Wednesday, December 26, 2007

மோடியின் வெற்றியும் அதில் மகிழ்பவர்களும்.

குஜராத் தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி பலரும் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிறந்தப் பதிவாக கருதப்படுகிற நண்பன் ஷாஜியின் பதிவுக்கும், பனிமலரின் பதிவுக்கும் நானளித்த பின்னூட்டம் இது:

ஜனநாயகம் என்பது பணபலமும் படைபலமும் தான், சாமானியனுக்கு அதில் பங்கில்லையோ என்று எண்ண வைத்தது மோடியின் தேர்தல் வெற்றி.

எல்லோருமே எதிர்பார்த்த 'இந்த வெற்றி'யில் புளகாகிதமடைந்து பதிவிடுபவர்களும் நாம் 'எதிர்பார்த்தவர்கள்' தான்.100க்கு 41 பேர் (விருப்புவெறுப்பு, பயம், விரக்தி, அலட்சியம் போன்ற) பல காரணங்களால் வாக்களிக்காமலே இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும்.

வாக்களித்த 59ம் சிதற 59ல் பெரும்பான்மை, நிச்சயம்30%க்கு குறைவான வாக்குகளைப் பெற்றவரே வென்றதாகச் சொல்வது முறையான ஜனநாயகமா?கொலை, கொள்ளைக்காரர்கள், சினிமாகவர்ச்சி ஆகியன வெல்வதாகத்தெரிவது இதனால் தான்.(இதற்காகத்தான் தேர்தல் அமைப்பை மாற்றியமைக்கச் சொல்கிறோம்).அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் அமைப்பை மாற்றியமைத்தால், மோடிகள் தங்களுக்குண்டான 30% கும் குறைவான குண்டர்களுடன் தோல்வியையே தழுவ வேண்டியிருந்திருக்கும்.

கடும்குற்றவாளியாக தண்டனை பெறவேண்டியவர்கள் முதலமைச்சராகவும்,உள்துறை அமைச்சராகவும் ஆவது நம் தேசத்தின் சாபக்கேடு ஆகும்.ஆ.வி ஆசிரியரை சிறைக்கு அனுப்பக் காரணமாயிருந்த கருத்துப்படத்தின் வரிகளில் ஜேப்படி, பிக்பாக்கெட் என்றிருந்தவற்றில் மட்டும் இனப்படுகொலைக்காரன், ஆலய இடிப்புக்காரன் என்று மாற்றிப் படிக்கும் நிலை நம் தாய்த்திருநாட்டில் உண்மையாகி வருவது நேர்மையுள்ள எவருக்கும் உவப்பாக இருக்க முடியாது.

மோடி செய்த இனப்படுகொலைகளை தவறிச்செய்த ஒன்றாக கருத இடமேயில்லை. தவறிச்செய்திருந்தால், குறைந்தபட்சம் உதட்டளவு மன்னிப்பாவது கேட்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கோ அந்தப்படுகொலைகளுக்காக ஒரு மிருகப் பெருமிதமே வெளிப்பட்டது. எனவே தயவுசெய்து பாலாக்கள் //தவறு தவறு தான்// என்று சொதப்பாமல், கொலைகாரர்களையும் தெரிந்தே எடுக்கும் ஜனநாயக ஓட்டைகளை அடைக்கும் வழிகளை யோசிக்கட்டும்.

மோடியாக இருந்தாலும், ஹெச்.கே.எல். பகத்தாக இருந்தாலும், நாம் சொல்வதெல்லாம் முதலில் குற்றங்களுக்கான உரிய தண்டனையையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் மானசீக மன்னிப்பையோ பெறவேண்டும். அதன்பிறகே, தேர்தல் களம் காணமுடியும் என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் ஜனநாயகம் அதன் பொருளை இழக்காதிருக்கும்.

Tuesday, January 16, 2007

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாய்.

பரபரப்பாக பேசப்பட்ட, தனக்கிழைக்கப்பட்ட பாலியல்கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய பாகிஸ்தானிய பெண். பாகிஸ்தானின் அழுக்கை வெளிநாடுகளில் அம்பலப்படுத்துவதாக அந்நாட்டு அதிபரால் செய்யப்பட்ட கண்டனத்தை மீறி நியாயத்துக்காகப் போராடியவர்.


பாகிஸ்தான்.

இஸ்லாமியக் குடியரசு (அ) இராணுவ அரசு என்று தன்னைப்
பிரகடனப்படுத்திக்கொண்டாலும், கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டிவைக்கும் கேணத்தனமான பஞ்சாயத்துத் தீர்ப்புகளை விடவும் மோசமான கட்டைப் பஞ்சாயத்துகள் அதிகமதிகம்
புழக்கத்தில் உள்ள நாடு.


முஸ்லிம் உலகம்.

தன் அடையாளத்தைப் பேணுவதில் உணர்ச்சி வசப்படும் அளவுக்கு அறிவு வசப்படுவதில்லை.ஆங்கிலேயன் எதிரி என்பதற்காக, ஆங்கிலத்தை ஆகாததாக்கி தன்னைத்தானே பின்னுக்குத் தள்ளிக்கொண்ட சமூகம். கடந்த காலத்தில் ஒலிப்பெருக்கி போன்ற விஞ்ஞான கண்டு பிடிப்புகளை 'தேவையற்றதாக' தனக்குத்தானே அளித்துக்கொண்ட தீர்ப்புகள் மூலம் தன் குரல் அமுங்கிப்போக தானே வழிவகுத்த அவலம். காட்டிக்கொடுத்தவர்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் நாட்டில் நாட்டின் உரிமையை காத்து நின்றும், இன்று தன் உரிமைகளுக்காக காத்துக்கிடக்கும் சமுதாயம்.


கூட்டு வன்புணர்வு என்கிற ஈனக்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப் பெண் (முக்தரன் மாய்) நியாயம் கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகி முறையிட, ஒரு இஸ்லாமியக்குடியரசின் நீதிமன்றம் என்ன செய்திருக்கவேண்டும்? குர்ஆனிலோ, நபிவாழ்விலோ உள்ள அறிவுரைகள் அல்லது நடத்தைகளின் அடிப்படையில் தனது தீர்ப்பைச் சொல்லியிருக்க வேண்டும்.

வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டப் பெண்ணின் ஒரேஒரு சாட்சியத்தைக் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவரை (விசாரணைக்காக) பிடித்து வரச்சொன்ன ஒரு சம்பவம் நபிகளின் காலத்தில் நடந்ததை பதிவர் அபூ முஹை கூட ஒரு பதிவில் விளக்கியிருந்தார். அந்த அடிப்படையில் அப்பெண்ணின் ஒரே சாட்சியத்தை ஏற்று அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக DNA டெஸ்ட் போன்ற ஆதாரங்களினை மேற்கொண்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். நடந்ததோ வேறு விதம்.

பெண் மீது சுமத்தப்படுகிற அவதூறு பற்றி விசாரிக்கும் போது நாலு சாட்சிகள் வேண்டும் என்கிற ஷரத்தை முன்னிட்டு.., ஒரு பெண் சில ஆண்கள் மீது சொன்ன குற்றச்சாட்டுக்கு பொருந்தாத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அத்தகையத் தீர்ப்பின் பின்னணியில் அரசியலோ, ஆணாதிக்கமோ, அறிவீனமோ இருந்திருக்கலாம் என்பதை மறுக்க இயலாது.

தன் வீட்டுப்பெண்ணை வைத்து வீசப்படுகிற அவதூறுகளுக்கெதிராக கொதித்தெழுகிற முஸ்லிம் உலகம், தன் வீட்டுப்பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமையான தீர்ப்புக்கெதிராக மெளனம் காத்து தன் இயலாமையை அம்பலப்படுத்திவிட்டது. கட்டாயம் கண்டிக்கப்படவேண்டிய மெளனம் இது. இத்தகைய தவறான தீர்ப்புகளே பிற்காலத்திற்கு முன்மாதிரிகளாகும் அபாயம் இருக்கிறது.

இந்த விவகாரத்தில் நியாயம் பெற அப்பெண் நாட்டைத் துறந்து செல்ல வேண்டிய நிலை வந்தது. முறையாக இஸ்லாத்தைப் பேணும் அநேக அமைப்புகளிருந்தும் அந்நாட்டில் இந்நிலை ஏற்பட்டதை என்னவென்று சொல்வது?

'பிழைகளும், ஆதிக்க உணர்வுகளும் எல்லா சமுதாயத்திலும் உள்ளது தான். ஆனால், 'எந்த சமுதாயம் தன்னைத்தானே திருத்திக்கொள்ள முன்வரவில்லையோ, அந்த சமுதாயத்திற்கு இறைவனும் உதவ மாட்டான்' என்பதை முஸ்லிம் உலகம், அதன் அறிஞர்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

அதுபோக, ஆணாதிக்கம் என்கிற அதிகாரப் போதைக்காகவோ, பெண்ணியம் என்கிற பேறு பேசவோ அல்லாமல், நியாயம் பேசுகிற நிதானத்தை முஸ்லிம் அறிஞர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.