இஸ்லாம் குறித்து சகோதரர்'நேச' குமாரும் எதிர்வினையாக முஸ்லிம் சகோதரர்களும் பதிகிற வலைப்பதிவுகளை அவதானித்தே வருகிறேன். என் கருத்துக்களைப் பதியும் எண்ணம் அவ்வப்போது தோன்றினாலும் என் சிற்றறிவு கருதியே சும்மா இருந்து வந்தேன். தவிர, இந்த ப்பதிவுகளிலிருந்து என் மூளைக்கும் நல்ல தீனி கிடைத்தது.
'நேச' குமாரின் பதிவுகளில் புத்திசாலித்தனமான எழுத்து வெளிப்படுகிறது. அது மழுப்பலாகவே இருந்தாலும். (அதற்காக, மற்ற சகோதரர்கள் புத்திசாலித்தனமற்றவர்கள் என்று அர்த்தமில்லை). தன்னுடைய கேள்விகளுக்கு பிறர் எதிர்கேள்வி எழுப்பும் போது அதை லாகவமாக தாண்டிச்சென்று விடுகிற அல்லது வேறொரு விவாதத்தின் மூலம் மறக்கடித்து விடுகிற 'சாமர்த்தியம்' 'நேச' குமாருக்கு நிரம்பவே இருக்கிறது. (அவருடைய இலக்கிய பின்புலம் காரணமாக இருக்குமோ?).
உதாரணத்துக்கு, 'நபிகள் காலத்திலேயே ஆன்மிக இஸ்லாம் பின்தள்ளப்பட்டு அரசியல் இஸ்லாம் முன்னிலைப்படுத்தப்பட்டது' என்கிற அவருடைய அனுமானத்துக்கு நபிகாலத்து ஆதாரம் தரும்படி அப்துல்லா என்பவர் கேட்டிருக்க....... அதை மறக்கடிக்கும் விதமாக....... 'இஸ்லாம் என்ன செல்லப்பிள்ளையா?' என்று தனது சமீபத்திய பதிவில் அங்கலாய்த்திருக்கிறார். தமிழக அளவில் இல்லாவிட்டாலும் உலக அளவில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டது இஸ்லாமும் அதன் நபியும் தான் என்பதை அவர் அறியமாட்டாரா..? நிச்சயம் அறிவார். ஆனால் 'செல்லப்பிள்ளையா அது.....?' என்று கேட்பதன் மூலம் - அறியாத சில வாசகர்களையாவது 'அதானே..' என்று சொல்ல வைத்து விடலாம் என்று நினைத்த மனோ தத்துவ எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. அத்துடன் தான் கேட்ட கேள்வியை தானே மறுத்து ' இல்லை.... செல்லப்பிள்ளையில்லை... ஆனால் பயம்!' என்று நிறுவ முயல்கிறார்.
இன்னொரு உதாரணமாக...... நபிகளின் சொந்த வாழ்க்கைப் பற்றி எங்கோ தான் படித்தவற்றை அவர் தன் 'அறிவு' வாதமாக வெளிப்படுத்த..... அபூ முஹை என்பவரும் சலாஹுத்தீனும் நல்ல சஹீஹான ஹதீஸ் – விமர்சிப்பதற்கென்றே இட்டுகட்டப்பட்ட ஹதீஸ் என்பது குறித்து தெளிவான பாடம் எடுத்திருந்தனர். அதையெல்லாம் 'நேச' குமார் படித்துப் புரிந்து ஏதேனும் விளக்கம் கேட்டாரா என்றால் இல்லை..! அவரைப்பொறுத்தவரை 'எதையோ' திசைத்திருப்புவதற்காகத் தான் ஏற்றிவைத்த விவாத நெருப்பு எரிந்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே உடனே வேறு ஒரு கேள்விக்கு தாவி விடுவார்.
ஒரு மதத் தலைவருடைய விஷயத்தில் 'இந்துக்களே! (பிராமணர்களைத்தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்) இப்போது தான் நீங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்' என்று அவர் எழுதிய போதே அவருடைய பின்புலம் வெளிப்பட்டு விட்டது என்பது என் கருத்து - இப்போது என்ன தான் 'பெரியாரை நான் முழுமையாக நிராகரிக்கவில்லை' என்று முழுப் பூசணியை எழுத்தில் மறைக்கப்பார்த்தாலும்!.
'அப்படியானால்.... நாங்கள் இஸ்லாம் பற்றி விமர்சிக்கவே கூடாதா...' என்பது 'நேச' குமாருடைய அங்கலாய்ப்பு என்றால் தாராளமாக விமர்சிக்கலாம். சரஸ்வதியை கலையின் பேரால் கொச்சைப்படுத்திய ஹூசைனுக்கு என்ன தண்டனை ? என்று கேட்கலாம். 'பிற மத கடவுள்களை ஏசவோ இழிவுப்படுத்தவோ செய்யாதீர்கள்' என்று போதிக்கிற சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிற முஸ்லிம்கள், ஹூசைனுக்கு தாமே அதிகபட்ச தண்டனைக்கு அரசைப் பரிந்துரைத்திருக்க க்கூடும்
ஆனால் கூடவே மாட்டுத்தோலுக்குப் பகரமாக 5 தலித்துகளை கொலை செய்த கொடியவர்கள் குறித்தும் சுதந்திரத் திருநாட்டிலும் திண்ணியங்களும் மேல வளவுகளும் 'மனு'வின் பேரால் தொடர்வது குறித்தும் உங்கள் பேனா கண்ணீர் சிந்தியிருந்தால் உங்கள் நடுநிலை 'மணம்' இந்த அளவுக்கு நாறாது. பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும் அடக்குமுறை நடந்தாலும் சரியான முஸ்லிம்கள் எதிர்க்கத்தானே செய்வர்.இதில் ஆச்சர்யப்படுவதும் - ஏன் எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்புவதும் எதை மறைக்க....?
தன் இனம் சரியாக நடந்து வரும் போது அதை ஆதரிப்பது தவறில்லை என்று சொன்ன நபிகள் நாயகம் தன் இனம் தவறாக நடந்துக் கொள்ளும் போதும் அதை ஆதரிப்பதுகூடாது-அது அழிவுக்குத்தான் வழி வகுக்கும். அது தான் இனவெறி -- முந்தைய சமுதாயங்கள் இதன் காரணமாகவே அழிந்தன' என்றும் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.
நபிகள் நாயகத்தை டீசண்டான படமாக வரைந்தால் கூட ஓவியர் ஹுசைனை கொலை செய்ய மசூதிகளின் மாடங்களிலிருந்து இறைக்கட்டளை விதிப்பர் என்று அங்கலாய்க்கிற 'நேச' குமாருடைய கவனத்துக்கு ஒரு செய்தி:
அமெரிக்க அரசு நல்ல சிந்தனையாளர்களை கவுரவிக்கும் நன் நோக்கோடு, உலகின் சிறந்த சட்டங்களை வகுத்தளித்தவர்கள் என்று பத்து பேருக்கு தன்னுடைய நாட்டின் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் சிலையை நிறுவி கவுரவித்தவற்றுள் நபிகள் நாயகத்தின் சிலையும் ஒன்று! -ஆனால் முஸ்லிம்கள் இந்த 'கவுரவத்தை' ஏற்றுக்கொள்ளாமல் அமைதியாக உலகமெங்கும் புரட்சி செய்தனர்.சென்னையில் கூட நடந்தது. (அப்போது தான் நானும் அறிவேன்). 'என்னை அளவுக்கு அதிகமாக புகழாதீர்கள்' என்றே வலியுறுத்தி வந்த நபிகளின் வழிமுறைப்பேணும் முஸ்லிம்கள் அப்படித்தான் நடந்துக்கொள்வார்கள். இந்தச் செய்தி நேச குமாருக்கு தெரியாதிருக்காது. ஆனால் இதையெல்லாம் அவர் எழுத மாட்டார். காரணம் அவர் ஏற்றுக்கொண்ட 'கடமை' இதுவல்ல! (அந்தச் சிலை அகற்றப்பட்டதா என்பதை வாசகர்கள் அறியத்தரவும்).
அழித்தொழிக்கப்பட்ட அரபு பாகன்களுக்காக கண்ணீர் சிந்த முன் வருகிற 'நேச' குமாரைப் பாராட்டுகிறேன். அதேசமயம் இஸ்லாத்தின் கையில் வந்த வாள் ஏந்தப்பட்டதல்ல திணிக்கப்பட்டது என்பதையும் (வரலாற்றை அறிந்து) தெளிவுப்படுத்துங்கள். பேராசியர் ராமகிருஷ்ண ராவ்களும் - கவிக்குயில் சரோஜினி நாயுடுக்களும் உங்களுக்கு உதவக்கூடும்.
முஸ்லிம்களின் பயங்கரவாத செயல்கள் குறித்து எழுதும்போது உங்கள் பேனாவுக்கு பயங்கர வாதத்தை எதிர்க்கிற அனைவரும் - முஸ்லிம்கள் உட்பட – ஆதரவு தருவார்கள். ஆனால் 'எவனொருவன் ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற குற்றத்துக்கு ஆளாவான்' என்று சொல்கிற குர்ஆனையே அதற்கு (பயங்கர வாதத்துக்கு) காரணம் காட்டாதீர்கள். (வேடிக்கை என்னவென்றால் - உங்கள் பார்வையில் இஸ்லாம் ஒரு ரவுடி. மற்றவர்கள் 'அடக்க ஒடுக்கமான பெண்'.) பயங்கர வாதத்தை எதிர்க்கும் போது தீர்வு தேடி பயணிக்கிறது போலத் தோன்றும் எழுத்து அபத்தமான காரணத்தை சுட்டும் போது அறிந்தவர்களால் நகைக்கப்படுகிறது. ஒரு நல்ல பேனா சொறிந்து கொடுப்பதற்கு 'வாங்கி'க் கொள்ளப்பட்டதும் விளங்கிக் கொள்ளப்படுகிறது.
நபிகள் காலத்திலும் கஃபா ஆலயம் கைக்கு வந்த பின்னும் கூட பாகன்களை கஃபா செல்ல தடை செய்யவில்லை. (ஹூதைபியா உடன்படிக்கை). முற்றுமாக முஸ்லிமான தேசத்தில் தான் மக்கள் பழைய மூடநம்பிக்கைகளை மறக்க வேண்டுமென்ற நோக்கில் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டனவாம்.
பாமியான் புத்த சிலைகள் உடைக்கப்பட்ட போது அநியாயம் அக்கிரமம் என்று கூக்குரலிடத் தெரிந்தவர்களுக்கு அதே ஆப்கனில் அதே சமயத்தில் பச்சிளம் குழந்தைகள் பாலுக்கும் வழியின்றி தவித்ததையும் சொல்லுங்கள். குழந்தைகளுக்காக உலக நாடுகளில் கையேந்தி உதவி கேட்டும் (ஐ.நா உட்பட) எந்த உதவியும் செய்யாமல், பாமியான் சிலைகளை பராமரிக்க மட்டும் ஐ.நா நிதி அனுப்பியது குறித்தும் எழுதுங்கள். 'அப்படிப்பட்ட சிலைகளை உடைத்தெறிந்து விட்டு குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாமே..' என்று ஈரமுள்ள பின்னூட்டங்கள் வரும். அடுப்பில் சமைக்க அரிசி கேட்டவர்களுக்கு - வீட்டு வாசலில் தோரணம் கட்டி தருகிறேன் என்று தானே உலகம் சொன்னது.
எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆதரிக்கக்கூடாது. இந்துவோ-முஸ்லிமோ- கிறிஸ்தவமோ- எந்த பயங்கர வாதமும் தவறு தான் . ஆபத்து தான்.! கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மைனாரிட்டிக்களின் பயங்கர வாதங்கள் 'எரிவதைப்பிடுங்கினால் கொதிப்பது அடங்கிவிடும்' ரகம் தான் - பெரும்பாலும்.
உதாரணமாக-பாலஸ்தீனர்களுக்கு நீதி கிடைத்து விட்டால் - மத்திய ஆசியாவில் இரத்தம் ஓடாது. ஈராக் உண்மையான சுயாட்சி பெற்று விட்டால் - அங்கும் அமைதி நிலவும். சங்பரிவார்களின் சமூக மேலாதிக்க மனப்பான்மை மாறிவிடுமானால் - இந்தியாவிலும்- மைனாரிட்டிகளும் (மத, ஜாதி அமைப்புகளும் ) மவுனமாகி விடுவார்கள் என்பது என் கணிப்பு.
அதே சமயத்தில் இன்னொன்று- தனி மனிதத் தவறுகளுக்கு மதத்தை காரணம் காட்டுவது அறியாமையை வெளிப்படுத்திவிடும். உதாரணமாக, மாட்டுத்தோலுக்காக மனிதர்களை கொன்றவர்களை கண்டிக்கும் போது அதற்காக இந்து மதத்தை தாக்கி விடக்கூடாது-அந்தக் கொடியவர்களின் மனங்களில் 'மனு'வோ, வருணாசிரமமோ பின்புலமாக இல்லாத பட்சத்தில்.
மசூதிகளில் மறுக்கப்படும் பெண்களுக்கு குரல் கொடுக்கும் முன் மழிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்படும் விதவைகளுக்காக கண்ணீர் விடுவது தான் முதலில் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் சிந்திக்கும் படியே கழகங்களும் சிந்தித்ததன் காரணம் எது முக்கியம் என்று உணர்ந்ததால் தானே. நேச குமார் மட்டும் 'பயங்கர வித்தியாசமாக' சிந்திப்பதன் காரணம் என்னவோ?
'ஒருவேளை, கடவுளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் தவறிவிட்டாலும் - கடவுள் நினைத்தால் உங்களை மன்னிக்கக் கூடும். ஆனால் சக மனிதர்களுக்கு நீங்கள் உங்களின் பொறுப்பை நிறைவேற்றத்தவறினால் - அல்லது அநியாயம் செய்து விட்டால்- அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவனும் உங்களை மன்னிக்க மாட்டான்' - என்று எனக்குத் தெரிந்து இஸ்லாம் தான் சொல்கிறது. மனித உரிமைகளின் உச்சம் இது. இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளையும் உங்கள் பேனா பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
விவாதங்களைத் தொடருங்கள் நேச குமார். ஆனால் காய்த்தல் உவத்தலின்றி எல்லாத்தரப்பு பற்றியும்.
தூசுகளையும் மாசுகளையும் தொடர்ந்து கொட்டிவந்தால் தான் துடைக்கும் கரங்களும் தொய்வின்றி பணி செய்யும்! உண்மை பளிச்சிடும். நன்றி!
Saturday, March 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சுட்டு விரலாரே! சரியாக் சொன்னீர்கள். நேசகுமார் இதனைப் படிக்காமல் இருக்கக் கூடும். எதற்கும் மின் அஞ்சல் அனுப்பி விடுங்கள்.
இந்தக் கட்டுரை நிறைய விழிகளைத் திறக்கவல்லது. எனக்கும் கூட.
உன்னிப்பாக கவனிக்கும் போது – நேசக்குமார் சில அரபு அட்சரங்களை அறிந்து வைத்துள்ள அளவுக்கு இஸ்லாத்தின் மரபு விருட்சங்களை தெரிந்திருக்கவில்லை என்றே விளங்குகிறது. இல்லாவிட்டால்ää ஒதுக்கித்தள்ளப்பட்ட ஹதீஸ்களையும் விமர்சிக்கவென்றே எழுதப்பட்ட அவதூறுகளையும் குப்பையாக முதுகில் சேர்த்துக்கொண்டு களம் இறங்குவாரா?
தனக்கும் - தன் தலைவர்களுக்கும்-ஹீரோக்களுக்கும் சிலை வைக்கவும் கோரவும் பெரும் பிரயாசைகளும் பிரயத்தனங்களும் எடுக்கிற உலகில் முஹம்மது நபிக்கு சிலை வைத்ததை அகற்றச்சொல்லி முஸ்லிம்கள் கோரியது குறித்து நேசக்குமார் நடுநிலையாக சிந்தித்தாலே இஸ்லாம் குறித்த தன் விமர்சனங்களை வாபஸ் பெற்றுவிடுவார். அல்லது ‘நீங்களும் சிலை வைத்துக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று ‘முற்போக்கு (பிடி) வாதம்’! செய்தாலும் செய்வார் – அவர் விளங்குகிற படி அது.
ஹிந்துமதத்தின் பவிஷ்யபுராணத்தில் முஹம்மது நபி குறித்து சில முன்னறிவிப்புகள் உள்ளதாம். தெரிந்தவர்கள் அது குறித்தும் பதிவு செய்யலாமே!
//தூசுகளையும் மாசுகளையும் தொடர்ந்து கொட்டிவந்தால் தான் துடைக்கும் கரங்களும் தொய்வின்றி பணி செய்யும்! உண்மை பளிச்சிடும்.//
மட்டுமல்ல, சோம்பலுடன் எதிலும் பங்கு பெறாமல் இருப்பவர்களையும் எப்பொழுதாவது சுத்தம் செய்ய புதிதாக களமிறக்கும். ஒரு விதத்தில் இஸ்லாம் நேச குமார் போன்றவர்களாலும் நன்றாக உரமிட்டு வளர்க்கப்படுகிறது.
தயவு செய்து சகோதரர் நேச குமார் தனது உளறல்களை நிறுத்தாமல் தொடர வேண்டும் என்பதே என் அவா!. முழு நேரப் பணிக்கு சம்பளம் வேறு இடத்தில் வாங்கினாலும் வேலை செய்வது என்னவோ நமக்காக(இஸ்லாத்திற்காக)த்தான்!
பல ஆயிரம் நன்றிகள் சகோதரர் நேச குமார் அவர்களுக்கும், "எப்படியோ போனவர்களுக்கும்!".
Post a Comment