Thursday, March 24, 2005

விவாதங்கள் விவாதங்களாகவே..

இஸ்லாம் குறித்த என்னுடைய ஒரு பதிவுக்குப்பின் அக்பர் பாட்சாவின் 'இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்'பதிவும் அப்துல்லாஹ்வின் 'வாருங்கள் விவாதிக்கலாம்' பதிவும் நேசகுமாரின் 'விவாதங்களும் சில விளக்கங்களும்'கூடப் படித்தேன். இந்நிலையில் என்கருத்து இது தான்:

யாரும் யாரையும் தாக்காமல் எங்கிருந்தோ கிடைத்த/கிடைக்கிற; படித்த/படிக்கிற அவதூறுகளை அள்ளி வீசாமல் அழகிய ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்கித் தொடர்ந்து எழுதி வரலாம். நிறைய விஷயங்கள் தெளிவாகும் நிறையப்பேருக்கு!
மாதிரிக்கு:
1).கடவுள் கொள்கை எப்படி இருந்தால் நலம்?
2).பர்தா எது - அது அவசியமா?
3).இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களும் பாதிப்புகளும்!
4).தீண்டாமைத் தீண்டலுக்கு சமூகப் பின்னணி என்ன? தீர்வுதான் என்ன? 5).இளம்பெண்துறவுகளின் சாத்தியங்களும் சங்கடங்களும்!
6).மதங்களும் அவை கட்டமைக்கும் சமூக ஒழுக்கங்களும்!
7).சமூகத்தைப் பீடித்துள்ள பயங்கரவாத வியாதிகள் ஏன்? நிவாரணம் என்ன? அரசும் சமூகமும் இதில் (பயங்கரவாத ஒழிப்பில்) எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுகின்றன? –
8). இஸ்லாத்தில் தூதர் கடவுளாகக் கருதப்படுவதில்லை யென்பது - என்று நிறைய விஷயங்களை அழகாக ஆரோக்கியமாக விவாதிக்கலாமே?

நேசக்குமார் ஏன் எதிர்மறைப் பார்வை என்றப்பெயரில் 'சகதியில் புழுத்து கிடக்கும் முகம்' என்றும் 'ரவுடி' என்றும் முஸ்லிம்களின் புனிதங்கள் மீது அவதூறுகளைப் பெய்தும் காழ்ப்புணர்வைக் கொட்ட வேண்டும்?

காழ்ப்புணர்வைக் காட்டுவதுதான் நோக்கம் என்றால்; அதைக் கொண்டுத் தான் மன அரிப்பை சொறிந்துக்கொள்ள முடியும் என்றால் விவாதம் என்று ஒரு அழகிய நாகரீக முகமூடி எதற்கு? உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தி நோக்கத்துக்கேற்ப நேர்மையாக செயல் படலாமே?.இரட்டை மனநிலைப்பாடு நயவஞ்சகத்தனமல்லவா? விமர்சனம் என்றப் பெயரில் யாரும் யார் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவது விபரீதமல்லவா? இது மேலும் மேலும் இடைவெளிகளைத்தானே அதிகப்படுத்தும்.

இப்போதும் நேச குமார்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் விவாதங்களைத் தொடருங்கள் என்றுத்தான் -விவாதம் என்பதின் சரியான அர்த்தத்தில். - காய்த்தல் உவத்தல் இன்றி!.

Saturday, March 19, 2005

இஸ்லாம் - பார்வைகளும் கோணங்களும்

இஸ்லாம் குறித்து சகோதரர்'நேச' குமாரும் எதிர்வினையாக முஸ்லிம் சகோதரர்களும் பதிகிற வலைப்பதிவுகளை அவதானித்தே வருகிறேன். என் கருத்துக்களைப் பதியும் எண்ணம் அவ்வப்போது தோன்றினாலும் என் சிற்றறிவு கருதியே சும்மா இருந்து வந்தேன். தவிர, இந்த ப்பதிவுகளிலிருந்து என் மூளைக்கும் நல்ல தீனி கிடைத்தது.

'நேச' குமாரின் பதிவுகளில் புத்திசாலித்தனமான எழுத்து வெளிப்படுகிறது. அது மழுப்பலாகவே இருந்தாலும். (அதற்காக, மற்ற சகோதரர்கள் புத்திசாலித்தனமற்றவர்கள் என்று அர்த்தமில்லை). தன்னுடைய கேள்விகளுக்கு பிறர் எதிர்கேள்வி எழுப்பும் போது அதை லாகவமாக தாண்டிச்சென்று விடுகிற அல்லது வேறொரு விவாதத்தின் மூலம் மறக்கடித்து விடுகிற 'சாமர்த்தியம்' 'நேச' குமாருக்கு நிரம்பவே இருக்கிறது. (அவருடைய இலக்கிய பின்புலம் காரணமாக இருக்குமோ?).

உதாரணத்துக்கு, 'நபிகள் காலத்திலேயே ஆன்மிக இஸ்லாம் பின்தள்ளப்பட்டு அரசியல் இஸ்லாம் முன்னிலைப்படுத்தப்பட்டது' என்கிற அவருடைய அனுமானத்துக்கு நபிகாலத்து ஆதாரம் தரும்படி அப்துல்லா என்பவர் கேட்டிருக்க....... அதை மறக்கடிக்கும் விதமாக....... 'இஸ்லாம் என்ன செல்லப்பிள்ளையா?' என்று தனது சமீபத்திய பதிவில் அங்கலாய்த்திருக்கிறார். தமிழக அளவில் இல்லாவிட்டாலும் உலக அளவில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டது இஸ்லாமும் அதன் நபியும் தான் என்பதை அவர் அறியமாட்டாரா..? நிச்சயம் அறிவார். ஆனால் 'செல்லப்பிள்ளையா அது.....?' என்று கேட்பதன் மூலம் - அறியாத சில வாசகர்களையாவது 'அதானே..' என்று சொல்ல வைத்து விடலாம் என்று நினைத்த மனோ தத்துவ எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. அத்துடன் தான் கேட்ட கேள்வியை தானே மறுத்து ' இல்லை.... செல்லப்பிள்ளையில்லை... ஆனால் பயம்!' என்று நிறுவ முயல்கிறார்.

இன்னொரு உதாரணமாக...... நபிகளின் சொந்த வாழ்க்கைப் பற்றி எங்கோ தான் படித்தவற்றை அவர் தன் 'அறிவு' வாதமாக வெளிப்படுத்த..... அபூ முஹை என்பவரும் சலாஹுத்தீனும் நல்ல சஹீஹான ஹதீஸ் – விமர்சிப்பதற்கென்றே இட்டுகட்டப்பட்ட ஹதீஸ் என்பது குறித்து தெளிவான பாடம் எடுத்திருந்தனர். அதையெல்லாம் 'நேச' குமார் படித்துப் புரிந்து ஏதேனும் விளக்கம் கேட்டாரா என்றால் இல்லை..! அவரைப்பொறுத்தவரை 'எதையோ' திசைத்திருப்புவதற்காகத் தான் ஏற்றிவைத்த விவாத நெருப்பு எரிந்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே உடனே வேறு ஒரு கேள்விக்கு தாவி விடுவார்.

ஒரு மதத் தலைவருடைய விஷயத்தில் 'இந்துக்களே! (பிராமணர்களைத்தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்) இப்போது தான் நீங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்' என்று அவர் எழுதிய போதே அவருடைய பின்புலம் வெளிப்பட்டு விட்டது என்பது என் கருத்து - இப்போது என்ன தான் 'பெரியாரை நான் முழுமையாக நிராகரிக்கவில்லை' என்று முழுப் பூசணியை எழுத்தில் மறைக்கப்பார்த்தாலும்!.

'அப்படியானால்.... நாங்கள் இஸ்லாம் பற்றி விமர்சிக்கவே கூடாதா...' என்பது 'நேச' குமாருடைய அங்கலாய்ப்பு என்றால் தாராளமாக விமர்சிக்கலாம். சரஸ்வதியை கலையின் பேரால் கொச்சைப்படுத்திய ஹூசைனுக்கு என்ன தண்டனை ? என்று கேட்கலாம். 'பிற மத கடவுள்களை ஏசவோ இழிவுப்படுத்தவோ செய்யாதீர்கள்' என்று போதிக்கிற சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிற முஸ்லிம்கள், ஹூசைனுக்கு தாமே அதிகபட்ச தண்டனைக்கு அரசைப் பரிந்துரைத்திருக்க க்கூடும்

ஆனால் கூடவே மாட்டுத்தோலுக்குப் பகரமாக 5 தலித்துகளை கொலை செய்த கொடியவர்கள் குறித்தும் சுதந்திரத் திருநாட்டிலும் திண்ணியங்களும் மேல வளவுகளும் 'மனு'வின் பேரால் தொடர்வது குறித்தும் உங்கள் பேனா கண்ணீர் சிந்தியிருந்தால் உங்கள் நடுநிலை 'மணம்' இந்த அளவுக்கு நாறாது. பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும் அடக்குமுறை நடந்தாலும் சரியான முஸ்லிம்கள் எதிர்க்கத்தானே செய்வர்.இதில் ஆச்சர்யப்படுவதும் - ஏன் எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்புவதும் எதை மறைக்க....?
தன் இனம் சரியாக நடந்து வரும் போது அதை ஆதரிப்பது தவறில்லை என்று சொன்ன நபிகள் நாயகம் தன் இனம் தவறாக நடந்துக் கொள்ளும் போதும் அதை ஆதரிப்பதுகூடாது-அது அழிவுக்குத்தான் வழி வகுக்கும். அது தான் இனவெறி -- முந்தைய சமுதாயங்கள் இதன் காரணமாகவே அழிந்தன' என்றும் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

நபிகள் நாயகத்தை டீசண்டான படமாக வரைந்தால் கூட ஓவியர் ஹுசைனை கொலை செய்ய மசூதிகளின் மாடங்களிலிருந்து இறைக்கட்டளை விதிப்பர் என்று அங்கலாய்க்கிற 'நேச' குமாருடைய கவனத்துக்கு ஒரு செய்தி:

அமெரிக்க அரசு நல்ல சிந்தனையாளர்களை கவுரவிக்கும் நன் நோக்கோடு, உலகின் சிறந்த சட்டங்களை வகுத்தளித்தவர்கள் என்று பத்து பேருக்கு தன்னுடைய நாட்டின் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் சிலையை நிறுவி கவுரவித்தவற்றுள் நபிகள் நாயகத்தின் சிலையும் ஒன்று! -ஆனால் முஸ்லிம்கள் இந்த 'கவுரவத்தை' ஏற்றுக்கொள்ளாமல் அமைதியாக உலகமெங்கும் புரட்சி செய்தனர்.சென்னையில் கூட நடந்தது. (அப்போது தான் நானும் அறிவேன்). 'என்னை அளவுக்கு அதிகமாக புகழாதீர்கள்' என்றே வலியுறுத்தி வந்த நபிகளின் வழிமுறைப்பேணும் முஸ்லிம்கள் அப்படித்தான் நடந்துக்கொள்வார்கள். இந்தச் செய்தி நேச குமாருக்கு தெரியாதிருக்காது. ஆனால் இதையெல்லாம் அவர் எழுத மாட்டார். காரணம் அவர் ஏற்றுக்கொண்ட 'கடமை' இதுவல்ல! (அந்தச் சிலை அகற்றப்பட்டதா என்பதை வாசகர்கள் அறியத்தரவும்).

அழித்தொழிக்கப்பட்ட அரபு பாகன்களுக்காக கண்ணீர் சிந்த முன் வருகிற 'நேச' குமாரைப் பாராட்டுகிறேன். அதேசமயம் இஸ்லாத்தின் கையில் வந்த வாள் ஏந்தப்பட்டதல்ல திணிக்கப்பட்டது என்பதையும் (வரலாற்றை அறிந்து) தெளிவுப்படுத்துங்கள். பேராசியர் ராமகிருஷ்ண ராவ்களும் - கவிக்குயில் சரோஜினி நாயுடுக்களும் உங்களுக்கு உதவக்கூடும்.

முஸ்லிம்களின் பயங்கரவாத செயல்கள் குறித்து எழுதும்போது உங்கள் பேனாவுக்கு பயங்கர வாதத்தை எதிர்க்கிற அனைவரும் - முஸ்லிம்கள் உட்பட – ஆதரவு தருவார்கள். ஆனால் 'எவனொருவன் ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற குற்றத்துக்கு ஆளாவான்' என்று சொல்கிற குர்ஆனையே அதற்கு (பயங்கர வாதத்துக்கு) காரணம் காட்டாதீர்கள். (வேடிக்கை என்னவென்றால் - உங்கள் பார்வையில் இஸ்லாம் ஒரு ரவுடி. மற்றவர்கள் 'அடக்க ஒடுக்கமான பெண்'.) பயங்கர வாதத்தை எதிர்க்கும் போது தீர்வு தேடி பயணிக்கிறது போலத் தோன்றும் எழுத்து அபத்தமான காரணத்தை சுட்டும் போது அறிந்தவர்களால் நகைக்கப்படுகிறது. ஒரு நல்ல பேனா சொறிந்து கொடுப்பதற்கு 'வாங்கி'க் கொள்ளப்பட்டதும் விளங்கிக் கொள்ளப்படுகிறது.

நபிகள் காலத்திலும் கஃபா ஆலயம் கைக்கு வந்த பின்னும் கூட பாகன்களை கஃபா செல்ல தடை செய்யவில்லை. (ஹூதைபியா உடன்படிக்கை). முற்றுமாக முஸ்லிமான தேசத்தில் தான் மக்கள் பழைய மூடநம்பிக்கைகளை மறக்க வேண்டுமென்ற நோக்கில் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டனவாம்.

பாமியான் புத்த சிலைகள் உடைக்கப்பட்ட போது அநியாயம் அக்கிரமம் என்று கூக்குரலிடத் தெரிந்தவர்களுக்கு அதே ஆப்கனில் அதே சமயத்தில் பச்சிளம் குழந்தைகள் பாலுக்கும் வழியின்றி தவித்ததையும் சொல்லுங்கள். குழந்தைகளுக்காக உலக நாடுகளில் கையேந்தி உதவி கேட்டும் (ஐ.நா உட்பட) எந்த உதவியும் செய்யாமல், பாமியான் சிலைகளை பராமரிக்க மட்டும் ஐ.நா நிதி அனுப்பியது குறித்தும் எழுதுங்கள். 'அப்படிப்பட்ட சிலைகளை உடைத்தெறிந்து விட்டு குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாமே..' என்று ஈரமுள்ள பின்னூட்டங்கள் வரும். அடுப்பில் சமைக்க அரிசி கேட்டவர்களுக்கு - வீட்டு வாசலில் தோரணம் கட்டி தருகிறேன் என்று தானே உலகம் சொன்னது.

எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆதரிக்கக்கூடாது. இந்துவோ-முஸ்லிமோ- கிறிஸ்தவமோ- எந்த பயங்கர வாதமும் தவறு தான் . ஆபத்து தான்.! கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மைனாரிட்டிக்களின் பயங்கர வாதங்கள் 'எரிவதைப்பிடுங்கினால் கொதிப்பது அடங்கிவிடும்' ரகம் தான் - பெரும்பாலும்.
உதாரணமாக-பாலஸ்தீனர்களுக்கு நீதி கிடைத்து விட்டால் - மத்திய ஆசியாவில் இரத்தம் ஓடாது. ஈராக் உண்மையான சுயாட்சி பெற்று விட்டால் - அங்கும் அமைதி நிலவும். சங்பரிவார்களின் சமூக மேலாதிக்க மனப்பான்மை மாறிவிடுமானால் - இந்தியாவிலும்- மைனாரிட்டிகளும் (மத, ஜாதி அமைப்புகளும் ) மவுனமாகி விடுவார்கள் என்பது என் கணிப்பு.

அதே சமயத்தில் இன்னொன்று- தனி மனிதத் தவறுகளுக்கு மதத்தை காரணம் காட்டுவது அறியாமையை வெளிப்படுத்திவிடும். உதாரணமாக, மாட்டுத்தோலுக்காக மனிதர்களை கொன்றவர்களை கண்டிக்கும் போது அதற்காக இந்து மதத்தை தாக்கி விடக்கூடாது-அந்தக் கொடியவர்களின் மனங்களில் 'மனு'வோ, வருணாசிரமமோ பின்புலமாக இல்லாத பட்சத்தில்.

மசூதிகளில் மறுக்கப்படும் பெண்களுக்கு குரல் கொடுக்கும் முன் மழிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்படும் விதவைகளுக்காக கண்ணீர் விடுவது தான் முதலில் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் சிந்திக்கும் படியே கழகங்களும் சிந்தித்ததன் காரணம் எது முக்கியம் என்று உணர்ந்ததால் தானே. நேச குமார் மட்டும் 'பயங்கர வித்தியாசமாக' சிந்திப்பதன் காரணம் என்னவோ?

'ஒருவேளை, கடவுளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் தவறிவிட்டாலும் - கடவுள் நினைத்தால் உங்களை மன்னிக்கக் கூடும். ஆனால் சக மனிதர்களுக்கு நீங்கள் உங்களின் பொறுப்பை நிறைவேற்றத்தவறினால் - அல்லது அநியாயம் செய்து விட்டால்- அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவனும் உங்களை மன்னிக்க மாட்டான்' - என்று எனக்குத் தெரிந்து இஸ்லாம் தான் சொல்கிறது. மனித உரிமைகளின் உச்சம் இது. இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளையும் உங்கள் பேனா பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விவாதங்களைத் தொடருங்கள் நேச குமார். ஆனால் காய்த்தல் உவத்தலின்றி எல்லாத்தரப்பு பற்றியும்.

தூசுகளையும் மாசுகளையும் தொடர்ந்து கொட்டிவந்தால் தான் துடைக்கும் கரங்களும் தொய்வின்றி பணி செய்யும்! உண்மை பளிச்சிடும். நன்றி!

Sunday, March 13, 2005

தேர்தல் ஆணையரின் தரமான ஆலோசனை.ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். தேர்தல் நடைபெறும் போது பல்வேறு காரணங்களால் (பெரும்பாலும் வெறுத்துப்போய்) சுமார் 35-40 பேர் வரை வாக்களிப்பதில்லை. மீதமுள்ள 65-70 பேரும் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். அவற்றுள் அதிகபட்ச வாக்குகளை (25-30 தான் இருக்கும்) வாங்கி விடுகிற வேட்பாளர் (கட்சி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது 100 பேர் உள்ள தொகுதியில் பெரும்பான்மையோருடைய (75-70 சதம்) வாக்குகளை பெறாதவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது என்று சொன்னால் அது ஒன்றும் மிகையில்லை. நம் ஜனநாயகத்தின் இலட்சணம் இது தான்.
இந்நிலையில் நமது தலைமை தேர்தல் ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஒரு அற்புதமான யோசனையை முன் வைத்துள்ளார். அதாவது- கட்சி அடிப்படையில் தேர்தலை நடத்துவது-கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் எம்.பிக்கள்-எம்.எல்.ஏக்களை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் நியமித்துக்கொள்வது என்பதாகும்.
இது உள்ளபடியே சிறந்த ஆலோசனை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.காரணம்-இம்முறையை பின்பற்றுவதன் மூலம் அரசியலில் உள்ள குற்றப்பின்னணியை பெருமளவு களையலாம். மேலும் பரவலாக அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்யலாம்.
ஆனால்..வழக்கம் போல அரசியல் வாதிகள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் தான்.
நீங்க என்ன சொல்றீங்க..?

Sunday, March 06, 2005

தொடர்வண்டி ச்சதிகள்!

தாமதம் தான். ஆனாலும் எழுதாமல் இருக்க முடியாது. கோத்ரா ரயிலெரிப்பு ச்சம்பவம் ஒரு விபத்துத்தான், சதி அல்ல என்று பானர்ஜி கமிஷன் இடைக்கால அறிக்கை தெளிவாக்கியிருக்கிறது. இது குறித்து சக வலைப்பதிவாளர்கள் யாரும் இதுவரை எழுதியதாக த் தெரியவில்லை.

விபத்தொன்றை சதி என்று குரூரமாய் சதிச்செய்து அன்னை தேசத்து ச் சொந்தங்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் இலட்சக்கணக்கில் அகதிகளாக்கியும் கோடிக்கணக்கான மனங்களில் அவநம்பிக்கையை விதைத்தும் தாம் விரும்புகிற சமூக மேலாண்மையை அறுவடை செய்யத்துடிக்கிற ஆதிக்கவாதிகளுக்கெதிராக எம் தேசத்தில் போதுமான எழுச்சி ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியம். இதே மக்கள் தான் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் விளையாட்டாகவோ, பணம் வாங்கிக்கொண்டோ நம்மவர்கள் தோற்றாலும் ஊன் நிறுத்தி உயிர் வருத்தி சோகம் இசைத்து தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகிறவர்கள்.

சொந்த மண்ணின் சகோதரர்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகி வந்த நிலையில், புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களையே (ஜே ஜே வென்று)பழி சுமத்திய தலைவர்கள், ஏன், அதற்கு முன்பதாக, நியூட்டனின் மூன்றாவது விதியையே சாக்காகச் சொல்லி இனப்படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டியவர்கள், 'யார் முதலில் பற்ற வைத்தது?" என்கிற ஒற்றை க்கேள்வியில் தமது பொறுப்புணர்வை ஒளித்துக்கொண்ட பிதாமகன்கள்- கரும்புள்ளி என்று நீலிக்கண்ணீர் விட்டு அதேசமயத்தில் தம் கோலங்களுக்கு மேலும்மேவும் புள்ளிகளை த்தேடியவர்கள மட்டும்தாம் என்றில்லை, வேறு யாரையும் கூட இந்த கமிஷனின் அறிக்கை உலுக்கியதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சமாக ஒரு பதவி விலகல் கோரிக்கைக் கூட எழவில்லை.பிரபல பத்திரிக்கைகளும் 'விபத்தை ச் சதியாக்கிய சதி" என்றதோடு நின்று விட்டன. அவைகளுக்கும் அந்த சீஸனில் விற்றுத்தீர்க்க வேறு பண்டங்கள் இருந்தன.

'தனி மனித க் கொலைகளுக்கு தேடிப்போய் தூக்கு வாங்கித்தருகிற நம்முடைய அரசியல் அமைப்பு கூட்டுக் கொலைகளுக்கு விசாரணை கமிஷன் வைப்பதோடு நின்று விடுகிறது" என்று ஒரு வலைப்பதிவில் படித்தது நினைவுக்கு வருகிறது.

ஆனால் இதை வைத்து அரசியல் நடத்துவது மட்டும் குறையவில்லை. பிகார் தேர்தலுக்கு முன்பாக இந்த அறிக்கை வெளியானதில் ஆதாயம் தேடும் அரசியல் மனப்பான்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அத்தகைய அரசியலை நிராகரிக்கும் மனப்பான்மையில், அந்த அவசரத்தில், நடந்த உண்மையையும் ஒதுக்கிவைப்பது தான் மிகப்பெரிய அவலம்.

தன் சொந்த மாநிலத்தவர்களையே பல்லாயிரக்கணக்கில் பலியாக்கி அரசியல் ஆதிக்கம் அடைய வல்லாதிக்க வல்லூறுகளும் நினைத்ததில்லை. நாற்காலிக்காக 'நாற்காலி'களை விடவும் மோசமாக நடந்துக்கொண்ட இவர்களை என்னவென்று சொல்வது..?

பானர்ஜி கமிஷனின் இந்த அறிக்கை க் குறித்து – குஜராத் படுகொலைகளை விசாரிக்கும் நானாவதி கமிஷனின் உறுப்பினர் ஒருவர்- கே.ஜி.ஷா என்பவர் - ஆட்சேபணைகள் சிலவற்றை எழுப்பியுள்ளார். அவற்றை நீதிபதி.பானர்ஜி திட்டவட்டமாக மறுத்து 'அவுட்லுக்கில்" பேட்டியளித்துள்ளார்.
நீதிபதி பானர்ஜியின் பேட்டியில் 'ரயில் எரிப்பு நடந்திருந்தும் வழக்கமான 48 மணி நேரத்துக்குள் அப்போதைய ரயில்வே அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிடாததும், ஒரு வாரத்துக்கு பிந்தி அமையவிருந்த மாநில அரசின் ஆணையத்தையே அதற்கு காரணம் காட்டியதும் - செயல்முறையில் 60 லிட்டர் பெட்ரோலை அதுவும் சூலம் ஏந்திய கரசேவகர்கள் நிரம்பியிருந்த பெட்டியில் ஊற்றுவது சிறிதளவும் சாத்தியமில்லை என்பது புலப்படுகிறது.
அப்போதைய ரயில்வே அமைச்சகம் அவசரம் அவசரமாக-'பெட்ரோலை ஊற்றிய வழி' என்று சொல்லப்பட்ட (இரண்டு பெட்டிகளை இணைக்கும்) வெஸ்டியபிள் கேன்வாஸை கழிவுப்பொருள் என்று சொல்லி விற்றதும் - திடீரென வந்த கும்பல் பெட்டிகளுக்கிடையேயான அந்த இணைப்பை அறுக்கும் ஆயத்தங்களோடும் ஆயுதங்களோடும் வந்தனர் என்பது அந்த சூழலில் நம்பத்தகாததாகவும் நகைக்கத்தக்கதாகவும் இதில் புதைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொணர போதுமானதாக இருக்கிறது.

இத்தனை வேதனைகளுக்குமிடையே ஒரு சிரிப்பும் இருக்கிறது. அது,குஜராத்தின் நற்பெயரை நீதிபதி பானர்ஜி களங்கப்படுத்தி விட்டதாக நானாவதி கமிஷன் உறுப்பினர் ஷா சொல்வது தான். இந்த கூற்று வரவிருக்கும் நானாவதி கமிஷன் அறிக்கையை கட்டுடைத்துப்பார்க்கும் வாய்ப்பையும் அளித்து விடுகிறது.

என் பேனா கவிதையாய் கண்ணீர் வடிக்கிறது:

அரசாங்கத் தண்டவாளங்களின் மீது
அமர்ந்திருந்தது அந்த ரயில்
புறப்பட எத்தனிக்கும் முன்பே
பிறப்பிக்கப்பட்டிருந்த சமிக்ஞைகள்
''நிறுத்த வேண்டாம்"
எல்லா 'நிலை" யங்களும்
ஏற்றுக் கொண்டன அவற்றை.
தம் இருப்புகளைத் தக்க வைக்க..!

நவீன ஹிட்லர் முகத்தில்
நாறிய எச்சில் துடைக்க
நியூட்டனின் மூன்றாம் விதி
அவதாரம் எடுத்து
அரசியலுக்கு வந்தது.

'பற்ற வைத்தது யார்?"
ஒற்றைக் கேள்வியைப்
பற்றிக் கொண்டவர்களுக்கு
கற்பை நிரூபிக்கவே
தீக்குளித்ததைப் போலொரு
கர்வம் இருந்தது.

எரிந்துக் கொண்டிருந்தவர்களுக்கோ
இலவசமாய் கிடைத்தன அறிவுரைகள்!

கர்ப்பிணி வயிற்றிலிருந்து
கிழித்தெறியப்பட்டது சிசு.
மகாத்மாவின் மண்ணிலிருந்து
மனிதாபிமானமும்!

ஜனங்களை முடக்கிவிட்டு
நடந்த தேர்தலில்
நாயகர்கள் வென்றார்கள்
ஜனநாயகம் என்றார்கள்.

காந்திகள் இறந்து போன தேசத்தில்
மோடிகள் முடிசூட்டிக் கொண்டு..!

கடைசியில் உண்மை
கறுப்பு மையில் வெளிப்பட்ட போது
மனிதம் மாண்டிருந்தது.
மானத்தோடு!