Sunday, March 13, 2005

தேர்தல் ஆணையரின் தரமான ஆலோசனை.



ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். தேர்தல் நடைபெறும் போது பல்வேறு காரணங்களால் (பெரும்பாலும் வெறுத்துப்போய்) சுமார் 35-40 பேர் வரை வாக்களிப்பதில்லை. மீதமுள்ள 65-70 பேரும் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். அவற்றுள் அதிகபட்ச வாக்குகளை (25-30 தான் இருக்கும்) வாங்கி விடுகிற வேட்பாளர் (கட்சி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது 100 பேர் உள்ள தொகுதியில் பெரும்பான்மையோருடைய (75-70 சதம்) வாக்குகளை பெறாதவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது என்று சொன்னால் அது ஒன்றும் மிகையில்லை. நம் ஜனநாயகத்தின் இலட்சணம் இது தான்.
இந்நிலையில் நமது தலைமை தேர்தல் ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஒரு அற்புதமான யோசனையை முன் வைத்துள்ளார். அதாவது- கட்சி அடிப்படையில் தேர்தலை நடத்துவது-கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் எம்.பிக்கள்-எம்.எல்.ஏக்களை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் நியமித்துக்கொள்வது என்பதாகும்.
இது உள்ளபடியே சிறந்த ஆலோசனை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.காரணம்-இம்முறையை பின்பற்றுவதன் மூலம் அரசியலில் உள்ள குற்றப்பின்னணியை பெருமளவு களையலாம். மேலும் பரவலாக அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்யலாம்.
ஆனால்..வழக்கம் போல அரசியல் வாதிகள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் தான்.
நீங்க என்ன சொல்றீங்க..?

7 comments:

Narain Rajagopalan said...

சுட்டுவிரல், இதனை எழுதலாமென்று இருந்தேன். முந்திக்கொண்டீர்கள், இருந்தாலும் உங்களின் அனுமதியோடு இந்த பதிவினை நான் எழுதும்போது காப்பி எடுத்து கொள்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறும் முறை ஜெர்மனி, இஸ்ரேல் முதலிய நாடுகளில் ஏற்கனவே உள்ளதுதான். நம் அரசியல் சட்டத்தில் கட்சிகளைப் பற்றிக் கூறவேயில்லை. அதாவது நாடாளுமன்றமோ, சட்டசபையோ, பெரும்பான்மை அங்கத்தினர்கள் ஆதரவு உடையவர்களையே ஜனாதிபதியோ, கவர்னரோ ஆட்சியமைக்க அழைப்பார்கள். அவர் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் என்பது தற்செயலாக வந்ததே. அத்தனைப் பேரும் சுயேச்சைகளாக இருந்தாலும் அவர்கள் ஒரு பெரும்பான்மைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
இம்முறையால் இஸ்ரேலிலும் சரி, ஜெர்மனியிலும் சரி, பலக் குழப்பங்கள் வந்துள்ளன. வேறு ஒன்று செய்யலாம். 6 பேர் போட்டியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முதல் இருவருக்கிடையில் இரண்டாம் தேர்தல் நடத்தலாம். முக்கியமாகச் செய்ய வேண்டியது ஒன்று. ஒருவரே பலத் தொகுதிகளில் போட்டியிடுவது தடை செய்யப்பட வேண்டும். இது தேவையற்ற செலவுகளுக்கு வழி வகுக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

சுட்டுவிரல் said...

நன்றி நண்பர்களே!

நாராயண், தாராளமாக இப்பதிவை நீங்கள் நகலெடுத்துக்கொள்ளலாம். நீங்கள் இன்னும் ஆழமாக எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்.
ராகவன், இம்முறையின் சாதக பாதகங்களை முழுவதுமாக அலசி ப்பார்த்து நீங்களும் இதை த்தொடர்ந்தாலென்ன?

Anonymous said...

இது சரியான யோசனைத்தானா?
SAIFULLAH

Anonymous said...

இது சரியான யோசனைத்தானா?

அரசியலில் உள்ளவர்களில் படித்தவர்கள் கலந்திருந்தாலும் அதை தாதாக்கள் தானே இயக்குகிறார்கள் -இந்த யோசனையெல்லாம் கடலில் பெய்த மழைதான்.


-லால்பேட்டை சைஃபுல்லாஹ்

நாலாவது கண் said...

சுட்டுவிரல்,

தேர்தல் ஆணையர் பரிந்துரைக்கும் முறை... அவரது எதிர்பார்ப்பு.... அதை வரவேற்கும் உங்கள் விருப்பம்... இதிலெல்லாம் குறையிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நமது அரசியல்வாதிகளின் இன்றைய மனப்போக்கில்... வாரிசு அரசியலைப் புகுத்த முயலும் அவர்களது அணுகுமுறையில் - நாளை என்ன நடக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

கட்சி அடிப்படையில் இத்தனை இடங்கள் என்று ஒரு கட்சிக்கு முடிவானதும், அந்த இடங்களில் யாரை அமர்த்துவது என்பது புதிய முறைப்படி அந்தந்த கட்சித் தலைவர்களின் இறுதி முடிவு போல ஆகிவிடும். அந்தமாதிரி நேரத்தில் திமுகவில் யார் பதவிகளைப் பெறுவார்கள்...? அதிமுகவில் எப்படியிருக்கும்? ஏன் காங்கிரஸில் கூட பெரிய மாற்றுக்கதைகள் இருக்காதே! கிச்சன் கேபினெட்டில் உள்ளவர்கள்தான் பதவி பெறுவார்கள். மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரிந்தாலே ஒழிந்தோம். கட்சிகளில் நடக்கும் தேர்தல்கள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்தானே! இதே கதைதான் பாஜகவிலும். இன்றைய நிலைக்கு குஜராத் என்றால் மோடியை எதிர்ப்பவர்கள், அவ்வளவுதான் காலி! லல்லு வேறு யாருக்கெல்லாம் பதவி கொடுப்பார்.

ஒரு உதாரணத்துக்கு சொல்கிறேன். முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தார் என்பது குறித்து கேள்விகளுக்கு இடமேயில்லை. ஆனால் அவருடன் இருந்து பணியாற்றி, நீண்ட காலம் அனுபவமும் பெற்ற டி.ஆர் பாலு மற்றும் தயாநிதி மாறனில் யாருக்கு இன்று மத்திய அளவில்.... டில்லியில் அந்தஸ்து? யாருக்கு முதலிடம்? ஏன் இப்படி? இன்றைக்கு பாலுவுக்கு தரப்பட்டுள்ள இடம் கூட இப்போது உடனடியாக அவரைக் கழட்ட முடியாது என்பதால் தான். இது குறித்து அரசியல் கிசுகிசுக்களை படித்திருப்பீர்கள். அதில் உண்மையில்லை என்று நினைக்கிறீர்களா? ஆனால் இது இன்றைக்கு! நாளைக்கு என்ன நிலை?

அதிமுகவிலும்...இப்படித்தான் இருக்கும். 'சின்னம்மா' வகையறாக்களின் ராஜ்யம் மறுபடியும் கொடிகட்டாது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா?

ஆனால் - இன்று ஆட்கள் யார் என்று தொகுதி மக்களிடம் அடையாளம் காட்டும் முறை... மக்களுக்கு முன்னதாக அறிவிக்கும் முறையிருப்பதால்தான் வெங்கடேச பண்ணையார் மனைவி போன்ற கொஞ்சமும் தொடர்பில்லாத ஆட்களுக்கும் கூட வாய்ப்புகள் பெற வழி இருக்கிறது. இங்கே வெங்கடேச பண்ணையார் மனைவி என்பது ஒரு அடையாளம்தான். அந்தந்த பகுதிகளில் மக்கள் செல்வாக்கு யாருக்கு... எந்த நபருக்கு வாய்ஸ்.. அதை உடைக்க வேறு வழிகள் என்ன? என்று ஆராய்ந்து பரவலாக எல்லா பகுதி, பிரிவு, சமூகத்தவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க - தற்போது தேர்தல் ஆணையர் சொல்லும் புதிய முறையில் வழிகள் இருக்கா...? தெரியவில்லை. அது, இல்லாவிட்டால் இன்னொருவகையான சர்வாதிகாரத்துக்குத்தான் புதியமுறை வழி வகுக்கும். இந்த விஷயங்கள் பற்றி தெரியாமல் மாற்றம் என்று எந்த முடிவையும் எடுக்க முடியாது; கூடாது என்பது என் கருத்து.
- சந்திரன்

சுட்டுவிரல் said...

நாலாவதுகண் சந்திரன்,

உங்கள் வாதம் 'கிச்சன் காபினெட்டில் உள்ள்வர்கள் தான் வருவார்கள் என்பது விவாதிக்கப்படவேண்டியது என்று நினைக்கிறேன் காரணம், தேர்தல் கமிஷன் அந்த ஒரு ஒட்டையை அடைக்கும் வழியாக பல்வேறு யோசனைகள் முன் வைக்கும் சாத்தியம் இருக்கிறதல்லவா