Sunday, September 14, 2008

பயங்கரவாதப் பெருந்தீ - தீர்வு என்ன?

வெள்ளி மாலை யதேச்சையாக தொ.கா பார்த்தபோது, பாக்கிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில் பயங்கரவாதிகளின் வெறியாட்டம் பற்றி செய்தியில் சொன்னார்கள். ரமலான் இரவுத்தொழுகை தொழுதுகொண்டிருந்த மக்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கிரேனைட்டுகளை எறிந்தும் 25 உயிர்களைக் கொன்றிருக்கிறார்கள், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். பாக்கிஸ்தானிகளாக இருந்தாலும், கொல்லப்பட்டவர்களுக்காக மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்தத் தீவிரவாதத்துக்கு ஒரு முடிவு வராதா? யார் இந்த கோழைத்தனமான படுகொலைகளைச் செய்திருப்பார்கள்? இதன் பின்னணி நோக்கம் என்னவாக இருக்கும்? நமது நாட்டில் சொல்லப்படுவது போல, அங்கும் அந்நிய நாட்டுச் சதி என்று சொல்வார்களோ? - புற்றிலிருந்து வெளிக்கிளம்பும் ஈசல்களைப் போல கேள்விகள் முளைத்துக்கொண்டேயிருந்தன.

நேற்று மாலை தமிழ்மணத்தைத் திறந்த போது டெல்லி குண்டுவெடிப்புக் குறித்து ஒரு பதிவு கண்ணில் படவும், அதிர்ந்தவனாக உடனே ஓடிச்சென்று தொ.கா வைத் திறக்க, ஐந்து இடங்களில் குண்டு வெடித்து 30 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் என்று சொன்னார்கள். ஆத்திரமும், வருத்தமுமாக இருந்தது. காட்டப்பட்ட காட்சிகளைக் கண்டு கண்ணீர் துளிர்த்தது.

அப்பாவி மக்கள் மீதான இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்? ஜாதி, மதம் பாராமல், இந்த ஈனச்செயலைச் செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டாமா? யார் செய்தது இந்தக் கொடூரத்தை? இந்தியாவின் அமைதியைக் குலைக்க நினைக்கிற எதிரிநாடுகளின் கைவண்ணமா? இஸ்லாமியப் பெயராளிகளின் தீவிரவாதமா? அல்லது இந்துத்துவத்தின் இன்னொரு அரசியல் விளையாட்டா? குழப்பச்சேற்றில் மீன் பிடிக்கும் எதிரிகளா? அரசு எப்படியாகிலும் இவற்றைத் தடுத்திருக்கவேண்டுமல்லவா? ஒவ்வொரு குண்டு வெடிப்பிலும் இந்திய அரசின் உளவுத்துறையின் கையாலாகாத்தனமல்லவா வெளிப்படுகிறது? அந்த அப்பாவிக் குடும்பங்களுக்கு என்ன ஆறுதலை இந்த அரசு இயந்திரங்கள் அளித்திட முடியும்? இனியேனும் இவை நடக்காதிருக்க என்ன தான் வழி?

பி.ஜே.பி யினர் கூறுவதைப் போல கடுமையான (POTA) சட்டங்களைக் கொண்டுவரவேண்டுமா? ஆனால் கடுமையான அந்தச் சட்டங்கள் அரசியல்/மதக் காழ்ப்புணர்வுகளைத் தீர்த்துக்கொள்ளத்தானே கடந்த காலங்களில் பயன்பட்டிருக்கின்றன. (கோத்ரா முஸ்லிம்கள் பொடாவில் கைது செய்யப்பட்டனர் ஆனால் குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரிகள் ஒருவர்கூட அப்படி கைது செய்யப்படவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது)

அப்படிக் கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டங்கள் காழ்ப்புணர்வுகளைத் தீர்த்துக் கொள்வதற்கான வன்மமாகப் பயன்படுத்தப்பட்ட போது/அரசியல் இன ரீதியாக தவறாகப் பயன்படுத்தப்பட்டபோது தீவிரவாதம் இன்னும் அதிகமாக அல்லவா ஆனது?. தீவிரவாதத் தடுப்பு என்ற பெயரில் பாலகர்கள் மீதும் சட்டத்தின் வன்முறையை ஏவினார்களே! ஐ.நா சபையின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை அதைக் குறிப்பிடுகிறதே

தவறு எங்கே இருக்கிறது?

நீதியும் வாழ்வாதாரமும் மறுக்கப்படும் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்களா? இந்த ஒரு கேள்வி ஸ்தம்பிக்க வைத்தது, அப்படியும் இருக்குமோ?.

குஜராத் படுகொலைகளுக்கான நீதி இன்னும் அநீதியாளர்கள் அக்கிரமக்காரர்களின் கையில் இருப்பது நினைவுக்கு வந்தது. பாபர் மசூதி இடிப்பில் தொடங்கிய இந்தத் தீவிரவாதம் பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் கலவரம், குஜராத் இனப்படுகொலைகள், அண்மையில் நடந்தேறிய ஒரிசா அட்டூழியங்கள்என்று நினைவுகள் தொடர இதில் சம்பந்தப்பட்டவர்கள்; பங்காற்றியவர்கள் ஏன் இதுவரை இந்தியத் திருநாட்டில் தண்டிக்கப்படவில்லை என்ற வினாவும் பூதாகரமாக எழுந்தது.

ஒரிசா படுகொலைகளை ராமகோபால வகையறாக்கள் நியாயப்படுத்துவதாக ஒரு செய்தியும் இன்று படித்தேன். என்ன கொடுமை?

"பெரும்பான்மையினரின் தீவிரவாதமே சிறுபான்மையினரின் எதிர்வினைக்குக் காரணமாக அமைகிறது" என்று ஜவாஹர்லால் நேரு சொன்னது சரிதான் என்றல்லவா இந்த ராம கேவலர்கள் நிரூபிக்கிறார்கள்.

என்னதான் தீர்வு?

இந்துத்துவ ஆதிக்கவாதத்தால்; அந்த ஃபாசிசத்தால் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் அட்டூழியங்களை-அது திருவிதாங்கோடு/முத்துப்பேட்டை பிள்ளையார் ஊர்வல சலசலப்பாக இருந்தாலும், குஜராத் கொடூரமாக இருந்தாலும்-அரசு விழிப்புடன் உரிய நடவடிக்கை உடனுக்குடன் எடுத்து பயங்கரவாதத் தீ மேலும் பரவாமல் தடுக்க வேண்டும்.
தீவிரவாதிகள் எந்த மதத்தை; இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த சமூகத்தின் துணைகொண்டே தனிமைப்படுத்த வேண்டும். (இதற்கான யோசனைகளை வாசகர்கள் தெரிவிக்கலாம்) ஆனால், ஊடகர்களும், அரசியல் நாடகர்களும் குறிப்பிட்ட சமூகத்தை அல்லவா குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனைகிறார்கள்?

இந்துத்துவ ஆதிக்க/ஃபாசிச சக்திகள் ஆட்டம் போடுவதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட; தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரள வேண்டும். இவர்களுடன் சிறுபான்மையினர் அணிவகுக்க வேண்டும். மத வெறியுணர்வுகளுக்குப் பலியாகக்கூடாது.

சிறுபான்மை சமூக மக்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்கி அவர்களும் இந்திய குடிமக்களே என்று பெருமிதப்படுவதற்கு வழிவகுக்கச் செய்ய அவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி, நீதி, சமூக அந்தஸ்து சரியாகவும் முறையாகவும் வழங்கப்படவேண்டும். சச்சார் உள்ளிட்ட ஆணையங்கள் இவற்றை படம்பிடித்துக் காட்டிய பிறகும் அரசாங்கம் ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? ஆதிக்கச்சக்திகள்; பாஸிஸ்டுகளின் எதிர்ப்பையும் மீறி இவற்றை சரிவர நிறைவேற்றுவதில் அரசு முனைப்பு காட்டவேண்டாமா?.

அரசியல் லாபக்கணக்கு பார்க்காத நாட்டுப்பற்று மிக்க ஒரு அரசால் தான் இதைச் செய்யமுடியும்.

2 comments:

பிறைநதிபுரத்தான் said...

இந்துத்துவ ஆதிக்க/ஃபாசிச சக்திகள் ஆட்டம் போடுவதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட; தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரள வேண்டும். இவர்களுடன் சிறுபான்மையினர் அணிவகுக்க வேண்டும் - மிக அருமையான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

அத்துடன், மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து நிற்பதோடு, தமது சமூகப் பொருளாதார, பெண்கள் மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டிய வர்க்க அரசியல் பால் அணிதிரள வேண்டியது அவசியம். அது நடைபெற, இஸ்லாமிய மக்கள் பிற்போக்கு-தீவிரவாத-பிரிவினைவாத சக்திகளை புறக்கனிக்க வேண்டும். இவை பற்றியெல்லாம் முஸ்லிம்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

பிறைநதிபுரத்தான் said...

இந்துத்துவ ஆதிக்க/ஃபாசிச சக்திகள் ஆட்டம் போடுவதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட; தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்று திரள வேண்டும். இவர்களுடன் சிறுபான்மையினர் அணிவகுக்க வேண்டும் - மிக அருமையான கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

அத்துடன், மதச்சார்பற்ற சக்திகளுடன் சேர்ந்து நிற்பதோடு, தமது சமூகப் பொருளாதார, பெண்கள் மேம்பாட்டுக்காகப் பாடுபட வேண்டிய வர்க்க அரசியல் பால் அணிதிரள வேண்டியது அவசியம். அது நடைபெற, இஸ்லாமிய மக்கள் பிற்போக்கு-தீவிரவாத-பிரிவினைவாத சக்திகளை புறக்கனிக்க வேண்டும். இவை பற்றியெல்லாம் முஸ்லிம்கள் ஆக்கப் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது.