கருத்துச் சுதந்திரமா….? கறுத்த எண்ணமா….?
‘என் கையை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் வீசுவதற்கு எனக்கு உரிமை உண்டு. அதே சமயம் அது அடுத்தவரின் மூக்கில் இடித்துவிடாமலிருக்க மிக கவனமாக இருக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு’ என்பதே கருத்துச் சுதந்திரத்திற்கான இலக்கணமாக கருதப்படுகிறது. மனிதமான மூக்கில் தான் இடித்துவிடாதிருக்க வேண்டுமே தவிர, மூக்கு போல் முகங்காட்டுகிற கோமாளித்தனங்களை , அசைய மறுக்கும் அபத்தங்களை அகற்றுவதற்கு கை வீசினால் தவறில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே…! ஆனால் இதையே காரணமாகக் கூறி, தான் தாக்கியதும் தாக்குவதும் மனித விழுமங்களை அல்ல என்று நியாயப்படுத்துகிற எழுத்து வியாபாரம் தான் இன்றைக்கு சந்தைப்படுத்தப்படுகிறது.
முக்கியமாக, சமூகப்பயிர் வளர்க்கும் எழுத்தாள சிரோன்மணிகள் இதில் பரபரப்பாளர்கள் என்று பெயர் எடுப்பதை விடவும் பண்பாளர்கள் என்று பெயர் பெறுவதை பெருமையாக கருத வேண்டும்.
திடீர் புகழுக்கும் பரபரப்புக்கும் ஆசைப்பட்டு கன்னாபின்னாவென்று எழுதிவிட்டு கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதை நியாயப்படுத்தவும் செய்கிறவர்கள், தனக்கென்று வரும் போது சுயநலப்பிறவிகளாகி விடுவது கண்கூடு.
ஒரு சரியான எடுத்துக்காட்டாக சல்மான் ருஷ்டியைச் சொல்லலாம்.
சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி ‘தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ ‘படிப்பது ராமாயணம் - இடிப்பது பெருமாள் கோயில்’ என்கிற பழமொழிகளை நினைவுப்படுத்துவதாக அமைந்தது. ‘சமரசம்’ மாதமிருமுறை இதழ் வெளியிட்டுள்ள செய்தியை அப்படியே கீழே தருகிறேன்:
'விர்ரென்று வேகமாக வந்து சரேலென்று வளாகத்துக்குள் நுழைந்து கிறீச்சென்று நின்றது அந்தக் கருப்பு வண்ண மகிழுந்து.
ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய அந்தக் குண்டு மனிதர் படாரென்று கதவை மூடி விட்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாகத் தாவி நான்கே எட்டில் முதன்மை வாயிலை அடைந்து, அரங்குக்குள் நுழைந்து, மூச்சிறைக்க,கோபம் கொப்பளிக்கும் கண்களால் இங்குமங்கும் துழாவி, மேற்கே முகம் பார்த்து நின்றிருந்த டி.ஷர்ட் ஆசாமியை நெருங்கி, மொத்தென்று விட்டாரே ஒரு குத்து!. டி.ஷர்ட் ஆசாமியின் உதட்டோரத்தில் இரத்தம்….!
“ஹெள டேர் யூ” “உனக்கு என்ன துணிச்சல்” என ஆவேசமாகக் கத்தினார். சுற்றியிருந்தவர்கள் குண்டு மனிதரையும் டி.ஷர்ட் ஆசாமியையும் பிரித்து,குண்டு மனிதரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.மீடியாவையு ,பத்திரிக்கையாளர்களையும் சகட்டுமேனிக்குத் திட்டிக்கொண்டே சென்றார், குண்டு மனிதர்.
திடீரென்று தன்னைப்பிடித்திருந்தவர்களை உதறித்தள்ளி டி.ஷர்ட் ஆசாமியை மறுபடியும் நெருங்கிய குண்டு மனிதர் “ இனிமேல் என் மனைவி பற்றி ஒரு வார்த்தை எழுதினே…. நடக்கிறதே வேறே…!” சுட்டு விரலை ஆட்டி மிரட்டினார்.
ஏன் இந்த ஆவேசம்?
டி.ஷர்ட் ஆசாமி திரைப்பட நிருபராம். குண்டு மனிதரின் மனைவி ஒரு மாடலிங் நடிகையாம். இந்த மாதிரி நடிகைகளைக் குறித்து பொதுவாக எப்படி எழுதுவார்களோ,அப்படி அந்த மாடலிங் பொண்ணு பற்றியும் டி.ஷர்ட் ஆசாமி எழுதினாராம். இதனைப் படித்த குண்டு மனிதரின் மனம் புண்பட்டு விட்டதாம். ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் அது தான் காரணமாம்.
அந்தக் குண்டு மனிதர் யார் தெரியுமா? ஸல்மான் ருஷ்தி. ஆம், சாத்தானிய வசனங்கள் நாவலை எழுதி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயத்தைக் காயப்படுத்திய அதே ருஷ்தி தான்.
தன்னுடைய லேட்டஸ்ட் நடிகை மனைவி குறித்து ஆபாசமாக எழுதிவிட்டானே என இந்தளவுக்கு ஆவேசப்பட்ட ருஷ்திக்கு, தன் சாத்தானிய வசனங்கள் நாவலால் முஸ்லிம்கள் எந்தளவுக்குத் துடித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்குமா?
அறுபது வயது ருஷ்திக்கு 35 வயது மனைவி மீது இருக்கும் அன்பை விட கோடிக்கணக்கான மடங்கு அதிகமான, இன்னும் சொல்லப்போனால் உயிரினும் மேலான நேசத்தை நபிகளார் (ஸல்) மீது வைத்திருக்கும் முஸ்லிம்கள் எந்தளவுக்கு கொதித்துப்போய் இருப்பார்கள்.? ருஷ்திக்கு உறைத்திருக்குமா?
தெரியவில்லை. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் ருஷ்தியை அரவணைத்து, பாதுகாத்து, இந்தப்பிரச்னையைச் சாக்காக வைத்துக்கொண்டு ஈரானுடன் பல்லாண்டுகள் தூதரக உறவுகளை முறித்து முரட்டுத்தனமாக நடந்துக்கொண்ட மேற்கத்திய நாடுகள் ருஷ்தியின் ஆவேசத்தைக் கண்டுக்கொள்ளவில்லையே….!
ருஷ்திக்கு எதிராக முஸ்லிம்கள் ஆவேசத்தை வெளிப்படுத்திய போது கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிய மேற்கத்திய ஊடகம் ருஷ்தியின் ஆவேசத்தை அமுக்கிவிட்டதே …! ஏன்? - எல்.பி ’ - நன்றி: சமரசம்
ருஷ்டியின் அவதூறு குறித்து தமிழகத்தின் பிரபல கவிஞரொருவர் அச்சமயம் சொன்ன வார்த்தைகள்:
“ருஷ்டி செய்திருப்பது விமர்சனமல்ல.. அசிங்கமான அருவெறுப்பான அவதூறு. இதை கருத்துச்சுதந்திரம் என்ற பெயரால் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றால் கொமைனியின் தண்டனையையும் அதே கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் பொறுத்துக்கொள்ள வேண்டியதாகி விடும். இரண்டுமே அநாகரீகமானவை. தவிர்க்கப்பட வேண்டியவை.”
Monday, April 11, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment