்தன.


கடந்த இரண்டு ஆண்டுகளாக, முஸ்லிம்களின் புனித இரமலான் மாதத்தில் சம்பந்தமேயில்லாமல் முஸ்லிம்களை மிகவும் புண்படுத்தும் கார்ட்டூன்களை அது பதிப்பித்து வருகிறது என்னும் போது அந்த மதவெறி ஏட்டின் உள்நோக்கம் தெளிவாக விளங்கத்தான் செய்கிறது. எப்படியாவது முஸ்லிம்களைத் தூண்டி விட்டு தாம் குளிர்காய இயலாதா என்று நினைக்கிற சுயநலம்.. ஐ மீன், சங்நலமே அது. (குஜராத்தில், ஒரிஸ்ஸாவில், சிறுபான்மையினரை கொன்றொழிக்க ஏற்படுத்திக்கொண்ட காரணத்தை ஒப்பிட்டுப் பாருங்கள், விளங்கும்)


முஸ்லிம்களும், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள சமூக நல ஆர்வலர்களும் உணர்ச்சிவசப்பட்டு தினமலரின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமல்,நிதானமாக, தினமலரை எல்லாவகைகளிலும் புறக்கணிக்க வேண்டும்; பாடம் புகட்டவேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி: முதலில் இப்படியொரு சமூக விழிப்பூட்டும் பதிவிட்ட பிரபல பதிவர்கள் அபூமுஹை, & மரைக்காயர்.

Wednesday, December 26, 2007

மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்.

குஜராத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிறந்தப் பதிவாக கருதப்படுகிற நண்பன் ஷாஜியின் பதிவுக்கும், பனிமலரின் பதிவுக்கும் நானளித்த பின்னூட்டம் இது:

ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி.

எல்லோருமே எதிர்பார்த்த 'இந்த வெற்றி'யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் 'எதிர்பார்த்தவர்கள்' தான்.100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் போன்ற) பல காரணங்களால் வாக்களிக்காமலே இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.

வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.

கடும்குற்றவாளியாக தண்டனை பெறவேண்டியவர்கள் முதலமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் ஆவது நம் தேசத்தின் சாபக்கேடு ஆகும்.ஆ.வி ஆசிரியரை சிறைக்கு அனுப்பக் காரணமாயிருந்த கருத்துப்படத்தின் வரிகளில் ஜேப்படி, பிக்பாக்கெட் என்றிருந்தவற்றில் மட்டும் இனப்படுகொலைக்காரன், ஆலய இடிப்புக்காரன் என்று மாற்றிப் படிக்கும் நிலை நம் தாய்த்திருநாட்டில் உண்மையாகி வருவது நேர்மையுள்ள எவருக்கும் உவப்பாக இருக்க முடியாது.

மோடி செய்த இனப்படுகொலைகளை தவறிச்செய்த ஒன்றாக கருத இடமேயில்லை. தவறிச்செய்திருந்தால், குறைந்தபட்சம் உதட்டளவு மன்னிப்பாவது கேட்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ அந்தப்படுகொலைகளுக்காக ஒரு மிருகப் பெருமிதமே வெளிப்பட்டது. எனவே தயவுசெய்து பாலாக்கள் //தவறு தவறு தான்// என்று சொதப்பாமல், கொலைகாரர்களையும் தெரிந்தே எடுக்கும் ஜனநாயக ஓட்டைகளை அடைக்கும் வழிகளை யோசிக்கட்டும்.

மோடியாக இருந்தாலும், ஹெச்.கே.எல். பகத்தாக இருந்தாலும், நாம் சொல்வதெல்லாம் முதலில் குற்றங்களுக்கான உரிய தண்டனையையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மானசீக மன்னிப்பையோ பெறவேண்டும். அதன்பிறகே, தேர்தல் களம் காணமுடியும் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் ஜனநாயகம் அதன் பொருளை இழக்காதிருக்கும்.

Tuesday, January 16, 2007

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாய்.

பரபரப்பாக பேசப்பட்ட, தனக்கிழைக்கப்பட்ட பாலியல்கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய பாகிஸ்தானிய பெண். பாகிஸ்தானின் அழுக்கை வெளிநாடுகளில் அம்பலப்படுத்துவதாக அந்நாட்டு அதிபரால் செய்யப்பட்ட கண்டனத்தை மீறி நியாயத்துக்காகப் போராடியவர்.


பாகிஸ்தான்.

இஸ்லாமியக் குடியரசு (அ) இராணுவ அரசு என்று தன்னைப்
பிரகடனப்படுத்திக்கொண்டாலும், கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டிவைக்கும் கேணத்தனமான பஞ்சாயத்துத் தீர்ப்புகளை விடவும் மோசமான கட்டைப் பஞ்சாயத்துகள் அதிகமதிகம்
புழக்கத்தில் உள்ள நாடு.


முஸ்லிம் உலகம்.

தன் அடையாளத்தைப் பேணுவதில் உணர்ச்சி வசப்படும் அளவுக்கு அறிவு வசப்படுவதில்லை.ஆங்கிலேயன் எதிரி என்பதற்காக, ஆங்கிலத்தை ஆகாததாக்கி தன்னைத்தானே பின்னுக்குத் தள்ளிக்கொண்ட சமூகம். கடந்த காலத்தில் ஒலிப்பெருக்கி போன்ற விஞ்ஞான கண்டு பிடிப்புகளை 'தேவையற்றதாக' தனக்குத்தானே அளித்துக்கொண்ட தீர்ப்புகள் மூலம் தன் குரல் அமுங்கிப்போக தானே வழிவகுத்த அவலம். காட்டிக்கொடுத்தவர்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் நாட்டில் நாட்டின் உரிமையை காத்து நின்றும், இன்று தன் உரிமைகளுக்காக காத்துக்கிடக்கும் சமுதாயம்.


கூட்டு வன்புணர்வு என்கிற ஈனக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப் பெண் (முக்தரன் மாய்) நியாயம் கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகி முறையிட, ஒரு இஸ்லாமியக்குடியரசின் நீதிமன்றம் என்ன செய்திருக்கவேண்டும்? குர்ஆனிலோ, நபிவாழ்விலோ உள்ள அறிவுரைகள் அல்லது நடத்தைகளின் அடிப்படையில் தனது தீர்ப்பைச் சொல்லியிருக்க வேண்டும்.

வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டப் பெண்ணின் ஒரேஒரு சாட்சியத்தைக் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவரை (விசாரணைக்காக) பிடித்து வரச்சொன்ன ஒரு சம்பவம் நபிகளின் காலத்தில் நடந்ததை பதிவர் அபூ முஹை கூட ஒரு பதிவில் விளக்கியிருந்தார். அந்த அடிப்படையில் அப்பெண்ணின் ஒரே சாட்சியத்தை ஏற்று அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக DNA டெஸ்ட் போன்ற ஆதாரங்களினை மேற்கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். நடந்ததோ வேறு விதம்.

பெண் மீது சுமத்தப்படுகிற அவதூறு பற்றி விசாரிக்கும் போது நாலு சாட்சிகள் வேண்டும் என்கிற ஷரத்தை முன்னிட்டு.., ஒரு பெண் சில ஆண்கள் மீது சொன்ன குற்றச்சாட்டுக்கு பொருந்தாத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத்தகையத் தீர்ப்பின் பின்னணியில் அரசியலோ, ஆணாதிக்கமோ, அறிவீனமோ இருந்திருக்கலாம் என்பதை மறுக்க இயலாது.

தன் வீட்டுப்பெண்ணை வைத்து வீசப்படுகிற அவதூறுகளுக்கெதிராக கொதித்தெழுகிற முஸ்லிம் உலகம், தன் வீட்டுப்பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையான தீர்ப்புக்கெதிராக மெளனம் காத்து தன் இயலாமையை அம்பலப்படுத்திவிட்டது. கட்டாயம் கண்டிக்கப்படவேண்டிய மெளனம் இது. இத்தகைய தவறான தீர்ப்புகளே பிற்காலத்திற்கு முன்மாதிரிகளாகும் அபாயம் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் நியாயம் பெற அப்பெண் நாட்டைத் துறந்து செல்ல வேண்டிய நிலை வந்தது. முறையாக இஸ்லாத்தைப் பேணும் அநேக அமைப்புகளிருந்தும் அந்நாட்டில் இந்நிலை ஏற்பட்டதை என்னவென்று சொல்வது?

'பிழைகளும், ஆதிக்க உணர்வுகளும் எல்லா சமுதாயத்திலும் உள்ளது தான். ஆனால், 'எந்த சமுதாயம் தன்னைத்தானே திருத்திக்கொள்ள முன்வரவில்லையோ, அந்த சமுதாயத்திற்கு இறைவனும் உதவ மாட்டான்' என்பதை முஸ்லிம் உலகம், அதன் அறிஞர்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

அதுபோக, ஆணாதிக்கம் என்கிற அதிகாரப் போதைக்காகவோ, பெண்ணியம் என்கிற பேறு பேசவோ அல்லாமல், நியாயம் பேசுகிற நிதானத்தை முஸ்லிம் அறிஞர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

Tuesday, May 16, 2006

தமிழ்மணம் திரட்டி - சோதனைப்பதிவு.

தமிழ்மணம் திரட்டிக்கான சோதனைப்பதிவு.

Monday, November 14, 2005

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? ----- 2

முன் பதிவின் தொடர்ச்சி...

பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் என்ற பெயரில் அவர்கள் கருதப்படுகிறார்கள். என்னே ஒரு சமூக அவலம்! இன்று அங்கு திருமணம் புரிபவர்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவுக்கு குறைந்துபோய் விட்டது.

ஆக, மனிதன் தன் உடலியல் தேவைகளை எந்த ரீதியிலாவது நிறைவேற்றிக் கொள்ளவே செய்கிறான். அதை முறைப்படுத்துவதே இஸ்லாத்தின் நோக்கம். கட்டுப்பாடற்ற உறவுக்கு வழிவகுக்கும் சமுதாயங்களில்தான் பாலியல் நோய்கள் அதிக விகிதத்தில் காணப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட பலதாரமணம் ( Polygyny ) சமூகத்தை சீரழிக்கும் பாலியல் நோய்க்கு மாற்றாகவும் அமைய முடியும்.

பலதாரமணம் ( Polygyny) நாம் வாழும் சமுதாயத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது எனலாம். மேலைக் கலாச்சாரத்தில் , தனக்குத்தானே சட்டங்களை வகுத்துக் கொண்ட மனிதன் பலதார மணத்தை தடுக்கப்பட்ட ஒன்றாகவே வைத்துக் கொள்ள முயல்கிறான். காரணம் , முறையாக பலதாரமணம் செய்து கொள்ளும்போது மனைவியருக்கு அவர்களுடைய உரிமைகளைக் கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறான். அவளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கு செலவழிக்க வேண்டியது அவனது கடமையாகி விடுகிறது. இந்தக் கடமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பலதாரமணத்தை தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்கிறான். பலதாரமணத்தை தடை செய்வதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் கேள்விக்குறியாகவே ஆகிவிடுகிறது.

முறையற்ற உறவின் மூலம் பிறந்த பல இலட்சக்கணக்கான பிள்ளைகளின் எதிர்காலம் சூன்யமாகவே இருந்து வருகிறது. இத்தகைய பிள்ளைகள் தனது பிறப்புக்குக் காரணமானவர்களின் அரவணைப்புக் கிடைக்காததன் பின்ணணியில் தவறான பாதைக்கு திசை திருப்பப்பட்டு எதிர்காலத்தில் குற்றவாளிகளாக, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இதுவும் பலதாரமணத்தை சட்டபூர்வமாக்காததால் ஏற்படும் பாரதூரமான தீய விளைவுகளில் ஒன்று.

இதுதான் பலதாரமணத்தை ஆதரிக்கக் காரணமா? என்றால், இது மட்டுமல்ல. இதைவிட மிக முக்கிய இயற்கைக் காரணம் ஒன்று உண்டு. அதுதான் உலகில் ஆண்-பெண் விகிதத்தில் இயற்கையாக காணப்படும் சமச்சீரற்ற போக்கு. ஆண்-பெண் இறப்பு விகிதத்திலும் மனித சமுதாயத்தில் சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது.

உலகம் முழுவதும் பெண்களின் விகிதம் ஆண்களின் விகிதத்தை விட எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், (இஸ்லாமியக் கருத்துக்களை மறுத்துரைப்பவர்களின் ஊற்றுக்கண்ணாக அமெரிக்கா இருப்பதால் அதிலிருந்தே விளக்கத் தொடங்குவோம்) அங்கு ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 7.8 மில்லியன் அதிகமாகக் காணப்படுவதாக ஒரு புள்ளி விவரக் கணிப்பு கூறுகிறது. நியூயார்க் நகரில் மட்டுமே ஒரு மில்லியன் என்ற அளவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் விஞ்சி நிற்கிறார்கள். இவ்வாறு மிதமிஞ்சி இருக்கும் பெண்களுக்கு திருமண உறவின் மூலம் கணவர்களை அடையும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதிலும் அங்குள்ள ஆடவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓரினப்புணர்ச்சி (Sodomites ) கொண்டவர்களாக இருப்பதாக அப்புள்ளி விவரம் மேலும் கூறுகிறது. இத்தகைய ஆண்கள் திருமண உறவுக்கு பெண்களை நாடுவதில்லையென்பதால் இங்கும் அதிகப்படியாக இருக்கும் பெண்களுக்கு திருமணம் மூலம் ஆண் துணை கிடைப்பதில் தேக்கநிலை ஏற்படுகிறது. இத்தகைய நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது . பிரிட்டனில் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் , ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சார வேறுபாடு ரஷ்யாவில் இன்னும் அதிகமாக 9 மில்லியன் என்ற அளவில் இருந்து வருகிறது.

மேற்கண்ட நிலைகளில் ஒரு மாறுதலாக இந்தியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்கிறது. இதற்கும் ஒரு சமூக அவலமே காரணமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறப்பதை தனக்கு இடப்பட்ட சாபமாகக் கருதும் இந்திய சமூகம் சற்று காலத்திற்குமுன் வரை ஏராளமான பெண் குழந்தைகளை அவை கண்ணைத் திறந்து பார்ப்பதற்குள் மண்ணைத் தோண்டி புதைக்கும் அவலத்தினை அரங்கேற்றி வந்ததை நாமறிவோம். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் துணை கொண்டு கருவறையிலேயே அதற்கு கல்லறை கட்டுவதிலும் இந்தியாவே முன்ணணியில் நிற்கும் கொடுமையும் நாமறிந்ததே.

அப்படியானால் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கலாமே என்று குதர்க்கமாக சிலர் வாதம் செய்யலாம். ஆனால் , இத்தகைய திருமணம் விபச்சாரத்தின் மறுவடிவமாகத்தான் இருக்க முடியும். குழந்தை தன் தாயிடம் தனது தந்தை யாரென கேட்கும்போது , இதோ இவர்தான் உன் தந்தை; அல்ல.. அல்ல.. அதோ அவர்தான் உன் தந்தை; அல்லது வேறொருவராகக் கூட இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். இத்தகைய அவல நிலையை எந்த மகன் அல்லது மகள் விரும்ப முடியும் ? No one can wishes good for mankind except the Creator of the mankind.

உலகில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்பதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. பொதுவாக ஆணும், பெண்ணும் இயற்கையில் சமமாகவே பிறந்து வந்தாலும், மனித சமுதாயத்தில் பெண்ணினத்தின் நோய் எதிர்ப்புத் திறன் ஆணினத்தின் நோய் எதிர்ப்புத் திறனை விட மிக அதிகம். இதன் காரணமாகவே , குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படுகிறது. வயது முதிர்ந்த பருவத்திலும் கூட இதே நிலையே காணப்படுகிறது. நம்மைச் சுற்றி நோக்கினால் , தாத்தாக்களை விட பாட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காண முடியும்.

பெண்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதற்கு வரலாற்று நெடுகிலும் நடைபெற்று வரும் போர்களும் மற்றுமொரு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. போர்களில் அதிகம் ஈடுபடுவதும், அதில் இறந்து போவதும் ஆண்களாகவே இருக்கிறார்கள். நவீன காலப் போர்களில் பெண்களும் பங்கு வகிக்கவே செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் விகிதாச்சாரம் மிகக் குறைந்த அளவாகவே காணப்படுகிறது. இவ்வாறு போர்களில் கொல்லப்படும் ஆண்களின் விதவைகளுக்கு இந்த சமுதாயம் காட்டும் தீர்வு என்ன? திருமணமாகாத ஆண் துணையைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தகைய பெண்களுக்கு இருவித வாய்ப்புகள் மட்டுமே காணப்படுகிறது. ஒன்று, அவர்கள் ஏற்கனவே திருமணமான ஆணுக்கு மற்றொரு மனைவியாக சம்மதிப்பது ; அல்லது விபச்சாரத்தைத் தேர்ந்தெடுப்பது. இதில் கண்ணியமான பெண்கள் முதலாவதையே தேர்ந்தெடுப்பார்கள்.

இத்தகைய ஒரு சூழ்நிலைதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் ஏற்பட்டது. நேசநாடுகள் ஜெர்மனியை வெற்றி கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோது , அங்கு 73 இலட்சம் பெண்கள் அனாதையாகிப் போனார்கள். அதில் 33 இலட்சம் பெண்கள் போரில் கொல்லப்பட்டவர்களின் விதவைகள். அந்த நேரத்தில் ஜெர்மனியில் 20-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களில் 167 பெண்களுக்கு 100 ஆண்கள் என்ற விகிதத்திலேயே இருந்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வல்லமையை நிரூபிப்பதற்காக ஏற்பட்ட போரில் வாழ்க்கையை இழந்த ஏராளமான இளம் பெண்களும், விதவைகளும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்களிடம் சில ரொட்டித் துண்டுகளுக்காக தன் கற்பை விலை பேசிய அவலத்தையும் வேதாந்தம் பேசும் இவ்வுலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது.

இஸ்லாம் அரேபியாவில் பரவத் துவங்கிய காலத்திலேயே பலதாரமணத்தை ( Polygyny) அனுமதித்ததற்கு இதுபோன்ற ஒரு சூழ்நிலையே காரணமாக அமைந்தது. இஸ்லாம் தன் ஒளியைப் பரப்பத் துவங்கியபோது அதன் மீதும், அதனாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்களால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் அனாதரவாக நிற்க, அவர்களைக் கைப்பற்றிய எதிரிகள் தம் விருப்பம்போல் அவர்களைப் பாவிக்கலாயினர்.

முஸ்லிம் தரப்பு ஆண்களில் பலபேர் போருக்குச் சென்று மடிந்துவிட, உறவினர்களே எதிரிகளாக இருந்த அந்தக் காலகட்டத்தில், அவர்களுடைய பெண்டிர் திக்கற்று நின்றனர். அதே வகையில், கொல்லப்பட்ட எதிரிகளின் பெண்டிரும் கைதிகளாய் பிடிபட்டு நிற்க, அவர்களைத் தங்க வைக்க ஜெயிலோ, கண்காணிக்க ராணுவமோ, போலீஸ் படையோ, வழக்குகளை விசாரிக்க கோர்ட்டுகளோ, நீதிபதிகளோ, உணவு, உடை அளிக்க பொது நிதியோ இல்லாத காலம். போரில் அதிக ஆண்கள் இறந்து பட்டதால் பெண்களே அளவுக்கு மேல் மிகைத்திருந்த காலம். இத்தகைய சூழ்நிலையின் பின்ணணியில்தான் பரிகாரமாக பலதாரமணம் ( Polygyny ) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆதரவற்று நிற்கும் இத்தகைய பெண்களை பலதாரமணம் கொண்டு அரவணைக்க வேண்டுமா ? அல்லது சமூகச் சீர்கேடுகளின் பக்கம் நெட்டித்தள்ள வேண்டுமா ?
இப்போது சொல்லுங்கள். பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

Tuesday, November 08, 2005

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?


இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 'பலதாரமணம் ' (Polygyny) உள்ளது.

உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக 'பலதாரமணம் ' (Polygyny) என்பதும் இருக்கிறது. எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு கடினமான சப்ஜெக்ட் அல்ல. பலதாரமணத்தின் நோக்கத்தையும் , அது செயல்படுத்தப்படுவதின் காரண காரியத்தையும் விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் சிரமமான ஒன்றல்ல.

மேலும் ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் , எந்த சமூகத்தை நோக்கி பலதாரமண எதிர்ப்பு என்ற ஆயுதம் வீசப்படுகிறதோ அந்த சமூகத்தில் மற்ற சமூகங்களை விட பலதாரமணம் குறைவான சதவீதத்திலேயே இருந்து வருவதுதான். மற்ற சமுதாயத்தவரால் 'வைத்து 'க் கொள்ளப்படுகிற பெண்களின் எண்ணிக்கை கணக்கிடப்படாமல் போவதும் , முஸ்லிம்களால் சட்டபூர்வமாக (மிகக் குறைந்த சதவீதத்திலிருந்தபோதும்) மனைவியாக்கிக் கொள்ளப்படுபவள் முறையான கணக்கெடுப்பில் சேர்ந்து விடுவதும்தான் இந்த சமுதாயத்தை இந்த விஷயத்தில் முன்னிறுத்தி விடுகிறது. தன் முதுகில் இருக்கும் பெரிய வடுவை விட அடுத்தவன் முகத்தில் இருக்கும் சிறிய மச்சம் எளிதில் பார்வைக்கு கிடைப்பது போல்தான் இதுவும்.

முதலில் பலதாரமணத்தின் அடிப்படையையும் , வரலாற்றில் அதன் ஆளுமையையும் புரிந்து கொள்வது நல்லது.

பலமணம் ( Polygamy) என்பது இரு வகைப்படும். ஒரு ஆண் பல மனைவியரைக் கொண்டிருப்பது இதில் முதல் வகை. அதற்கு ஆங்கிலத்தில் Polygyny என்று பெயர். ஒரு பெண் பல கணவன்களைக் கொண்டிருப்பது இரண்டாவது வகை. இதனை ஆங்கிலத்தில் Polyandry என்று சொல்வார்கள். ஐந்து ஆண்களை கணவர்களாகக் கொண்டிருந்த மஹாபாரதக் கதையின் நாயகி பாஞ்சாலியையும் , விவாகரத்து பெறாமலே அடுத்தடுத்து ஆண்களைத் திருமணம் புரிந்து கொள்ளும் மேற்கத்திய கலாச்சார யுவதிகளையும் இரண்டாவது வகைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.மேற்கண்ட இரு வகைகளில் முதல்வகை மட்டுமே இஸ்லாத்தில் நிபந்தனையோடு ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது வகையானது பெண்ணுரிமை பேசும் இன்றைய புரட்சிப் பெண்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது தெளிவு.இந்த பலதாரமணம் ( Polygyny) என்பது அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான பிறகுதான் இவ்வுலகில் நடைமுறைக்கு வந்தது என்று கூறுவது வரலாற்று அபத்தம். இதற்கு மாறாக வரலாற்றில் தொன்று தொட்டு பலதாரமணம் வழக்கிலிருந்து வந்தது என்பதுதான் உண்மை. ஆப்ரஹாம் மூன்று மனைவிகளையும் , சாலமன் நூற்றுக்கணக்கான மனைவிகளையும் பெற்றிருந்ததை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. யூத மதத்தில் கூட Gersham ben yehudah என்ற மதகுரு அதற்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெளியிடும் வரை ஆண்களின் பலதாரமணம் நடைமுறையில் இருந்தே வந்திருக்கிறது. இந்துக்களின் வேதங்களில் குறிப்பிடப்படும் ராமனின் தந்தை தசரதன் பல மனைவிகளைக் கொண்டிருந்ததாகவும் , இந்துக்களின் கடவுளாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும் அவர்களின் வேதங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.' இஸ்லாத்தில் பெண்களின் நிலை' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்த ஒரு இந்திய கமிட்டி , 1975 -ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது: " 1951 முதல் 1961 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் நடைபெற்ற பலதாரமணங்களில் , முஸ்லிம்களிடையே நடைபெற்றவை 4.31 சதவீதமாகவும், இந்துக்களிடையே நடைபெற்றவை 5.06 சதவீதமாகவும் இருந்தது". இந்தியாவில் முஸ்லிம்களைத் தவிரவுள்ள யாவருக்கும் பலதாரமணம் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும்கூட முஸ்லிம்களை விட இந்துக்களே பலதாரமணத்தில் முன்ணணியில் நிற்பதைத்தான் மேற்கண்ட கணக்கெடுப்பு சுட்டுகிறது. 1954-ல் இந்திய நாடாளுமன்றம் 'ஹிந்து திருமணச் சட்டம்' என்ற ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தும்வரை இந்துக்களிடையே பலதாரமணம் இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கிறது. இன்றும்கூட, இந்திய சட்டத்தில் மட்டுமே இந்துக்களின் பலதாரமணம் தடை செய்யப்பட்டிருக்கிறதேயொழிய அவர்களின் வேதங்களில் அவையொன்றும் தடுக்கப்படவில்லை.

இஸ்லாம் ஒன்றும் பலதாரமணத்தை கட்டுப்பாடற்ற ஒன்றாக திறந்து விட்டு விடவில்லை. மனிதனின் உணர்வுகளையும் , சமச்சீரற்ற ஆண்-பெண் விகிதாச்சாரத்தையும் , அதனால் ஏற்படக்கூடிய சமூகக் குழப்பங்களையும் கருத்திற் கொண்டே இஸ்லாம் பலதாரமணத்தை வாய்ப்பளித்திருந்தாலும் கூட அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தவறவில்லை.

உலகப் பொதுமறை அல்-குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது:

" அனாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னாங்காகவோ ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள்- இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

(அத்தியாயம் 03 ; வசனம் 04)

பலதாரமணத்தை ஆகுமாக்கிக் கொள்ள இஸ்லாம் விதிக்கும் முதல் கட்டுப்பாடு மனைவியரிடையே நீங்கள் நீதமாக நடக்க வேண்டும் என்பது. அது உங்களால் இயலவில்லையென்றால் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறுகிறது. மனிதன் இயற்கையிலேயே ஆசையின் வழி நடக்கும் பலவீனமான மனங்கொண்டவன் என்பதாலேயே மனைவியரிடையே அவனால் முழுவதும் நீதமாக நடக்க முடியாது என்பதையும் அல்-குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது.

" நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்துதல் சாத்தியமாகாது. ஆனால் , (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள் ; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால் , நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் , மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்".

(அத்தியாயம் 04; வசனம் 129)

எனவே , பலதாரமணம் ( Polygyny) இஸ்லாத்தில் கட்டாயமாக விதிக்கப்பட்டதோ அல்லது வலியுறுத்தப்பட்டதோ அல்ல; அனுமதியளிக்கப்பட்ட ஒன்று மட்டுமே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் திருமணம் புரிவதும், பிரம்மச்சாரியாக வாழ்வதும் எப்படி அவனது விருப்பத்தின்பாற்பட்டதோ, அதுபோலவே அவன் ஒரு பெண்ணைத் திருமணம் புரிவதும், நான்கு பெண்களைத் திருமணம் புரிவதும் இஸ்லாத்தின் பார்வையில் தனிமனிதனின் விருப்பத்தின்பாற்பட்டதே. பலதாரமணத்தை கடுமையாகவும், கண்மூடித்தனமாகவும் விமர்சித்து வரும் இன்றைய சமூகத்தில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி ஒழுக்க வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பது எந்த வகை நியாயம் என்பது விளங்கவில்லை.

முதல் வகையில் ஒரு பெண் தனது அனைத்து உரிமைகளையும் தன்னை மணக்கும் கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வது சட்டபூர்வமாக்கப் படுகிறது. இரண்டாம் வகையிலோ , அந்தப் பெண் தன்னிடம் 'வந்து' போகிற ஆண்களிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது. அத்தோடல்லாமல், அந்தப் பெண் சமூகத்தில் மதிப்பிழந்தும், பல்வேறு நோய்களின் காப்பகமாகவும் ஆகி விடுகிறாள். இதில் எது பெண்களுக்கு சுதந்திரத்தையும் , உரிமையையும் பெற்றுத் தருகிறது என்பதை நியாயவான்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இனி, பலதாரமணத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் ஏன் சரி காண்கிறோம் என்பதைப் பார்ப்போம்.
(தொடர்வேன், இன்ஷா அல்லாஹ்)