Sunday, April 24, 2005

உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்

'சரிவரத் தெரிந்துக்கொள்ளாமல் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பேசி விடாதே!அது உன் அறியாமைக்கு விளக்கமாகி விடும்' – முஸ்லிம்களின் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்கள் தன் மகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுகிற வாசகங்கள் இவை!

குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது: 'தொழுகையாளிகளுக்கு கேடு தான்' என்று!இதை வைத்து இஸ்லாத்தின் இறைவன் தொழுகையாளிகளைச் சபிக்கிறான் என்று விமர்சனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இஸ்லாமைப் பற்றிய இன்றைய விமர்சனங்களும் - அரைகுறையாக!

இஸ்லாம் என்கிற நெறி எல்லா துறைகளிலும் எல்லா வகை மனிதர்களிடத்திலும் (முஸ்லிம்களாயினும் முஸ்லிம்கள் என்ற பெயரிலோ வேறு பெயர்களிலோ வாழ்பவர்களாயினும் நாத்திகர்களாயினும்) தனது தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது.

இன்றைக்கும் அறிஞர் பெருமக்களிடையே அதிக விவாதத்துக்கு உள்ளாவதாகவும் இயல்பான ஈர்ப்புத்தன்மை வாய்ந்த ஒன்றாகவும் அதன் காரணமாகவே மிகுந்த பொறாமைக்காளானதாகவும் இஸ்லாம் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீத வளர்ச்சி பெற்றது என்கிற புள்ளிவிவரமும் - செப் 11 நிகழ்வுக்குப்பின் இஸ்லாமை ஆராயத்தலைப்பட்டு அமெரிக்காவில் மட்டுமே 80,000க்கும் மேலானோர் இரண்டு வருட காலக்கட்டத்தில் இஸ்லாமை ஏற்றனர் என்று சென்னையிலுள்ள அமெரிக்கத் துணை தூதரக அதிகாரி ஏஞ்சலா வில்லியம்ஸ் குறிப்பிடுவதும் சிந்திக்கத்தக்கது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறையாக அதுவும் சிலுவைப் போர்களின் சமயத்தில் இஸ்லாமை மனம் போன போக்கில் விமர்சித்து- அதன் பிம்பத்தை உடைத்தெறிய கங்கணங் கட்டிச் செயல்பட்ட சதிகார எழுத்துக்களை வாசித்து பின் அதையே தனது நவீன விமர்சனமாக 'ஜல்லி' அடிக்கிற நபர்கள்-அவ்வாறு இஸ்லாமை விமர்சிப்பதன் மூலம் தன்னை அறிவுஜீவியாக (இஸ்லாமை அறியாதவர்களிடம்)காட்டிக்கொள்வதும் உண்டு.

(சிலுவைப்போர்களின் சமயத்தில் கிறித்தவர்களால் உமிழப்பட்ட துவேஷங்களுக்காக மறைந்த போப் ஜான்பால் அவர்கள் மன்னிப்புக் கோரியதும் - குர்ஆனை பகிரங்கமாக முத்தமிட்டு இஸ்லாமின் சிறப்புகளை உலகறியும் வண்ணம் உரத்துப் பேசியதும் சமீப கால சரித்திரம் எனினும் அந்த துவேஷ விஷம் மேற்குலகில் முழுமையாக முறிந்துவிட்டதாகவோ அதன் பாதிப்பு கீழை தேசத்து 'அறிவுஜீவி'களின் மூளையில் ஏறவேயில்லை என்றோ சொல்லி விட இயலாது).

முஹம்மதிய மதத்தவர்கள் என்று முஸ்லிம்களைக் குறித்து சொல்லத் தொடங்கியதும் இந்த காலக் கட்டத்தில் தான்.

இயேசு கிறிஸ்துவை கடவுளாக்கியவர்கள் கிறிஸ்தவர்கள்
கவுதம புத்தனை கடவுளாக்கியவர்கள் புத்த மதத்தினர்.
ஆனால் முஸ்லிம்கள் முஹம்மது நபியை என்னதான் உயிரினும் மேலாக நேசித்தாலும் கடவுள் தன்மை பெற்றவராக கருதுவதில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்களே அதற்கான வழியை பூரணமாக அடைத்து விட்டார்கள்.

இஸ்லாம் என்கிற இந்த மார்க்கமானது கி.பி ஆறாம் நூற்றாண்டில் முஹம்மது நபியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக முஹம்மது நபி(ஸல்) அவர்களைக்கொண்டு முழுமைப்படுத்தப்பட்ட நெறியாகும்.

'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே நாம் அனுப்பினோம்! – அவ்வாறு அனுப்பப்படாத ஒரு சமுதாயமும் இல்லை' என்று திருக்குர்ஆன் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அதை வைத்துப்பார்க்கும் போது இந்தியத்திருநாட்டுக்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கும் கூட திருத்தூதர்களை இறைவன் அனுப்பியிருக்கத்தான் வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல உறுதியானதே.

ஹிந்து மதத்தின் ரிக் மற்றும் அதர்வண வேதமும் பவிஷ்ய புராணமும் முஹம்மது நபியைப் பற்றிய துல்லியமான தெளிவான முன்னறிவிப்புகளை தந்திருப்பதைப் பார்க்கும் போது குர்ஆனுடைய மேற்கண்ட வசனத்தை அது மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

அப்படி இந்தியாவுக்கோ அல்லது அதன் பல சமூகங்களில் ஒன்றான தமிழ்ச் சமூகத்துக்கோ அனுப்பப்பட்ட தூதுவர் இவர் தான் என்று யாரையும் சுட்டுவதற்கு வேதங்களிலோ வரலாற்றிலோ ஆதாரமான முகாந்திரங்களில்லை என்பதால் யாரையும் நாம் அறுதியிட்டு கூறுவதற்கு வழி ஏதுமில்லை.

எது எப்படி இருப்பினும் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன் ஒன்றே இஸ்லாம் என்கிற நெறியின் இறுதியான பதிப்பு என்பதும் அதுவே இறை மன்றத்தின் நடைமுறைச்சட்டம் என்பதுமே முஸ்லிம்களின் முதன்மை நம்பிக்கை. குர்ஆனில் பெயர் காட்டப்படுகிற ஒரு சில பிற வேதங்களான இன்ஜீல் (பைபிள்) தவ்ராத் (யூத வேதம்) ஆகியவற்றையும் வாசித்துப்பார்க்கும் படி இன்றைக்கும் இஸ்லாம் சொல்லிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அவற்றில் (முந்தைய வேதங்களில்) சுவை கருதியோ சுயநலம் கருதியோ மனித கையாடல்கள் நடந்துவிட்டதையும் அது அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.

போதிக்க வந்த நூல்கள் தனது பாதையிலிருந்து விலகி தனி மனித துதியையும் கற்பனை ரசத்தினையையும் மிதமிஞ்சி உற்பத்தி செய்கிற வெறும் 'களஞ்சியங்'களாகவே இன்று கருதப்படுவதை 'கோபியர்களைக் கொண்டு கொச்சைப்படுத்தப்படும் கிருஷ்ணனை வைத்தும் - ராமன் சீதை உறவுமுறை குறித்து பல்வேறு முரணான வகை இராமாயணங்கள் புனையப்பட்டிருப்பதிலிருந்தும் அறியலாம்.

இவ்வாறு தனது நோக்கங்களிலிருந்து மத நூல்கள் விலகி விட்டிருப்பதையே அவை 'முன் நகர்ந்து சென்று விட்டதாக' 'அறிவு ஜீவி'களால் பெருமிதத்துடன் குறிப்பிடப்படுகிறது.

கல்கி அவதாரம் முஹம்மது நபி தான் என்று தத்தம் ஆதாரங்களுடன் அடித்துச் சொல்கிற ஒரு சில ஹிந்து மத அறிஞர் கூற்றுக்களையும் 'அனைத்துத் தரப்பாருக்கும் நல்லதை வலியுறுத்தவும் தீமையை தடுக்கவும் தூதர்களே அனுப்பி வைக்கப்பட்டனர்' என்கிற குர்ஆனின் குரலையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் யாருக்கும் இறைதூதர்களே அவதாரங்களென திரித்து அறியப்பட்டிருக்கலாம் அல்லது அறிந்து திரிக்கப்பட்டிருக்கலாம் என்கிற அனுமானம் வலுப்பெறுவதைக் காணலாம்.

இவை ஒரு புறமிருக்க, இஸ்லாம் என்பது வெறுமே சடங்குகளால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள மதம் அல்ல. அது நோக்கத்தையும் அதனடிப்படையிலமைந்த செயற்பாடுகளையும் வலியுறுத்துகிற நெறி!. அதனால் தான் 'சக மனிதனை நோக்கிய புன்னகையை தருமமாக அறச்செயலாக கருதுகிற அதே நேரத்தில் '(பிறருக்கு காண்பிக்கவென்றே தொழுகிற) தொழுகையாளிகளுக்கு கேடு தான்' என்றும் இஸ்லாம் சொல்கிறது. மனித எண்ணங்களை மனிதாபிமானத்துக்கு உகந்ததாக மேன்மையாக்குவதே இஸ்லாத்தின் நோக்கம் என்பதை இவை விளக்கவில்லையா....?

சுருங்கக் கூறிடின் ஒரு மனிதன் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி தனது சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துகிற அனைத்துமே இஸ்லாம் சொல்லித்தருகிற வணக்க வழிபாடு வகையைச் சார்ந்ததே!

நேர்மையான உழைப்பும் ஒரு இறை வணக்கமாக- சக மனிதனுக்கு வாளியில் நீரெடுத்துத் தருகிற அற்ப உதவிகளும் இறை வணக்கமாக கருதப்படுவது இஸ்லாத்தில் தான்.

சக மனிதனுக்கு துன்பம் விளைந்து விடக்கூடாதே என்கிற நன்னோக்கில் பாதையில் கிடக்கிற கல்லையும் முள்ளையும் அப்புறப்படுத்துவதை மிகப்பெரிய நற்செயலாக நம்பிக்கையாளரின் தன்மையாக இஸ்லாம் கருதுகிறது.

(இதையெல்லாம் உணராத சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் வெடிகுண்டுகளாலும் - வன்முறையாலும் இஸ்லாமிய நோக்கத்திற்கு விரோதிகளாயினர் – என்ன தான் எதிர்வினையாகவே வெளிப்பட்டாலும்).

தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று போற்றி தனக்கு வேண்டும் நாட்களில் மட்டும் 'ஆசி' தருபவளாக தாயை கருதி 'மதர்ஸ் டே' என்றெல்லாம் கொண்டாடுவது ஒரு புறமிருக்க –
அதே தாய்மார்கள் மற்ற தினங்களில் பசிக்கு உணவும் தரப்படாமல் கோயில் வாசல்களில் பிச்சை எடுக்கிற அவலக் காட்சிகளும் மறு புறமிருக்க ..........

இஸ்லாம் தெளிவாக சொல்கிறது:
'பெற்றோரை நோக்கி 'சீ' என்ற வார்த்தையைக்கூட சொல்லாதீர்கள்.' (குர்ஆன்)
'இந்த உலகத்தில் நீங்கள் மிகவும் கடமைப்பட்டிருப்பது உங்கள் தாய்க்கே' (நபிமொழி).

அதே இஸ்லாத்தில் தான் தாயைக்கூட வணங்குவதற்கு உரிமையில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள்: 'சீசருக்கு உடையதை சீசருக்கு கொடுங்கள்அது போல போப்புக்கு உடையதை போப்புக்கு கொடுங்கள்'. அதாவது, எதையும் மிகைப்படுத்தாதீர்கள். எதையும் குறைப்படுத்தாதீர்கள்.

தாயாகவே இருந்தாலும் கடவுள் நிலைக்கு மிகைப்படுத்தாதீர்கள் (தன் வயிற்று உணவுக்கும் தன் வயிற்றுப் பிள்ளைகளை எதிர்பார்க்கிறாள் தாய்;)
கடவுளை படைப்பினங்களின் நிலைக்கு இறக்கிவிடாதீர்கள். (படைப்பினங்களுக்கு ஏதேனும் ஒரு பலவீனமுண்டு-அது யாராக இருந்தாலும்! - இறைவனோ பலவீனங்களுக்கு ஆட்படாதவன்).

இஸ்லாம் தன்னுடைய இறைக் கோட்பாட்டில் சிறிதளவும் இளகியோ விலகியோ இடம் கொடுக்காமல் உறுதியாக நிற்கிறது இதுவே இஸ்லாத்தின் இயல்பும் சிறப்புமான நிலை. வலிமையுங்கூட.

இறைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டுமென்று ஒரு சுயமரியாதையுள்ள மனிதன் நினைக்கிறானோ அந்த இலக்கணத்தின் படியே இஸ்லாம் இறைவனை அறிமுகப்படுத்துகிறது.

இறைவன் என்பவன் சர்வ வல்லமையுடையவனாகவும் மிகக் கருணை நிரம்பியவனாகவும்நீதி தவறாதவனாகவும் பெற்றோரோ மற்றோரோ தேவைப்படாதவனாகவும் எந்த வித தேவையுமற்றவனாகவும் நிகரில்லாதவனாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லாவிதமான கடவுள் தன்மைகள் தனித்தன்மைகளாக இருக்க வேண்டுமானால் அவன் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்(அதாவது, இரண்டு இறைவர்கள் இருக்க முடியாது).

(நபியே!) நீர் கூறுவீராக: அவன் - அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).அவன் (எவரையும்) பெறவில்லை: (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை. (திருக்குர் ஆன்)

இறைவனைப்பற்றிய இஸ்லாத்தின் இந்த இலக்கணம் 'இஸ்லாம் காட்டுகிற இறைவன் பொறாமைக்குணம் படைத்தவனாக இருக்கிறான்' என்று சிலர் சுட்டிக்காட்டுமளவுக்கு!

தன்னுடைய மனைவியோ (அ) கணவனோ தன்னையன்றி பிறரிடம் இல்லற சுகம் பெறுவதை அனுமதிக்காத வாழ்க்கைத்துணைகளை நாம் 'பொறாமைக்குணம்' பிடித்தவர்களாக கருதுவதில்லை! அதை அவர்களுடைய உரிமையாகவும் 'ரோஷம்' உள்ள தன்மையாகவுமே பார்க்கிறோம் – ஆனால் இறைவனை வணங்கும் விஷயத்தில் இறைவனாலேயே படைக்கப்பட்ட படைப்பினங்களையும் அவனுக்கு அற்பத்திலும் அற்பமான சக்தி கூட பெறாதவற்றையும் வணங்கத்தலைப்பட்டு அதை உரிமையுள்ள இறைவன் எச்சரிக்கை செய்தால் கூட 'பொறாமை' முத்திரை குத்துமளவுக்கு சிறுமைப் பட்டு போகவேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தமக்குள்ளே கேட்டு கொள்வது நலம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்றே குர்ஆனின் 113 அத்தியாயங்களில் இறைவனை இஸ்லாம் அறிமுகப்படுத்துவதையும் 'ஒரு தாய் தன் மகவிடத்து செலுத்தும் அன்பை விட பன்மடங்கு படைப்புகளிடத்தில் இறைவன் அன்புடையவன்' என்ற நபிமொழியையும் இவர்கள் மறுக்கிறார்கள் அல்லது மறைக்;கிறார்கள் என்றே அர்த்தம்.

இறைவன் எந்தஅளவுக்கு கருணையாளனோ அந்த அளவுக்கு நீதியை நிலைநாட்டக் கூடியவனாகவும் இருக்கவேண்டுமல்லவா? தாய் கூட தனது பிள்ளைகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது இரண்டு அடி கொடுக்கத்தானே செய்வாள். பிள்ளை திருந்தும் பொருட்டு அடிக்கிற அந்த தாய் கருணையற்றவளாக கருதப்படுவாளா?

மேலும் குர்ஆனின் ஒரு வசனம் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறது:
'தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்ட எனது அடியார்களே! – நீங்கள் கடலளவு பாவங்களைச் செய்திருந்தாலும் இறைவனுடைய அருளில் நம்பிக்கையிழந்துப் போகாதீர்கள்!நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பாளனும் கிருபையுடையவனுமாவான்'

நிற்க, அரசியல் இஸ்லாம் ஆன்மிக இஸ்லாம் என்று கூறு போடத் துடிப்பவர்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் வாயிலை எவ்வாறு அடைத்தார்கள் என்பதை 'Islam The Misunderstood Religion' என்கிற நூலில் James A. Michener கூறுவதிலிருந்து:

‘In all things Muhammad was profoundly practical. When his beloved son Ibrahim died, an eclipse occurred, and rumours of God’s personal condolence quickly arose. Whereupon Muhammad is said to have announced, ‘An eclipse is a phenomenon of nature. It is foolish to attribute such things to the death or birth of a human being’..

தன்னுடைய மகனின் இறப்பின் காரணமாகவே 'இறைவன் தரப்பிலிருந்து துக்கம் அனுஷ்டிப்பதாக' கிரகணத்தை சுட்டிக்காட்டி மக்கள் பேசிய போது, அந்த துக்கச் சூழலிலும் உண்மை மறைந்துப் போகக் கூடாது என்று 'கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகள்-யாருடைய பிறப்போடும் இறப்போடும் சம்பந்தப்படுத்துவது அறிவீனம் என்று முழங்கி தனக்குச் சாதகமாகவே வந்தாலும் மூட நம்பிக்கை முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அரசியல் இஸ்லாம் என்றெல்லாம் எழுத இந்த அரைகுறை விமர்சகர்கள் வெட்கப்பட வேண்டாமா...?
சுனாமிக்கும் அரசியல் சூத்திரங் கண்ட 'விஞ்ஞானிகள்' சிந்திப்பார்களா....?

நிற்க, முஸ்லிம்களாகவே இருந்தாலும், என்ன தான் சமாதிகள் சிலைகள் பிற படைப்பினங்களை வணங்காது இருந்தாலும், பணத்துக்காகவும் புகழுக்காகவும் பதவிகளுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்கிறவர்கள் எப்படி வேண்டுமானலும் நடந்துக்கொள்ளத் தயங்காதவர்கள் (சுருக்கமாக- பணத்தை, புகழை, பதவியை வணங்கியும் இணங்கியும் வாழ்பவர்கள்) அவர்கள் முஸ்லிம் என்கிற வார்த்தையால் குறிக்கப்பட்டாலும் முஸ்லிம் என்கிற அர்த்தத்துக்குள் வர மாட்டார்கள்.

அதே போல முஸ்லிம் என்கிற வார்த்தையால் குறிக்கப்படாவிட்டாலும் முஸ்லிம் என்கிற அர்த்தத்தோடு வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் மறுக்க இயலாது

உதாரணங்களுக்கு:

'திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என்னுடைய விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனுடைய கொள்கைக்கிணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை' என்று சொன்ன மாவீரன் நெப்போலியன்.

'வழமையான அர்த்தத்தில் நான் முஸ்லிமாக கருதப்படாவிட்டாலும் ஏக இறைவனுக்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு முஸ்லிமாகவே என்னை நம்புகிறேன்......... தேவையான அடிப்படை கருத்தாக்கங்களைக் கொண்டுள்ள இஸ்லாமே எதிர்கால மதம் என்பது நிச்சயம்' - W.Montgomery Watt தனது 'Islam and Christianity today' என்கிற நூலில்.

இறைவனே மிக்க அறிந்தவன்.

உண்மைக்கு வழிகோலும் விமர்சனங்களுக்கு நன்றி செலுத்துவோம்!.

No comments: