Monday, November 14, 2005

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? ----- 2

முன் பதிவின் தொடர்ச்சி...

பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் என்ற பெயரில் அவர்கள் கருதப்படுகிறார்கள். என்னே ஒரு சமூக அவலம்! இன்று அங்கு திருமணம் புரிபவர்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவுக்கு குறைந்துபோய் விட்டது.

ஆக, மனிதன் தன் உடலியல் தேவைகளை எந்த ரீதியிலாவது நிறைவேற்றிக் கொள்ளவே செய்கிறான். அதை முறைப்படுத்துவதே இஸ்லாத்தின் நோக்கம். கட்டுப்பாடற்ற உறவுக்கு வழிவகுக்கும் சமுதாயங்களில்தான் பாலியல் நோய்கள் அதிக விகிதத்தில் காணப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட பலதாரமணம் ( Polygyny ) சமூகத்தை சீரழிக்கும் பாலியல் நோய்க்கு மாற்றாகவும் அமைய முடியும்.

பலதாரமணம் ( Polygyny) நாம் வாழும் சமுதாயத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கிறது எனலாம். மேலைக் கலாச்சாரத்தில் , தனக்குத்தானே சட்டங்களை வகுத்துக் கொண்ட மனிதன் பலதார மணத்தை தடுக்கப்பட்ட ஒன்றாகவே வைத்துக் கொள்ள முயல்கிறான். காரணம் , முறையாக பலதாரமணம் செய்து கொள்ளும்போது மனைவியருக்கு அவர்களுடைய உரிமைகளைக் கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறான். அவளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கு செலவழிக்க வேண்டியது அவனது கடமையாகி விடுகிறது. இந்தக் கடமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பலதாரமணத்தை தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொள்கிறான். பலதாரமணத்தை தடை செய்வதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் கேள்விக்குறியாகவே ஆகிவிடுகிறது.

முறையற்ற உறவின் மூலம் பிறந்த பல இலட்சக்கணக்கான பிள்ளைகளின் எதிர்காலம் சூன்யமாகவே இருந்து வருகிறது. இத்தகைய பிள்ளைகள் தனது பிறப்புக்குக் காரணமானவர்களின் அரவணைப்புக் கிடைக்காததன் பின்ணணியில் தவறான பாதைக்கு திசை திருப்பப்பட்டு எதிர்காலத்தில் குற்றவாளிகளாக, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். இதுவும் பலதாரமணத்தை சட்டபூர்வமாக்காததால் ஏற்படும் பாரதூரமான தீய விளைவுகளில் ஒன்று.

இதுதான் பலதாரமணத்தை ஆதரிக்கக் காரணமா? என்றால், இது மட்டுமல்ல. இதைவிட மிக முக்கிய இயற்கைக் காரணம் ஒன்று உண்டு. அதுதான் உலகில் ஆண்-பெண் விகிதத்தில் இயற்கையாக காணப்படும் சமச்சீரற்ற போக்கு. ஆண்-பெண் இறப்பு விகிதத்திலும் மனித சமுதாயத்தில் சமச்சீரற்ற நிலை காணப்படுகிறது.

உலகம் முழுவதும் பெண்களின் விகிதம் ஆண்களின் விகிதத்தை விட எப்போதும் அதிகமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், (இஸ்லாமியக் கருத்துக்களை மறுத்துரைப்பவர்களின் ஊற்றுக்கண்ணாக அமெரிக்கா இருப்பதால் அதிலிருந்தே விளக்கத் தொடங்குவோம்) அங்கு ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 7.8 மில்லியன் அதிகமாகக் காணப்படுவதாக ஒரு புள்ளி விவரக் கணிப்பு கூறுகிறது. நியூயார்க் நகரில் மட்டுமே ஒரு மில்லியன் என்ற அளவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் விஞ்சி நிற்கிறார்கள். இவ்வாறு மிதமிஞ்சி இருக்கும் பெண்களுக்கு திருமண உறவின் மூலம் கணவர்களை அடையும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதிலும் அங்குள்ள ஆடவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓரினப்புணர்ச்சி (Sodomites ) கொண்டவர்களாக இருப்பதாக அப்புள்ளி விவரம் மேலும் கூறுகிறது. இத்தகைய ஆண்கள் திருமண உறவுக்கு பெண்களை நாடுவதில்லையென்பதால் இங்கும் அதிகப்படியாக இருக்கும் பெண்களுக்கு திருமணம் மூலம் ஆண் துணை கிடைப்பதில் தேக்கநிலை ஏற்படுகிறது. இத்தகைய நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது . பிரிட்டனில் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் , ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள். இந்த விகிதாச்சார வேறுபாடு ரஷ்யாவில் இன்னும் அதிகமாக 9 மில்லியன் என்ற அளவில் இருந்து வருகிறது.

மேற்கண்ட நிலைகளில் ஒரு மாறுதலாக இந்தியா போன்ற வெகு சில நாடுகளில் மட்டும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்கிறது. இதற்கும் ஒரு சமூக அவலமே காரணமாக இருக்கிறது. பெண் குழந்தை பிறப்பதை தனக்கு இடப்பட்ட சாபமாகக் கருதும் இந்திய சமூகம் சற்று காலத்திற்குமுன் வரை ஏராளமான பெண் குழந்தைகளை அவை கண்ணைத் திறந்து பார்ப்பதற்குள் மண்ணைத் தோண்டி புதைக்கும் அவலத்தினை அரங்கேற்றி வந்ததை நாமறிவோம். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் துணை கொண்டு கருவறையிலேயே அதற்கு கல்லறை கட்டுவதிலும் இந்தியாவே முன்ணணியில் நிற்கும் கொடுமையும் நாமறிந்ததே.

அப்படியானால் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கலாமே என்று குதர்க்கமாக சிலர் வாதம் செய்யலாம். ஆனால் , இத்தகைய திருமணம் விபச்சாரத்தின் மறுவடிவமாகத்தான் இருக்க முடியும். குழந்தை தன் தாயிடம் தனது தந்தை யாரென கேட்கும்போது , இதோ இவர்தான் உன் தந்தை; அல்ல.. அல்ல.. அதோ அவர்தான் உன் தந்தை; அல்லது வேறொருவராகக் கூட இருக்கலாம் என்றுதான் சொல்ல முடியும். இத்தகைய அவல நிலையை எந்த மகன் அல்லது மகள் விரும்ப முடியும் ? No one can wishes good for mankind except the Creator of the mankind.

உலகில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை மிகைத்து நிற்பதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. பொதுவாக ஆணும், பெண்ணும் இயற்கையில் சமமாகவே பிறந்து வந்தாலும், மனித சமுதாயத்தில் பெண்ணினத்தின் நோய் எதிர்ப்புத் திறன் ஆணினத்தின் நோய் எதிர்ப்புத் திறனை விட மிக அதிகம். இதன் காரணமாகவே , குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாகக் காணப்படுகிறது. வயது முதிர்ந்த பருவத்திலும் கூட இதே நிலையே காணப்படுகிறது. நம்மைச் சுற்றி நோக்கினால் , தாத்தாக்களை விட பாட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதைக் காண முடியும்.

பெண்களின் விகிதம் அதிகமாகக் காணப்படுவதற்கு வரலாற்று நெடுகிலும் நடைபெற்று வரும் போர்களும் மற்றுமொரு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. போர்களில் அதிகம் ஈடுபடுவதும், அதில் இறந்து போவதும் ஆண்களாகவே இருக்கிறார்கள். நவீன காலப் போர்களில் பெண்களும் பங்கு வகிக்கவே செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் விகிதாச்சாரம் மிகக் குறைந்த அளவாகவே காணப்படுகிறது. இவ்வாறு போர்களில் கொல்லப்படும் ஆண்களின் விதவைகளுக்கு இந்த சமுதாயம் காட்டும் தீர்வு என்ன? திருமணமாகாத ஆண் துணையைப் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தகைய பெண்களுக்கு இருவித வாய்ப்புகள் மட்டுமே காணப்படுகிறது. ஒன்று, அவர்கள் ஏற்கனவே திருமணமான ஆணுக்கு மற்றொரு மனைவியாக சம்மதிப்பது ; அல்லது விபச்சாரத்தைத் தேர்ந்தெடுப்பது. இதில் கண்ணியமான பெண்கள் முதலாவதையே தேர்ந்தெடுப்பார்கள்.

இத்தகைய ஒரு சூழ்நிலைதான் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் ஏற்பட்டது. நேசநாடுகள் ஜெர்மனியை வெற்றி கொண்டு போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோது , அங்கு 73 இலட்சம் பெண்கள் அனாதையாகிப் போனார்கள். அதில் 33 இலட்சம் பெண்கள் போரில் கொல்லப்பட்டவர்களின் விதவைகள். அந்த நேரத்தில் ஜெர்மனியில் 20-லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்களில் 167 பெண்களுக்கு 100 ஆண்கள் என்ற விகிதத்திலேயே இருந்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. வல்லமையை நிரூபிப்பதற்காக ஏற்பட்ட போரில் வாழ்க்கையை இழந்த ஏராளமான இளம் பெண்களும், விதவைகளும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்களிடம் சில ரொட்டித் துண்டுகளுக்காக தன் கற்பை விலை பேசிய அவலத்தையும் வேதாந்தம் பேசும் இவ்வுலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது.

இஸ்லாம் அரேபியாவில் பரவத் துவங்கிய காலத்திலேயே பலதாரமணத்தை ( Polygyny) அனுமதித்ததற்கு இதுபோன்ற ஒரு சூழ்நிலையே காரணமாக அமைந்தது. இஸ்லாம் தன் ஒளியைப் பரப்பத் துவங்கியபோது அதன் மீதும், அதனாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தங்களால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றோர் அனாதரவாக நிற்க, அவர்களைக் கைப்பற்றிய எதிரிகள் தம் விருப்பம்போல் அவர்களைப் பாவிக்கலாயினர்.

முஸ்லிம் தரப்பு ஆண்களில் பலபேர் போருக்குச் சென்று மடிந்துவிட, உறவினர்களே எதிரிகளாக இருந்த அந்தக் காலகட்டத்தில், அவர்களுடைய பெண்டிர் திக்கற்று நின்றனர். அதே வகையில், கொல்லப்பட்ட எதிரிகளின் பெண்டிரும் கைதிகளாய் பிடிபட்டு நிற்க, அவர்களைத் தங்க வைக்க ஜெயிலோ, கண்காணிக்க ராணுவமோ, போலீஸ் படையோ, வழக்குகளை விசாரிக்க கோர்ட்டுகளோ, நீதிபதிகளோ, உணவு, உடை அளிக்க பொது நிதியோ இல்லாத காலம். போரில் அதிக ஆண்கள் இறந்து பட்டதால் பெண்களே அளவுக்கு மேல் மிகைத்திருந்த காலம். இத்தகைய சூழ்நிலையின் பின்ணணியில்தான் பரிகாரமாக பலதாரமணம் ( Polygyny ) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆதரவற்று நிற்கும் இத்தகைய பெண்களை பலதாரமணம் கொண்டு அரவணைக்க வேண்டுமா ? அல்லது சமூகச் சீர்கேடுகளின் பக்கம் நெட்டித்தள்ள வேண்டுமா ?
இப்போது சொல்லுங்கள். பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

Tuesday, November 08, 2005

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா?


இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 'பலதாரமணம் ' (Polygyny) உள்ளது.

உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக 'பலதாரமணம் ' (Polygyny) என்பதும் இருக்கிறது. எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு அது ஒரு கடினமான சப்ஜெக்ட் அல்ல. பலதாரமணத்தின் நோக்கத்தையும் , அது செயல்படுத்தப்படுவதின் காரண காரியத்தையும் விளங்கிக் கொள்வது அப்படி ஒன்றும் சிரமமான ஒன்றல்ல.

மேலும் ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால் , எந்த சமூகத்தை நோக்கி பலதாரமண எதிர்ப்பு என்ற ஆயுதம் வீசப்படுகிறதோ அந்த சமூகத்தில் மற்ற சமூகங்களை விட பலதாரமணம் குறைவான சதவீதத்திலேயே இருந்து வருவதுதான். மற்ற சமுதாயத்தவரால் 'வைத்து 'க் கொள்ளப்படுகிற பெண்களின் எண்ணிக்கை கணக்கிடப்படாமல் போவதும் , முஸ்லிம்களால் சட்டபூர்வமாக (மிகக் குறைந்த சதவீதத்திலிருந்தபோதும்) மனைவியாக்கிக் கொள்ளப்படுபவள் முறையான கணக்கெடுப்பில் சேர்ந்து விடுவதும்தான் இந்த சமுதாயத்தை இந்த விஷயத்தில் முன்னிறுத்தி விடுகிறது. தன் முதுகில் இருக்கும் பெரிய வடுவை விட அடுத்தவன் முகத்தில் இருக்கும் சிறிய மச்சம் எளிதில் பார்வைக்கு கிடைப்பது போல்தான் இதுவும்.

முதலில் பலதாரமணத்தின் அடிப்படையையும் , வரலாற்றில் அதன் ஆளுமையையும் புரிந்து கொள்வது நல்லது.

பலமணம் ( Polygamy) என்பது இரு வகைப்படும். ஒரு ஆண் பல மனைவியரைக் கொண்டிருப்பது இதில் முதல் வகை. அதற்கு ஆங்கிலத்தில் Polygyny என்று பெயர். ஒரு பெண் பல கணவன்களைக் கொண்டிருப்பது இரண்டாவது வகை. இதனை ஆங்கிலத்தில் Polyandry என்று சொல்வார்கள். ஐந்து ஆண்களை கணவர்களாகக் கொண்டிருந்த மஹாபாரதக் கதையின் நாயகி பாஞ்சாலியையும் , விவாகரத்து பெறாமலே அடுத்தடுத்து ஆண்களைத் திருமணம் புரிந்து கொள்ளும் மேற்கத்திய கலாச்சார யுவதிகளையும் இரண்டாவது வகைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.



மேற்கண்ட இரு வகைகளில் முதல்வகை மட்டுமே இஸ்லாத்தில் நிபந்தனையோடு ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது வகையானது பெண்ணுரிமை பேசும் இன்றைய புரட்சிப் பெண்களால் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது தெளிவு.



இந்த பலதாரமணம் ( Polygyny) என்பது அரேபியாவில் இஸ்லாம் அறிமுகமான பிறகுதான் இவ்வுலகில் நடைமுறைக்கு வந்தது என்று கூறுவது வரலாற்று அபத்தம். இதற்கு மாறாக வரலாற்றில் தொன்று தொட்டு பலதாரமணம் வழக்கிலிருந்து வந்தது என்பதுதான் உண்மை. ஆப்ரஹாம் மூன்று மனைவிகளையும் , சாலமன் நூற்றுக்கணக்கான மனைவிகளையும் பெற்றிருந்ததை வரலாறு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. யூத மதத்தில் கூட Gersham ben yehudah என்ற மதகுரு அதற்கு எதிராக ஒரு பிரகடனத்தை வெளியிடும் வரை ஆண்களின் பலதாரமணம் நடைமுறையில் இருந்தே வந்திருக்கிறது. இந்துக்களின் வேதங்களில் குறிப்பிடப்படும் ராமனின் தந்தை தசரதன் பல மனைவிகளைக் கொண்டிருந்ததாகவும் , இந்துக்களின் கடவுளாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகவும் அவர்களின் வேதங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது.



' இஸ்லாத்தில் பெண்களின் நிலை' என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி செய்த ஒரு இந்திய கமிட்டி , 1975 -ல் சமர்ப்பித்த தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது: " 1951 முதல் 1961 வரையிலான பத்தாண்டுக் காலத்தில் நடைபெற்ற பலதாரமணங்களில் , முஸ்லிம்களிடையே நடைபெற்றவை 4.31 சதவீதமாகவும், இந்துக்களிடையே நடைபெற்றவை 5.06 சதவீதமாகவும் இருந்தது". இந்தியாவில் முஸ்லிம்களைத் தவிரவுள்ள யாவருக்கும் பலதாரமணம் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும்கூட முஸ்லிம்களை விட இந்துக்களே பலதாரமணத்தில் முன்ணணியில் நிற்பதைத்தான் மேற்கண்ட கணக்கெடுப்பு சுட்டுகிறது. 1954-ல் இந்திய நாடாளுமன்றம் 'ஹிந்து திருமணச் சட்டம்' என்ற ஒன்றை நாட்டில் அறிமுகப்படுத்தும்வரை இந்துக்களிடையே பலதாரமணம் இயல்பாகவே நடைபெற்று வந்திருக்கிறது. இன்றும்கூட, இந்திய சட்டத்தில் மட்டுமே இந்துக்களின் பலதாரமணம் தடை செய்யப்பட்டிருக்கிறதேயொழிய அவர்களின் வேதங்களில் அவையொன்றும் தடுக்கப்படவில்லை.

இஸ்லாம் ஒன்றும் பலதாரமணத்தை கட்டுப்பாடற்ற ஒன்றாக திறந்து விட்டு விடவில்லை. மனிதனின் உணர்வுகளையும் , சமச்சீரற்ற ஆண்-பெண் விகிதாச்சாரத்தையும் , அதனால் ஏற்படக்கூடிய சமூகக் குழப்பங்களையும் கருத்திற் கொண்டே இஸ்லாம் பலதாரமணத்தை வாய்ப்பளித்திருந்தாலும் கூட அதற்குத் தேவையான கட்டுப்பாடுகளையும் விதிக்கத் தவறவில்லை.

உலகப் பொதுமறை அல்-குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது:

" அனாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னாங்காகவோ ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள்- இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

(அத்தியாயம் 03 ; வசனம் 04)

பலதாரமணத்தை ஆகுமாக்கிக் கொள்ள இஸ்லாம் விதிக்கும் முதல் கட்டுப்பாடு மனைவியரிடையே நீங்கள் நீதமாக நடக்க வேண்டும் என்பது. அது உங்களால் இயலவில்லையென்றால் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் அறிவுரை கூறுகிறது. மனிதன் இயற்கையிலேயே ஆசையின் வழி நடக்கும் பலவீனமான மனங்கொண்டவன் என்பதாலேயே மனைவியரிடையே அவனால் முழுவதும் நீதமாக நடக்க முடியாது என்பதையும் அல்-குர் ஆன் சுட்டிக் காட்டுகிறது.

" நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்துதல் சாத்தியமாகாது. ஆனால் , (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போன்று ஆக்கி விடாதீர்கள் ; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால் , நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் , மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்".

(அத்தியாயம் 04; வசனம் 129)

எனவே , பலதாரமணம் ( Polygyny) இஸ்லாத்தில் கட்டாயமாக விதிக்கப்பட்டதோ அல்லது வலியுறுத்தப்பட்டதோ அல்ல; அனுமதியளிக்கப்பட்ட ஒன்று மட்டுமே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் திருமணம் புரிவதும், பிரம்மச்சாரியாக வாழ்வதும் எப்படி அவனது விருப்பத்தின்பாற்பட்டதோ, அதுபோலவே அவன் ஒரு பெண்ணைத் திருமணம் புரிவதும், நான்கு பெண்களைத் திருமணம் புரிவதும் இஸ்லாத்தின் பார்வையில் தனிமனிதனின் விருப்பத்தின்பாற்பட்டதே. பலதாரமணத்தை கடுமையாகவும், கண்மூடித்தனமாகவும் விமர்சித்து வரும் இன்றைய சமூகத்தில் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி ஒழுக்க வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டிருப்பது எந்த வகை நியாயம் என்பது விளங்கவில்லை.

முதல் வகையில் ஒரு பெண் தனது அனைத்து உரிமைகளையும் தன்னை மணக்கும் கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வது சட்டபூர்வமாக்கப் படுகிறது. இரண்டாம் வகையிலோ , அந்தப் பெண் தன்னிடம் 'வந்து' போகிற ஆண்களிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது. அத்தோடல்லாமல், அந்தப் பெண் சமூகத்தில் மதிப்பிழந்தும், பல்வேறு நோய்களின் காப்பகமாகவும் ஆகி விடுகிறாள். இதில் எது பெண்களுக்கு சுதந்திரத்தையும் , உரிமையையும் பெற்றுத் தருகிறது என்பதை நியாயவான்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இனி, பலதாரமணத்தை சமூகவியல் கண்ணோட்டத்தில் ஏன் சரி காண்கிறோம் என்பதைப் பார்ப்போம்.
(தொடர்வேன், இன்ஷா அல்லாஹ்)

Wednesday, October 19, 2005

அமெரிக்க முஸ்லிம்களின் தொலைக்காட்சி


ஒரு தகவலுக்காக!

அமெரிக்க முஸ்லிம்களின் தொலைக்காட்சி ஊடகம்

Sunday, July 31, 2005

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

அரேபியாவில் ஓடுமா ஆறுகள்......?

Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.
"அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?" .
எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- "ஆம்'! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது".

அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
"எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா.......?"
ஆச்சர்யமூட்டும் வகையில் அவரிடமிருந்து பதில் வந்தது-
"ஆம்! அரேபியா மீண்டும் பசுமையாக செழித்துவிளங்கவும் ஆறுகள் ஓடவும் செய்யும் என்பது அறிவியல் பூர்வமான எதிர்கால உண்மை தான்!"
ஆச்சர்யம் பொங்க மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டது: "எப்படி சொல்கிறீர்கள்......?"

"புதிய பனியுகம் நிஜத்தில் தொடங்கி விட்டது. வடதுருவ பனிப்பாறைகள் உருகத் தொடங்கி விட்டன. அவை அரேபிய தீபகற்பம் நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. இதன் அறிகுறிகளே குளிர்காலங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நன்குதென்படுகின்றன. இது அறிவியற்பூர்வமான உண்மை"

"இது குறித்து 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மது நபி(ஸல்) அறிவித்து விட்டதை அறிவீர்களா...?
ஒரு நபிமொழி (ஹதீஸ்) இவ்வாறு தெரிவிக்கிறது:
அரேபியா மீண்டும் மேய்ச்சல் நிலங்களாகவும் - ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகாத வரை இறுதி நாள் (உலக முடிவு நாள்) ஏற்படாது.(Sahih Muslim)

இப்போது சொல்லுங்கள்: 'நபி முஹம்மதுவுக்கு அரேபியா சோலைகளாக ஆறுகளுடன் இருந்ததை யார் அறிவித்திருப்பார்கள்..?

பேராசிரியர் சிறிது யோசனைக்குப்பின் சொன்னார்: "ரோமானியர்களாக இருக்கலாம்"

"நல்லது! மீண்டும் உலக முடிவு நாளுக்கு முன் அரேபியா மேய்ச்சல் நிலமாகவும் ஆறுகள் ஓடக்கூடியதாகவும் ஆகும் என்பதை முஹம்மது நபி(ஸல்) அவர்களால் எப்படி கூற முடிந்தது.?"

உண்மையை எதிர்கொண்ட Dr. Coroz தைரியமாகவும் வெளிப்படையாகவும் சொன்னார்:

"அது நிச்சயம் ஒரு தெய்வீக வெளிப்பாட்டினால் தான் இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.."

மேலும் அவர் சொன்னவை:
"ஒரு எளிய மனிதனுக்கு குர்ஆன் எளிய விஞ்ஞானத்தையே கூறுகிறது. 1400 ஆண்டுகளுக்கு முன் நிரூபிக்க வழியின்றி சாதாரணமாக கருதப்பட்ட அதன் விஞ்ஞான கருத்துக்களை இன்று தான் விளங்க வழியுண்டு என்பது உண்மை தான்.
அப்படித்தான் புவியின் தோற்றம் புவியின் அமைப்புகளை குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ளவைகளை நான் பார்க்கிறேன்.'

Dr.Coroz அவர்கள் விருப்பு வெறுப்பற்று பார்த்த
பார்வையினால் கிடைத்த நிஜம் இது.

"நிச்சயமாக (வேதமாகிய) இது, உண்மையானது தான் என்று அவர்களுக்கு தெளிவாகும் வரையில்,(உலகின்) பல பாகங்களிலும், அவர்களிலும் நம்முடைய அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் காண்பிப்போம்; (நபியே!) உமது இரட்சகனுக்கு நிச்சயமாக அவன் ஒவ்வோரு பொருளின் மீதும் (அதுபற்றி நன்கறிந்து) சாட்சியாக இருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?" (அல் குர்-ஆன்: 41:53)


(பி.கு: இக்கட்டுரையை இங்கு பதிவதன் நோக்கம்: 'கோடானுகோடி மக்களால் ஏற்கப்பட்டு பின்பற்றப்படும் குர்ஆனை 'இஸ்லாமிய எதிரிகளின் துணைக்கொண்டு கொச்சைப்படுத்திப் பார்த்து தன் வக்கிர மனத்தை திருப்திப்படுத்திக்கொள்பவர்கள் இனியேனும் 'வெறுப்புணர்வை' கழற்றி வைத்துவிட்டு 'விஞ்ஞானப் பார்வையோ (அ) குறைந்தபட்சம் நேர்மறை பார்வையோ அணிந்து அதைப் பார்க்கட்டும் என்று தான்).


Science4islam

Sunday, April 24, 2005

உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்

'சரிவரத் தெரிந்துக்கொள்ளாமல் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பேசி விடாதே!அது உன் அறியாமைக்கு விளக்கமாகி விடும்' – முஸ்லிம்களின் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்கள் தன் மகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுகிற வாசகங்கள் இவை!

குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது: 'தொழுகையாளிகளுக்கு கேடு தான்' என்று!இதை வைத்து இஸ்லாத்தின் இறைவன் தொழுகையாளிகளைச் சபிக்கிறான் என்று விமர்சனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இஸ்லாமைப் பற்றிய இன்றைய விமர்சனங்களும் - அரைகுறையாக!

இஸ்லாம் என்கிற நெறி எல்லா துறைகளிலும் எல்லா வகை மனிதர்களிடத்திலும் (முஸ்லிம்களாயினும் முஸ்லிம்கள் என்ற பெயரிலோ வேறு பெயர்களிலோ வாழ்பவர்களாயினும் நாத்திகர்களாயினும்) தனது தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது.

இன்றைக்கும் அறிஞர் பெருமக்களிடையே அதிக விவாதத்துக்கு உள்ளாவதாகவும் இயல்பான ஈர்ப்புத்தன்மை வாய்ந்த ஒன்றாகவும் அதன் காரணமாகவே மிகுந்த பொறாமைக்காளானதாகவும் இஸ்லாம் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீத வளர்ச்சி பெற்றது என்கிற புள்ளிவிவரமும் - செப் 11 நிகழ்வுக்குப்பின் இஸ்லாமை ஆராயத்தலைப்பட்டு அமெரிக்காவில் மட்டுமே 80,000க்கும் மேலானோர் இரண்டு வருட காலக்கட்டத்தில் இஸ்லாமை ஏற்றனர் என்று சென்னையிலுள்ள அமெரிக்கத் துணை தூதரக அதிகாரி ஏஞ்சலா வில்லியம்ஸ் குறிப்பிடுவதும் சிந்திக்கத்தக்கது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறையாக அதுவும் சிலுவைப் போர்களின் சமயத்தில் இஸ்லாமை மனம் போன போக்கில் விமர்சித்து- அதன் பிம்பத்தை உடைத்தெறிய கங்கணங் கட்டிச் செயல்பட்ட சதிகார எழுத்துக்களை வாசித்து பின் அதையே தனது நவீன விமர்சனமாக 'ஜல்லி' அடிக்கிற நபர்கள்-அவ்வாறு இஸ்லாமை விமர்சிப்பதன் மூலம் தன்னை அறிவுஜீவியாக (இஸ்லாமை அறியாதவர்களிடம்)காட்டிக்கொள்வதும் உண்டு.

(சிலுவைப்போர்களின் சமயத்தில் கிறித்தவர்களால் உமிழப்பட்ட துவேஷங்களுக்காக மறைந்த போப் ஜான்பால் அவர்கள் மன்னிப்புக் கோரியதும் - குர்ஆனை பகிரங்கமாக முத்தமிட்டு இஸ்லாமின் சிறப்புகளை உலகறியும் வண்ணம் உரத்துப் பேசியதும் சமீப கால சரித்திரம் எனினும் அந்த துவேஷ விஷம் மேற்குலகில் முழுமையாக முறிந்துவிட்டதாகவோ அதன் பாதிப்பு கீழை தேசத்து 'அறிவுஜீவி'களின் மூளையில் ஏறவேயில்லை என்றோ சொல்லி விட இயலாது).

முஹம்மதிய மதத்தவர்கள் என்று முஸ்லிம்களைக் குறித்து சொல்லத் தொடங்கியதும் இந்த காலக் கட்டத்தில் தான்.

இயேசு கிறிஸ்துவை கடவுளாக்கியவர்கள் கிறிஸ்தவர்கள்
கவுதம புத்தனை கடவுளாக்கியவர்கள் புத்த மதத்தினர்.
ஆனால் முஸ்லிம்கள் முஹம்மது நபியை என்னதான் உயிரினும் மேலாக நேசித்தாலும் கடவுள் தன்மை பெற்றவராக கருதுவதில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்களே அதற்கான வழியை பூரணமாக அடைத்து விட்டார்கள்.

இஸ்லாம் என்கிற இந்த மார்க்கமானது கி.பி ஆறாம் நூற்றாண்டில் முஹம்மது நபியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக முஹம்மது நபி(ஸல்) அவர்களைக்கொண்டு முழுமைப்படுத்தப்பட்ட நெறியாகும்.

'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே நாம் அனுப்பினோம்! – அவ்வாறு அனுப்பப்படாத ஒரு சமுதாயமும் இல்லை' என்று திருக்குர்ஆன் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அதை வைத்துப்பார்க்கும் போது இந்தியத்திருநாட்டுக்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கும் கூட திருத்தூதர்களை இறைவன் அனுப்பியிருக்கத்தான் வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல உறுதியானதே.

ஹிந்து மதத்தின் ரிக் மற்றும் அதர்வண வேதமும் பவிஷ்ய புராணமும் முஹம்மது நபியைப் பற்றிய துல்லியமான தெளிவான முன்னறிவிப்புகளை தந்திருப்பதைப் பார்க்கும் போது குர்ஆனுடைய மேற்கண்ட வசனத்தை அது மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

அப்படி இந்தியாவுக்கோ அல்லது அதன் பல சமூகங்களில் ஒன்றான தமிழ்ச் சமூகத்துக்கோ அனுப்பப்பட்ட தூதுவர் இவர் தான் என்று யாரையும் சுட்டுவதற்கு வேதங்களிலோ வரலாற்றிலோ ஆதாரமான முகாந்திரங்களில்லை என்பதால் யாரையும் நாம் அறுதியிட்டு கூறுவதற்கு வழி ஏதுமில்லை.

எது எப்படி இருப்பினும் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன் ஒன்றே இஸ்லாம் என்கிற நெறியின் இறுதியான பதிப்பு என்பதும் அதுவே இறை மன்றத்தின் நடைமுறைச்சட்டம் என்பதுமே முஸ்லிம்களின் முதன்மை நம்பிக்கை. குர்ஆனில் பெயர் காட்டப்படுகிற ஒரு சில பிற வேதங்களான இன்ஜீல் (பைபிள்) தவ்ராத் (யூத வேதம்) ஆகியவற்றையும் வாசித்துப்பார்க்கும் படி இன்றைக்கும் இஸ்லாம் சொல்லிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அவற்றில் (முந்தைய வேதங்களில்) சுவை கருதியோ சுயநலம் கருதியோ மனித கையாடல்கள் நடந்துவிட்டதையும் அது அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.

போதிக்க வந்த நூல்கள் தனது பாதையிலிருந்து விலகி தனி மனித துதியையும் கற்பனை ரசத்தினையையும் மிதமிஞ்சி உற்பத்தி செய்கிற வெறும் 'களஞ்சியங்'களாகவே இன்று கருதப்படுவதை 'கோபியர்களைக் கொண்டு கொச்சைப்படுத்தப்படும் கிருஷ்ணனை வைத்தும் - ராமன் சீதை உறவுமுறை குறித்து பல்வேறு முரணான வகை இராமாயணங்கள் புனையப்பட்டிருப்பதிலிருந்தும் அறியலாம்.

இவ்வாறு தனது நோக்கங்களிலிருந்து மத நூல்கள் விலகி விட்டிருப்பதையே அவை 'முன் நகர்ந்து சென்று விட்டதாக' 'அறிவு ஜீவி'களால் பெருமிதத்துடன் குறிப்பிடப்படுகிறது.

கல்கி அவதாரம் முஹம்மது நபி தான் என்று தத்தம் ஆதாரங்களுடன் அடித்துச் சொல்கிற ஒரு சில ஹிந்து மத அறிஞர் கூற்றுக்களையும் 'அனைத்துத் தரப்பாருக்கும் நல்லதை வலியுறுத்தவும் தீமையை தடுக்கவும் தூதர்களே அனுப்பி வைக்கப்பட்டனர்' என்கிற குர்ஆனின் குரலையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் யாருக்கும் இறைதூதர்களே அவதாரங்களென திரித்து அறியப்பட்டிருக்கலாம் அல்லது அறிந்து திரிக்கப்பட்டிருக்கலாம் என்கிற அனுமானம் வலுப்பெறுவதைக் காணலாம்.

இவை ஒரு புறமிருக்க, இஸ்லாம் என்பது வெறுமே சடங்குகளால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள மதம் அல்ல. அது நோக்கத்தையும் அதனடிப்படையிலமைந்த செயற்பாடுகளையும் வலியுறுத்துகிற நெறி!. அதனால் தான் 'சக மனிதனை நோக்கிய புன்னகையை தருமமாக அறச்செயலாக கருதுகிற அதே நேரத்தில் '(பிறருக்கு காண்பிக்கவென்றே தொழுகிற) தொழுகையாளிகளுக்கு கேடு தான்' என்றும் இஸ்லாம் சொல்கிறது. மனித எண்ணங்களை மனிதாபிமானத்துக்கு உகந்ததாக மேன்மையாக்குவதே இஸ்லாத்தின் நோக்கம் என்பதை இவை விளக்கவில்லையா....?

சுருங்கக் கூறிடின் ஒரு மனிதன் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி தனது சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துகிற அனைத்துமே இஸ்லாம் சொல்லித்தருகிற வணக்க வழிபாடு வகையைச் சார்ந்ததே!

நேர்மையான உழைப்பும் ஒரு இறை வணக்கமாக- சக மனிதனுக்கு வாளியில் நீரெடுத்துத் தருகிற அற்ப உதவிகளும் இறை வணக்கமாக கருதப்படுவது இஸ்லாத்தில் தான்.

சக மனிதனுக்கு துன்பம் விளைந்து விடக்கூடாதே என்கிற நன்னோக்கில் பாதையில் கிடக்கிற கல்லையும் முள்ளையும் அப்புறப்படுத்துவதை மிகப்பெரிய நற்செயலாக நம்பிக்கையாளரின் தன்மையாக இஸ்லாம் கருதுகிறது.

(இதையெல்லாம் உணராத சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் வெடிகுண்டுகளாலும் - வன்முறையாலும் இஸ்லாமிய நோக்கத்திற்கு விரோதிகளாயினர் – என்ன தான் எதிர்வினையாகவே வெளிப்பட்டாலும்).

தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று போற்றி தனக்கு வேண்டும் நாட்களில் மட்டும் 'ஆசி' தருபவளாக தாயை கருதி 'மதர்ஸ் டே' என்றெல்லாம் கொண்டாடுவது ஒரு புறமிருக்க –
அதே தாய்மார்கள் மற்ற தினங்களில் பசிக்கு உணவும் தரப்படாமல் கோயில் வாசல்களில் பிச்சை எடுக்கிற அவலக் காட்சிகளும் மறு புறமிருக்க ..........

இஸ்லாம் தெளிவாக சொல்கிறது:
'பெற்றோரை நோக்கி 'சீ' என்ற வார்த்தையைக்கூட சொல்லாதீர்கள்.' (குர்ஆன்)
'இந்த உலகத்தில் நீங்கள் மிகவும் கடமைப்பட்டிருப்பது உங்கள் தாய்க்கே' (நபிமொழி).

அதே இஸ்லாத்தில் தான் தாயைக்கூட வணங்குவதற்கு உரிமையில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள்: 'சீசருக்கு உடையதை சீசருக்கு கொடுங்கள்அது போல போப்புக்கு உடையதை போப்புக்கு கொடுங்கள்'. அதாவது, எதையும் மிகைப்படுத்தாதீர்கள். எதையும் குறைப்படுத்தாதீர்கள்.

தாயாகவே இருந்தாலும் கடவுள் நிலைக்கு மிகைப்படுத்தாதீர்கள் (தன் வயிற்று உணவுக்கும் தன் வயிற்றுப் பிள்ளைகளை எதிர்பார்க்கிறாள் தாய்;)
கடவுளை படைப்பினங்களின் நிலைக்கு இறக்கிவிடாதீர்கள். (படைப்பினங்களுக்கு ஏதேனும் ஒரு பலவீனமுண்டு-அது யாராக இருந்தாலும்! - இறைவனோ பலவீனங்களுக்கு ஆட்படாதவன்).

இஸ்லாம் தன்னுடைய இறைக் கோட்பாட்டில் சிறிதளவும் இளகியோ விலகியோ இடம் கொடுக்காமல் உறுதியாக நிற்கிறது இதுவே இஸ்லாத்தின் இயல்பும் சிறப்புமான நிலை. வலிமையுங்கூட.

இறைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டுமென்று ஒரு சுயமரியாதையுள்ள மனிதன் நினைக்கிறானோ அந்த இலக்கணத்தின் படியே இஸ்லாம் இறைவனை அறிமுகப்படுத்துகிறது.

இறைவன் என்பவன் சர்வ வல்லமையுடையவனாகவும் மிகக் கருணை நிரம்பியவனாகவும்நீதி தவறாதவனாகவும் பெற்றோரோ மற்றோரோ தேவைப்படாதவனாகவும் எந்த வித தேவையுமற்றவனாகவும் நிகரில்லாதவனாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லாவிதமான கடவுள் தன்மைகள் தனித்தன்மைகளாக இருக்க வேண்டுமானால் அவன் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்(அதாவது, இரண்டு இறைவர்கள் இருக்க முடியாது).

(நபியே!) நீர் கூறுவீராக: அவன் - அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).அவன் (எவரையும்) பெறவில்லை: (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை. (திருக்குர் ஆன்)

இறைவனைப்பற்றிய இஸ்லாத்தின் இந்த இலக்கணம் 'இஸ்லாம் காட்டுகிற இறைவன் பொறாமைக்குணம் படைத்தவனாக இருக்கிறான்' என்று சிலர் சுட்டிக்காட்டுமளவுக்கு!

தன்னுடைய மனைவியோ (அ) கணவனோ தன்னையன்றி பிறரிடம் இல்லற சுகம் பெறுவதை அனுமதிக்காத வாழ்க்கைத்துணைகளை நாம் 'பொறாமைக்குணம்' பிடித்தவர்களாக கருதுவதில்லை! அதை அவர்களுடைய உரிமையாகவும் 'ரோஷம்' உள்ள தன்மையாகவுமே பார்க்கிறோம் – ஆனால் இறைவனை வணங்கும் விஷயத்தில் இறைவனாலேயே படைக்கப்பட்ட படைப்பினங்களையும் அவனுக்கு அற்பத்திலும் அற்பமான சக்தி கூட பெறாதவற்றையும் வணங்கத்தலைப்பட்டு அதை உரிமையுள்ள இறைவன் எச்சரிக்கை செய்தால் கூட 'பொறாமை' முத்திரை குத்துமளவுக்கு சிறுமைப் பட்டு போகவேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தமக்குள்ளே கேட்டு கொள்வது நலம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்றே குர்ஆனின் 113 அத்தியாயங்களில் இறைவனை இஸ்லாம் அறிமுகப்படுத்துவதையும் 'ஒரு தாய் தன் மகவிடத்து செலுத்தும் அன்பை விட பன்மடங்கு படைப்புகளிடத்தில் இறைவன் அன்புடையவன்' என்ற நபிமொழியையும் இவர்கள் மறுக்கிறார்கள் அல்லது மறைக்;கிறார்கள் என்றே அர்த்தம்.

இறைவன் எந்தஅளவுக்கு கருணையாளனோ அந்த அளவுக்கு நீதியை நிலைநாட்டக் கூடியவனாகவும் இருக்கவேண்டுமல்லவா? தாய் கூட தனது பிள்ளைகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது இரண்டு அடி கொடுக்கத்தானே செய்வாள். பிள்ளை திருந்தும் பொருட்டு அடிக்கிற அந்த தாய் கருணையற்றவளாக கருதப்படுவாளா?

மேலும் குர்ஆனின் ஒரு வசனம் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறது:
'தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்ட எனது அடியார்களே! – நீங்கள் கடலளவு பாவங்களைச் செய்திருந்தாலும் இறைவனுடைய அருளில் நம்பிக்கையிழந்துப் போகாதீர்கள்!நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பாளனும் கிருபையுடையவனுமாவான்'

நிற்க, அரசியல் இஸ்லாம் ஆன்மிக இஸ்லாம் என்று கூறு போடத் துடிப்பவர்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் வாயிலை எவ்வாறு அடைத்தார்கள் என்பதை 'Islam The Misunderstood Religion' என்கிற நூலில் James A. Michener கூறுவதிலிருந்து:

‘In all things Muhammad was profoundly practical. When his beloved son Ibrahim died, an eclipse occurred, and rumours of God’s personal condolence quickly arose. Whereupon Muhammad is said to have announced, ‘An eclipse is a phenomenon of nature. It is foolish to attribute such things to the death or birth of a human being’..

தன்னுடைய மகனின் இறப்பின் காரணமாகவே 'இறைவன் தரப்பிலிருந்து துக்கம் அனுஷ்டிப்பதாக' கிரகணத்தை சுட்டிக்காட்டி மக்கள் பேசிய போது, அந்த துக்கச் சூழலிலும் உண்மை மறைந்துப் போகக் கூடாது என்று 'கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகள்-யாருடைய பிறப்போடும் இறப்போடும் சம்பந்தப்படுத்துவது அறிவீனம் என்று முழங்கி தனக்குச் சாதகமாகவே வந்தாலும் மூட நம்பிக்கை முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அரசியல் இஸ்லாம் என்றெல்லாம் எழுத இந்த அரைகுறை விமர்சகர்கள் வெட்கப்பட வேண்டாமா...?
சுனாமிக்கும் அரசியல் சூத்திரங் கண்ட 'விஞ்ஞானிகள்' சிந்திப்பார்களா....?

நிற்க, முஸ்லிம்களாகவே இருந்தாலும், என்ன தான் சமாதிகள் சிலைகள் பிற படைப்பினங்களை வணங்காது இருந்தாலும், பணத்துக்காகவும் புகழுக்காகவும் பதவிகளுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்கிறவர்கள் எப்படி வேண்டுமானலும் நடந்துக்கொள்ளத் தயங்காதவர்கள் (சுருக்கமாக- பணத்தை, புகழை, பதவியை வணங்கியும் இணங்கியும் வாழ்பவர்கள்) அவர்கள் முஸ்லிம் என்கிற வார்த்தையால் குறிக்கப்பட்டாலும் முஸ்லிம் என்கிற அர்த்தத்துக்குள் வர மாட்டார்கள்.

அதே போல முஸ்லிம் என்கிற வார்த்தையால் குறிக்கப்படாவிட்டாலும் முஸ்லிம் என்கிற அர்த்தத்தோடு வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் மறுக்க இயலாது

உதாரணங்களுக்கு:

'திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என்னுடைய விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனுடைய கொள்கைக்கிணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை' என்று சொன்ன மாவீரன் நெப்போலியன்.

'வழமையான அர்த்தத்தில் நான் முஸ்லிமாக கருதப்படாவிட்டாலும் ஏக இறைவனுக்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு முஸ்லிமாகவே என்னை நம்புகிறேன்......... தேவையான அடிப்படை கருத்தாக்கங்களைக் கொண்டுள்ள இஸ்லாமே எதிர்கால மதம் என்பது நிச்சயம்' - W.Montgomery Watt தனது 'Islam and Christianity today' என்கிற நூலில்.

இறைவனே மிக்க அறிந்தவன்.

உண்மைக்கு வழிகோலும் விமர்சனங்களுக்கு நன்றி செலுத்துவோம்!.

Monday, April 11, 2005

கருத்துச் சுதந்திரமா….? கறுத்த எண்ணமா….?

கருத்துச் சுதந்திரமா….? கறுத்த எண்ணமா….?

‘என் கையை எந்தப்பக்கம் வேண்டுமானாலும் வீசுவதற்கு எனக்கு உரிமை உண்டு. அதே சமயம் அது அடுத்தவரின் மூக்கில் இடித்துவிடாமலிருக்க மிக கவனமாக இருக்கும் பொறுப்பும் எனக்கு உண்டு’ என்பதே கருத்துச் சுதந்திரத்திற்கான இலக்கணமாக கருதப்படுகிறது. மனிதமான மூக்கில் தான் இடித்துவிடாதிருக்க வேண்டுமே தவிர, மூக்கு போல் முகங்காட்டுகிற கோமாளித்தனங்களை , அசைய மறுக்கும் அபத்தங்களை அகற்றுவதற்கு கை வீசினால் தவறில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே…! ஆனால் இதையே காரணமாகக் கூறி, தான் தாக்கியதும் தாக்குவதும் மனித விழுமங்களை அல்ல என்று நியாயப்படுத்துகிற எழுத்து வியாபாரம் தான் இன்றைக்கு சந்தைப்படுத்தப்படுகிறது.

முக்கியமாக, சமூகப்பயிர் வளர்க்கும் எழுத்தாள சிரோன்மணிகள் இதில் பரபரப்பாளர்கள் என்று பெயர் எடுப்பதை விடவும் பண்பாளர்கள் என்று பெயர் பெறுவதை பெருமையாக கருத வேண்டும்.

திடீர் புகழுக்கும் பரபரப்புக்கும் ஆசைப்பட்டு கன்னாபின்னாவென்று எழுதிவிட்டு கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதை நியாயப்படுத்தவும் செய்கிறவர்கள், தனக்கென்று வரும் போது சுயநலப்பிறவிகளாகி விடுவது கண்கூடு.

ஒரு சரியான எடுத்துக்காட்டாக சல்மான் ருஷ்டியைச் சொல்லலாம்.

சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி ‘தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்’ ‘படிப்பது ராமாயணம் - இடிப்பது பெருமாள் கோயில்’ என்கிற பழமொழிகளை நினைவுப்படுத்துவதாக அமைந்தது. ‘சமரசம்’ மாதமிருமுறை இதழ் வெளியிட்டுள்ள செய்தியை அப்படியே கீழே தருகிறேன்:

'விர்ரென்று வேகமாக வந்து சரேலென்று வளாகத்துக்குள் நுழைந்து கிறீச்சென்று நின்றது அந்தக் கருப்பு வண்ண மகிழுந்து.

ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிய அந்தக் குண்டு மனிதர் படாரென்று கதவை மூடி விட்டு இரண்டு இரண்டு படிக்கட்டுகளாகத் தாவி நான்கே எட்டில் முதன்மை வாயிலை அடைந்து, அரங்குக்குள் நுழைந்து, மூச்சிறைக்க,கோபம் கொப்பளிக்கும் கண்களால் இங்குமங்கும் துழாவி, மேற்கே முகம் பார்த்து நின்றிருந்த டி.ஷர்ட் ஆசாமியை நெருங்கி, மொத்தென்று விட்டாரே ஒரு குத்து!. டி.ஷர்ட் ஆசாமியின் உதட்டோரத்தில் இரத்தம்….!

“ஹெள டேர் யூ” “உனக்கு என்ன துணிச்சல்” என ஆவேசமாகக் கத்தினார். சுற்றியிருந்தவர்கள் குண்டு மனிதரையும் டி.ஷர்ட் ஆசாமியையும் பிரித்து,குண்டு மனிதரை குண்டுக்கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.மீடியாவையு ,பத்திரிக்கையாளர்களையும் சகட்டுமேனிக்குத் திட்டிக்கொண்டே சென்றார், குண்டு மனிதர்.

திடீரென்று தன்னைப்பிடித்திருந்தவர்களை உதறித்தள்ளி டி.ஷர்ட் ஆசாமியை மறுபடியும் நெருங்கிய குண்டு மனிதர் “ இனிமேல் என் மனைவி பற்றி ஒரு வார்த்தை எழுதினே…. நடக்கிறதே வேறே…!” சுட்டு விரலை ஆட்டி மிரட்டினார்.

ஏன் இந்த ஆவேசம்?

டி.ஷர்ட் ஆசாமி திரைப்பட நிருபராம். குண்டு மனிதரின் மனைவி ஒரு மாடலிங் நடிகையாம். இந்த மாதிரி நடிகைகளைக் குறித்து பொதுவாக எப்படி எழுதுவார்களோ,அப்படி அந்த மாடலிங் பொண்ணு பற்றியும் டி.ஷர்ட் ஆசாமி எழுதினாராம். இதனைப் படித்த குண்டு மனிதரின் மனம் புண்பட்டு விட்டதாம். ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் அது தான் காரணமாம்.

அந்தக் குண்டு மனிதர் யார் தெரியுமா? ஸல்மான் ருஷ்தி. ஆம், சாத்தானிய வசனங்கள் நாவலை எழுதி கோடிக்கணக்கான முஸ்லிம்களின் இதயத்தைக் காயப்படுத்திய அதே ருஷ்தி தான்.

தன்னுடைய லேட்டஸ்ட் நடிகை மனைவி குறித்து ஆபாசமாக எழுதிவிட்டானே என இந்தளவுக்கு ஆவேசப்பட்ட ருஷ்திக்கு, தன் சாத்தானிய வசனங்கள் நாவலால் முஸ்லிம்கள் எந்தளவுக்குத் துடித்திருப்பார்கள் என்பது புரிந்திருக்குமா?

அறுபது வயது ருஷ்திக்கு 35 வயது மனைவி மீது இருக்கும் அன்பை விட கோடிக்கணக்கான மடங்கு அதிகமான, இன்னும் சொல்லப்போனால் உயிரினும் மேலான நேசத்தை நபிகளார் (ஸல்) மீது வைத்திருக்கும் முஸ்லிம்கள் எந்தளவுக்கு கொதித்துப்போய் இருப்பார்கள்.? ருஷ்திக்கு உறைத்திருக்குமா?

தெரியவில்லை. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் ருஷ்தியை அரவணைத்து, பாதுகாத்து, இந்தப்பிரச்னையைச் சாக்காக வைத்துக்கொண்டு ஈரானுடன் பல்லாண்டுகள் தூதரக உறவுகளை முறித்து முரட்டுத்தனமாக நடந்துக்கொண்ட மேற்கத்திய நாடுகள் ருஷ்தியின் ஆவேசத்தைக் கண்டுக்கொள்ளவில்லையே….!
ருஷ்திக்கு எதிராக முஸ்லிம்கள் ஆவேசத்தை வெளிப்படுத்திய போது கண்டித்து பக்கம் பக்கமாக எழுதித்தள்ளிய மேற்கத்திய ஊடகம் ருஷ்தியின் ஆவேசத்தை அமுக்கிவிட்டதே …! ஏன்? - எல்.பி ’ -
நன்றி: சமரசம்

ருஷ்டியின் அவதூறு குறித்து தமிழகத்தின் பிரபல கவிஞரொருவர் அச்சமயம் சொன்ன வார்த்தைகள்:

“ருஷ்டி செய்திருப்பது விமர்சனமல்ல.. அசிங்கமான அருவெறுப்பான அவதூறு. இதை கருத்துச்சுதந்திரம் என்ற பெயரால் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றால் கொமைனியின் தண்டனையையும் அதே கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் பொறுத்துக்கொள்ள வேண்டியதாகி விடும். இரண்டுமே அநாகரீகமானவை. தவிர்க்கப்பட வேண்டியவை.”

Thursday, March 24, 2005

விவாதங்கள் விவாதங்களாகவே..

இஸ்லாம் குறித்த என்னுடைய ஒரு பதிவுக்குப்பின் அக்பர் பாட்சாவின் 'இஸ்லாம் குறித்த விமர்சனங்கள்'பதிவும் அப்துல்லாஹ்வின் 'வாருங்கள் விவாதிக்கலாம்' பதிவும் நேசகுமாரின் 'விவாதங்களும் சில விளக்கங்களும்'கூடப் படித்தேன். இந்நிலையில் என்கருத்து இது தான்:

யாரும் யாரையும் தாக்காமல் எங்கிருந்தோ கிடைத்த/கிடைக்கிற; படித்த/படிக்கிற அவதூறுகளை அள்ளி வீசாமல் அழகிய ஆரோக்கியமான விவாதங்களைத் தொடங்கித் தொடர்ந்து எழுதி வரலாம். நிறைய விஷயங்கள் தெளிவாகும் நிறையப்பேருக்கு!
மாதிரிக்கு:
1).கடவுள் கொள்கை எப்படி இருந்தால் நலம்?
2).பர்தா எது - அது அவசியமா?
3).இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களும் பாதிப்புகளும்!
4).தீண்டாமைத் தீண்டலுக்கு சமூகப் பின்னணி என்ன? தீர்வுதான் என்ன? 5).இளம்பெண்துறவுகளின் சாத்தியங்களும் சங்கடங்களும்!
6).மதங்களும் அவை கட்டமைக்கும் சமூக ஒழுக்கங்களும்!
7).சமூகத்தைப் பீடித்துள்ள பயங்கரவாத வியாதிகள் ஏன்? நிவாரணம் என்ன? அரசும் சமூகமும் இதில் (பயங்கரவாத ஒழிப்பில்) எந்த அளவுக்கு முனைப்புக் காட்டுகின்றன? –
8). இஸ்லாத்தில் தூதர் கடவுளாகக் கருதப்படுவதில்லை யென்பது - என்று நிறைய விஷயங்களை அழகாக ஆரோக்கியமாக விவாதிக்கலாமே?

நேசக்குமார் ஏன் எதிர்மறைப் பார்வை என்றப்பெயரில் 'சகதியில் புழுத்து கிடக்கும் முகம்' என்றும் 'ரவுடி' என்றும் முஸ்லிம்களின் புனிதங்கள் மீது அவதூறுகளைப் பெய்தும் காழ்ப்புணர்வைக் கொட்ட வேண்டும்?

காழ்ப்புணர்வைக் காட்டுவதுதான் நோக்கம் என்றால்; அதைக் கொண்டுத் தான் மன அரிப்பை சொறிந்துக்கொள்ள முடியும் என்றால் விவாதம் என்று ஒரு அழகிய நாகரீக முகமூடி எதற்கு? உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தி நோக்கத்துக்கேற்ப நேர்மையாக செயல் படலாமே?.இரட்டை மனநிலைப்பாடு நயவஞ்சகத்தனமல்லவா? விமர்சனம் என்றப் பெயரில் யாரும் யார் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவது விபரீதமல்லவா? இது மேலும் மேலும் இடைவெளிகளைத்தானே அதிகப்படுத்தும்.

இப்போதும் நேச குமார்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் விவாதங்களைத் தொடருங்கள் என்றுத்தான் -விவாதம் என்பதின் சரியான அர்த்தத்தில். - காய்த்தல் உவத்தல் இன்றி!.

Saturday, March 19, 2005

இஸ்லாம் - பார்வைகளும் கோணங்களும்

இஸ்லாம் குறித்து சகோதரர்'நேச' குமாரும் எதிர்வினையாக முஸ்லிம் சகோதரர்களும் பதிகிற வலைப்பதிவுகளை அவதானித்தே வருகிறேன். என் கருத்துக்களைப் பதியும் எண்ணம் அவ்வப்போது தோன்றினாலும் என் சிற்றறிவு கருதியே சும்மா இருந்து வந்தேன். தவிர, இந்த ப்பதிவுகளிலிருந்து என் மூளைக்கும் நல்ல தீனி கிடைத்தது.

'நேச' குமாரின் பதிவுகளில் புத்திசாலித்தனமான எழுத்து வெளிப்படுகிறது. அது மழுப்பலாகவே இருந்தாலும். (அதற்காக, மற்ற சகோதரர்கள் புத்திசாலித்தனமற்றவர்கள் என்று அர்த்தமில்லை). தன்னுடைய கேள்விகளுக்கு பிறர் எதிர்கேள்வி எழுப்பும் போது அதை லாகவமாக தாண்டிச்சென்று விடுகிற அல்லது வேறொரு விவாதத்தின் மூலம் மறக்கடித்து விடுகிற 'சாமர்த்தியம்' 'நேச' குமாருக்கு நிரம்பவே இருக்கிறது. (அவருடைய இலக்கிய பின்புலம் காரணமாக இருக்குமோ?).

உதாரணத்துக்கு, 'நபிகள் காலத்திலேயே ஆன்மிக இஸ்லாம் பின்தள்ளப்பட்டு அரசியல் இஸ்லாம் முன்னிலைப்படுத்தப்பட்டது' என்கிற அவருடைய அனுமானத்துக்கு நபிகாலத்து ஆதாரம் தரும்படி அப்துல்லா என்பவர் கேட்டிருக்க....... அதை மறக்கடிக்கும் விதமாக....... 'இஸ்லாம் என்ன செல்லப்பிள்ளையா?' என்று தனது சமீபத்திய பதிவில் அங்கலாய்த்திருக்கிறார். தமிழக அளவில் இல்லாவிட்டாலும் உலக அளவில் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டது இஸ்லாமும் அதன் நபியும் தான் என்பதை அவர் அறியமாட்டாரா..? நிச்சயம் அறிவார். ஆனால் 'செல்லப்பிள்ளையா அது.....?' என்று கேட்பதன் மூலம் - அறியாத சில வாசகர்களையாவது 'அதானே..' என்று சொல்ல வைத்து விடலாம் என்று நினைத்த மனோ தத்துவ எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. அத்துடன் தான் கேட்ட கேள்வியை தானே மறுத்து ' இல்லை.... செல்லப்பிள்ளையில்லை... ஆனால் பயம்!' என்று நிறுவ முயல்கிறார்.

இன்னொரு உதாரணமாக...... நபிகளின் சொந்த வாழ்க்கைப் பற்றி எங்கோ தான் படித்தவற்றை அவர் தன் 'அறிவு' வாதமாக வெளிப்படுத்த..... அபூ முஹை என்பவரும் சலாஹுத்தீனும் நல்ல சஹீஹான ஹதீஸ் – விமர்சிப்பதற்கென்றே இட்டுகட்டப்பட்ட ஹதீஸ் என்பது குறித்து தெளிவான பாடம் எடுத்திருந்தனர். அதையெல்லாம் 'நேச' குமார் படித்துப் புரிந்து ஏதேனும் விளக்கம் கேட்டாரா என்றால் இல்லை..! அவரைப்பொறுத்தவரை 'எதையோ' திசைத்திருப்புவதற்காகத் தான் ஏற்றிவைத்த விவாத நெருப்பு எரிந்துக்கொண்டே இருக்க வேண்டும். எனவே உடனே வேறு ஒரு கேள்விக்கு தாவி விடுவார்.

ஒரு மதத் தலைவருடைய விஷயத்தில் 'இந்துக்களே! (பிராமணர்களைத்தான் சொல்கிறார் என்று நினைக்கிறேன்) இப்போது தான் நீங்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்' என்று அவர் எழுதிய போதே அவருடைய பின்புலம் வெளிப்பட்டு விட்டது என்பது என் கருத்து - இப்போது என்ன தான் 'பெரியாரை நான் முழுமையாக நிராகரிக்கவில்லை' என்று முழுப் பூசணியை எழுத்தில் மறைக்கப்பார்த்தாலும்!.

'அப்படியானால்.... நாங்கள் இஸ்லாம் பற்றி விமர்சிக்கவே கூடாதா...' என்பது 'நேச' குமாருடைய அங்கலாய்ப்பு என்றால் தாராளமாக விமர்சிக்கலாம். சரஸ்வதியை கலையின் பேரால் கொச்சைப்படுத்திய ஹூசைனுக்கு என்ன தண்டனை ? என்று கேட்கலாம். 'பிற மத கடவுள்களை ஏசவோ இழிவுப்படுத்தவோ செய்யாதீர்கள்' என்று போதிக்கிற சரியான இஸ்லாமைப் பின்பற்றுகிற முஸ்லிம்கள், ஹூசைனுக்கு தாமே அதிகபட்ச தண்டனைக்கு அரசைப் பரிந்துரைத்திருக்க க்கூடும்

ஆனால் கூடவே மாட்டுத்தோலுக்குப் பகரமாக 5 தலித்துகளை கொலை செய்த கொடியவர்கள் குறித்தும் சுதந்திரத் திருநாட்டிலும் திண்ணியங்களும் மேல வளவுகளும் 'மனு'வின் பேரால் தொடர்வது குறித்தும் உங்கள் பேனா கண்ணீர் சிந்தியிருந்தால் உங்கள் நடுநிலை 'மணம்' இந்த அளவுக்கு நாறாது. பாகிஸ்தானிலும் பங்களா தேஷிலும் அடக்குமுறை நடந்தாலும் சரியான முஸ்லிம்கள் எதிர்க்கத்தானே செய்வர்.இதில் ஆச்சர்யப்படுவதும் - ஏன் எதிர்க்கவில்லை என்று கேள்வி எழுப்புவதும் எதை மறைக்க....?
தன் இனம் சரியாக நடந்து வரும் போது அதை ஆதரிப்பது தவறில்லை என்று சொன்ன நபிகள் நாயகம் தன் இனம் தவறாக நடந்துக் கொள்ளும் போதும் அதை ஆதரிப்பதுகூடாது-அது அழிவுக்குத்தான் வழி வகுக்கும். அது தான் இனவெறி -- முந்தைய சமுதாயங்கள் இதன் காரணமாகவே அழிந்தன' என்றும் சொன்னார் என்று படித்திருக்கிறேன்.

நபிகள் நாயகத்தை டீசண்டான படமாக வரைந்தால் கூட ஓவியர் ஹுசைனை கொலை செய்ய மசூதிகளின் மாடங்களிலிருந்து இறைக்கட்டளை விதிப்பர் என்று அங்கலாய்க்கிற 'நேச' குமாருடைய கவனத்துக்கு ஒரு செய்தி:

அமெரிக்க அரசு நல்ல சிந்தனையாளர்களை கவுரவிக்கும் நன் நோக்கோடு, உலகின் சிறந்த சட்டங்களை வகுத்தளித்தவர்கள் என்று பத்து பேருக்கு தன்னுடைய நாட்டின் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் சிலையை நிறுவி கவுரவித்தவற்றுள் நபிகள் நாயகத்தின் சிலையும் ஒன்று! -ஆனால் முஸ்லிம்கள் இந்த 'கவுரவத்தை' ஏற்றுக்கொள்ளாமல் அமைதியாக உலகமெங்கும் புரட்சி செய்தனர்.சென்னையில் கூட நடந்தது. (அப்போது தான் நானும் அறிவேன்). 'என்னை அளவுக்கு அதிகமாக புகழாதீர்கள்' என்றே வலியுறுத்தி வந்த நபிகளின் வழிமுறைப்பேணும் முஸ்லிம்கள் அப்படித்தான் நடந்துக்கொள்வார்கள். இந்தச் செய்தி நேச குமாருக்கு தெரியாதிருக்காது. ஆனால் இதையெல்லாம் அவர் எழுத மாட்டார். காரணம் அவர் ஏற்றுக்கொண்ட 'கடமை' இதுவல்ல! (அந்தச் சிலை அகற்றப்பட்டதா என்பதை வாசகர்கள் அறியத்தரவும்).

அழித்தொழிக்கப்பட்ட அரபு பாகன்களுக்காக கண்ணீர் சிந்த முன் வருகிற 'நேச' குமாரைப் பாராட்டுகிறேன். அதேசமயம் இஸ்லாத்தின் கையில் வந்த வாள் ஏந்தப்பட்டதல்ல திணிக்கப்பட்டது என்பதையும் (வரலாற்றை அறிந்து) தெளிவுப்படுத்துங்கள். பேராசியர் ராமகிருஷ்ண ராவ்களும் - கவிக்குயில் சரோஜினி நாயுடுக்களும் உங்களுக்கு உதவக்கூடும்.

முஸ்லிம்களின் பயங்கரவாத செயல்கள் குறித்து எழுதும்போது உங்கள் பேனாவுக்கு பயங்கர வாதத்தை எதிர்க்கிற அனைவரும் - முஸ்லிம்கள் உட்பட – ஆதரவு தருவார்கள். ஆனால் 'எவனொருவன் ஒரு மனித உயிரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் கொன்ற குற்றத்துக்கு ஆளாவான்' என்று சொல்கிற குர்ஆனையே அதற்கு (பயங்கர வாதத்துக்கு) காரணம் காட்டாதீர்கள். (வேடிக்கை என்னவென்றால் - உங்கள் பார்வையில் இஸ்லாம் ஒரு ரவுடி. மற்றவர்கள் 'அடக்க ஒடுக்கமான பெண்'.) பயங்கர வாதத்தை எதிர்க்கும் போது தீர்வு தேடி பயணிக்கிறது போலத் தோன்றும் எழுத்து அபத்தமான காரணத்தை சுட்டும் போது அறிந்தவர்களால் நகைக்கப்படுகிறது. ஒரு நல்ல பேனா சொறிந்து கொடுப்பதற்கு 'வாங்கி'க் கொள்ளப்பட்டதும் விளங்கிக் கொள்ளப்படுகிறது.

நபிகள் காலத்திலும் கஃபா ஆலயம் கைக்கு வந்த பின்னும் கூட பாகன்களை கஃபா செல்ல தடை செய்யவில்லை. (ஹூதைபியா உடன்படிக்கை). முற்றுமாக முஸ்லிமான தேசத்தில் தான் மக்கள் பழைய மூடநம்பிக்கைகளை மறக்க வேண்டுமென்ற நோக்கில் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டனவாம்.

பாமியான் புத்த சிலைகள் உடைக்கப்பட்ட போது அநியாயம் அக்கிரமம் என்று கூக்குரலிடத் தெரிந்தவர்களுக்கு அதே ஆப்கனில் அதே சமயத்தில் பச்சிளம் குழந்தைகள் பாலுக்கும் வழியின்றி தவித்ததையும் சொல்லுங்கள். குழந்தைகளுக்காக உலக நாடுகளில் கையேந்தி உதவி கேட்டும் (ஐ.நா உட்பட) எந்த உதவியும் செய்யாமல், பாமியான் சிலைகளை பராமரிக்க மட்டும் ஐ.நா நிதி அனுப்பியது குறித்தும் எழுதுங்கள். 'அப்படிப்பட்ட சிலைகளை உடைத்தெறிந்து விட்டு குழந்தைகளை காப்பாற்றியிருக்கலாமே..' என்று ஈரமுள்ள பின்னூட்டங்கள் வரும். அடுப்பில் சமைக்க அரிசி கேட்டவர்களுக்கு - வீட்டு வாசலில் தோரணம் கட்டி தருகிறேன் என்று தானே உலகம் சொன்னது.

எந்த ஒரு பயங்கரவாதத்தையும் ஆதரிக்கக்கூடாது. இந்துவோ-முஸ்லிமோ- கிறிஸ்தவமோ- எந்த பயங்கர வாதமும் தவறு தான் . ஆபத்து தான்.! கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மைனாரிட்டிக்களின் பயங்கர வாதங்கள் 'எரிவதைப்பிடுங்கினால் கொதிப்பது அடங்கிவிடும்' ரகம் தான் - பெரும்பாலும்.
உதாரணமாக-பாலஸ்தீனர்களுக்கு நீதி கிடைத்து விட்டால் - மத்திய ஆசியாவில் இரத்தம் ஓடாது. ஈராக் உண்மையான சுயாட்சி பெற்று விட்டால் - அங்கும் அமைதி நிலவும். சங்பரிவார்களின் சமூக மேலாதிக்க மனப்பான்மை மாறிவிடுமானால் - இந்தியாவிலும்- மைனாரிட்டிகளும் (மத, ஜாதி அமைப்புகளும் ) மவுனமாகி விடுவார்கள் என்பது என் கணிப்பு.

அதே சமயத்தில் இன்னொன்று- தனி மனிதத் தவறுகளுக்கு மதத்தை காரணம் காட்டுவது அறியாமையை வெளிப்படுத்திவிடும். உதாரணமாக, மாட்டுத்தோலுக்காக மனிதர்களை கொன்றவர்களை கண்டிக்கும் போது அதற்காக இந்து மதத்தை தாக்கி விடக்கூடாது-அந்தக் கொடியவர்களின் மனங்களில் 'மனு'வோ, வருணாசிரமமோ பின்புலமாக இல்லாத பட்சத்தில்.

மசூதிகளில் மறுக்கப்படும் பெண்களுக்கு குரல் கொடுக்கும் முன் மழிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்படும் விதவைகளுக்காக கண்ணீர் விடுவது தான் முதலில் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நான் சிந்திக்கும் படியே கழகங்களும் சிந்தித்ததன் காரணம் எது முக்கியம் என்று உணர்ந்ததால் தானே. நேச குமார் மட்டும் 'பயங்கர வித்தியாசமாக' சிந்திப்பதன் காரணம் என்னவோ?

'ஒருவேளை, கடவுளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளில் தவறிவிட்டாலும் - கடவுள் நினைத்தால் உங்களை மன்னிக்கக் கூடும். ஆனால் சக மனிதர்களுக்கு நீங்கள் உங்களின் பொறுப்பை நிறைவேற்றத்தவறினால் - அல்லது அநியாயம் செய்து விட்டால்- அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவனும் உங்களை மன்னிக்க மாட்டான்' - என்று எனக்குத் தெரிந்து இஸ்லாம் தான் சொல்கிறது. மனித உரிமைகளின் உச்சம் இது. இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளையும் உங்கள் பேனா பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விவாதங்களைத் தொடருங்கள் நேச குமார். ஆனால் காய்த்தல் உவத்தலின்றி எல்லாத்தரப்பு பற்றியும்.

தூசுகளையும் மாசுகளையும் தொடர்ந்து கொட்டிவந்தால் தான் துடைக்கும் கரங்களும் தொய்வின்றி பணி செய்யும்! உண்மை பளிச்சிடும். நன்றி!

Sunday, March 13, 2005

தேர்தல் ஆணையரின் தரமான ஆலோசனை.



ஒரு தொகுதியில் 100 வாக்காளர்கள் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம். தேர்தல் நடைபெறும் போது பல்வேறு காரணங்களால் (பெரும்பாலும் வெறுத்துப்போய்) சுமார் 35-40 பேர் வரை வாக்களிப்பதில்லை. மீதமுள்ள 65-70 பேரும் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கிறார்கள். அவற்றுள் அதிகபட்ச வாக்குகளை (25-30 தான் இருக்கும்) வாங்கி விடுகிற வேட்பாளர் (கட்சி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது 100 பேர் உள்ள தொகுதியில் பெரும்பான்மையோருடைய (75-70 சதம்) வாக்குகளை பெறாதவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதாக உள்ளது என்று சொன்னால் அது ஒன்றும் மிகையில்லை. நம் ஜனநாயகத்தின் இலட்சணம் இது தான்.
இந்நிலையில் நமது தலைமை தேர்தல் ஆணையர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஒரு அற்புதமான யோசனையை முன் வைத்துள்ளார். அதாவது- கட்சி அடிப்படையில் தேர்தலை நடத்துவது-கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் எம்.பிக்கள்-எம்.எல்.ஏக்களை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் நியமித்துக்கொள்வது என்பதாகும்.
இது உள்ளபடியே சிறந்த ஆலோசனை என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.காரணம்-இம்முறையை பின்பற்றுவதன் மூலம் அரசியலில் உள்ள குற்றப்பின்னணியை பெருமளவு களையலாம். மேலும் பரவலாக அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கச்செய்யலாம்.
ஆனால்..வழக்கம் போல அரசியல் வாதிகள் இதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் தான்.
நீங்க என்ன சொல்றீங்க..?

Sunday, March 06, 2005

தொடர்வண்டி ச்சதிகள்!

தாமதம் தான். ஆனாலும் எழுதாமல் இருக்க முடியாது. கோத்ரா ரயிலெரிப்பு ச்சம்பவம் ஒரு விபத்துத்தான், சதி அல்ல என்று பானர்ஜி கமிஷன் இடைக்கால அறிக்கை தெளிவாக்கியிருக்கிறது. இது குறித்து சக வலைப்பதிவாளர்கள் யாரும் இதுவரை எழுதியதாக த் தெரியவில்லை.

விபத்தொன்றை சதி என்று குரூரமாய் சதிச்செய்து அன்னை தேசத்து ச் சொந்தங்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தும் இலட்சக்கணக்கில் அகதிகளாக்கியும் கோடிக்கணக்கான மனங்களில் அவநம்பிக்கையை விதைத்தும் தாம் விரும்புகிற சமூக மேலாண்மையை அறுவடை செய்யத்துடிக்கிற ஆதிக்கவாதிகளுக்கெதிராக எம் தேசத்தில் போதுமான எழுச்சி ஏற்படவில்லை என்பது தான் ஆச்சரியம். இதே மக்கள் தான் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் விளையாட்டாகவோ, பணம் வாங்கிக்கொண்டோ நம்மவர்கள் தோற்றாலும் ஊன் நிறுத்தி உயிர் வருத்தி சோகம் இசைத்து தம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகிறவர்கள்.

சொந்த மண்ணின் சகோதரர்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகி வந்த நிலையில், புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களையே (ஜே ஜே வென்று)பழி சுமத்திய தலைவர்கள், ஏன், அதற்கு முன்பதாக, நியூட்டனின் மூன்றாவது விதியையே சாக்காகச் சொல்லி இனப்படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டியவர்கள், 'யார் முதலில் பற்ற வைத்தது?" என்கிற ஒற்றை க்கேள்வியில் தமது பொறுப்புணர்வை ஒளித்துக்கொண்ட பிதாமகன்கள்- கரும்புள்ளி என்று நீலிக்கண்ணீர் விட்டு அதேசமயத்தில் தம் கோலங்களுக்கு மேலும்மேவும் புள்ளிகளை த்தேடியவர்கள மட்டும்தாம் என்றில்லை, வேறு யாரையும் கூட இந்த கமிஷனின் அறிக்கை உலுக்கியதாகத் தெரியவில்லை. குறைந்தபட்சமாக ஒரு பதவி விலகல் கோரிக்கைக் கூட எழவில்லை.பிரபல பத்திரிக்கைகளும் 'விபத்தை ச் சதியாக்கிய சதி" என்றதோடு நின்று விட்டன. அவைகளுக்கும் அந்த சீஸனில் விற்றுத்தீர்க்க வேறு பண்டங்கள் இருந்தன.

'தனி மனித க் கொலைகளுக்கு தேடிப்போய் தூக்கு வாங்கித்தருகிற நம்முடைய அரசியல் அமைப்பு கூட்டுக் கொலைகளுக்கு விசாரணை கமிஷன் வைப்பதோடு நின்று விடுகிறது" என்று ஒரு வலைப்பதிவில் படித்தது நினைவுக்கு வருகிறது.

ஆனால் இதை வைத்து அரசியல் நடத்துவது மட்டும் குறையவில்லை. பிகார் தேர்தலுக்கு முன்பாக இந்த அறிக்கை வெளியானதில் ஆதாயம் தேடும் அரசியல் மனப்பான்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அத்தகைய அரசியலை நிராகரிக்கும் மனப்பான்மையில், அந்த அவசரத்தில், நடந்த உண்மையையும் ஒதுக்கிவைப்பது தான் மிகப்பெரிய அவலம்.

தன் சொந்த மாநிலத்தவர்களையே பல்லாயிரக்கணக்கில் பலியாக்கி அரசியல் ஆதிக்கம் அடைய வல்லாதிக்க வல்லூறுகளும் நினைத்ததில்லை. நாற்காலிக்காக 'நாற்காலி'களை விடவும் மோசமாக நடந்துக்கொண்ட இவர்களை என்னவென்று சொல்வது..?

பானர்ஜி கமிஷனின் இந்த அறிக்கை க் குறித்து – குஜராத் படுகொலைகளை விசாரிக்கும் நானாவதி கமிஷனின் உறுப்பினர் ஒருவர்- கே.ஜி.ஷா என்பவர் - ஆட்சேபணைகள் சிலவற்றை எழுப்பியுள்ளார். அவற்றை நீதிபதி.பானர்ஜி திட்டவட்டமாக மறுத்து 'அவுட்லுக்கில்" பேட்டியளித்துள்ளார்.
நீதிபதி பானர்ஜியின் பேட்டியில் 'ரயில் எரிப்பு நடந்திருந்தும் வழக்கமான 48 மணி நேரத்துக்குள் அப்போதைய ரயில்வே அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிடாததும், ஒரு வாரத்துக்கு பிந்தி அமையவிருந்த மாநில அரசின் ஆணையத்தையே அதற்கு காரணம் காட்டியதும் - செயல்முறையில் 60 லிட்டர் பெட்ரோலை அதுவும் சூலம் ஏந்திய கரசேவகர்கள் நிரம்பியிருந்த பெட்டியில் ஊற்றுவது சிறிதளவும் சாத்தியமில்லை என்பது புலப்படுகிறது.
அப்போதைய ரயில்வே அமைச்சகம் அவசரம் அவசரமாக-'பெட்ரோலை ஊற்றிய வழி' என்று சொல்லப்பட்ட (இரண்டு பெட்டிகளை இணைக்கும்) வெஸ்டியபிள் கேன்வாஸை கழிவுப்பொருள் என்று சொல்லி விற்றதும் - திடீரென வந்த கும்பல் பெட்டிகளுக்கிடையேயான அந்த இணைப்பை அறுக்கும் ஆயத்தங்களோடும் ஆயுதங்களோடும் வந்தனர் என்பது அந்த சூழலில் நம்பத்தகாததாகவும் நகைக்கத்தக்கதாகவும் இதில் புதைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொணர போதுமானதாக இருக்கிறது.

இத்தனை வேதனைகளுக்குமிடையே ஒரு சிரிப்பும் இருக்கிறது. அது,குஜராத்தின் நற்பெயரை நீதிபதி பானர்ஜி களங்கப்படுத்தி விட்டதாக நானாவதி கமிஷன் உறுப்பினர் ஷா சொல்வது தான். இந்த கூற்று வரவிருக்கும் நானாவதி கமிஷன் அறிக்கையை கட்டுடைத்துப்பார்க்கும் வாய்ப்பையும் அளித்து விடுகிறது.

என் பேனா கவிதையாய் கண்ணீர் வடிக்கிறது:

அரசாங்கத் தண்டவாளங்களின் மீது
அமர்ந்திருந்தது அந்த ரயில்
புறப்பட எத்தனிக்கும் முன்பே
பிறப்பிக்கப்பட்டிருந்த சமிக்ஞைகள்
''நிறுத்த வேண்டாம்"
எல்லா 'நிலை" யங்களும்
ஏற்றுக் கொண்டன அவற்றை.
தம் இருப்புகளைத் தக்க வைக்க..!

நவீன ஹிட்லர் முகத்தில்
நாறிய எச்சில் துடைக்க
நியூட்டனின் மூன்றாம் விதி
அவதாரம் எடுத்து
அரசியலுக்கு வந்தது.

'பற்ற வைத்தது யார்?"
ஒற்றைக் கேள்வியைப்
பற்றிக் கொண்டவர்களுக்கு
கற்பை நிரூபிக்கவே
தீக்குளித்ததைப் போலொரு
கர்வம் இருந்தது.

எரிந்துக் கொண்டிருந்தவர்களுக்கோ
இலவசமாய் கிடைத்தன அறிவுரைகள்!

கர்ப்பிணி வயிற்றிலிருந்து
கிழித்தெறியப்பட்டது சிசு.
மகாத்மாவின் மண்ணிலிருந்து
மனிதாபிமானமும்!

ஜனங்களை முடக்கிவிட்டு
நடந்த தேர்தலில்
நாயகர்கள் வென்றார்கள்
ஜனநாயகம் என்றார்கள்.

காந்திகள் இறந்து போன தேசத்தில்
மோடிகள் முடிசூட்டிக் கொண்டு..!

கடைசியில் உண்மை
கறுப்பு மையில் வெளிப்பட்ட போது
மனிதம் மாண்டிருந்தது.
மானத்தோடு!

Sunday, February 13, 2005

15 வயதில் இந்திய பெண்களின் திருமணம்!

THANKS TO : தமிழில்: விக்டர்சன்

இந்திய நாடு பால்ய விவாகம் மற்றும் சிறுவயதில் திருமணம் செய்வதை தடைசெய்திருந்தாலும் பாதிக்கும் மேற்பட்ட சதவீதத்தில் இந்திய பெண்கள் 15 வயது அல்லது அதற்கு குறைவான வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுகிறார்கள் என்று ஓர் அரசாங்க அறிவிப்பு தெரிவிக்கிறது.
மக்கள் தொகை மற்றும் அதன் முன்னேற்றங்கள் என்ற அறிக்கையில் '20 முதல் 24 வரையிலான வயது பிரிவில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் 15 வயதில் திருமணம் முடிக்கப்பட்டவர்கள் என்றும் பருவம் அடையாத இரண்டும் கெட்டான் வயதில் திருமணம் முடிக்கப்படும் ஆண்களும் இதில் அடங்குவர்" என்றும் சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய சட்டவிதிகளின் படி திருமண வயது ஆணுக்கு 21 என்றும் பெண்ணுக்கு 18 என்றும் உள்ளது. ராஜஸ்தான் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் 68 முதல் 71 சதவிகித பெண்கள் 18 வயதிற்குள்ளாகவே திருமணம் முடிக்கப்படுகின்றனர் என்றும் ஆனால் இந்த விகிதம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 17 முதல் 25 சதவிகிதமாகவே உள்ளது என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
இது போன்ற திருமணங்கள் பலவிதமான குழப்பங்களையும் பிரச்சினைகளையும் பெண்களுக்கே அதிக அளவில் உண்டு பண்ணுகிறது. எதையும் சரிவர முடிவு பண்ணத் தெரியாத பருவம்ää கட்டுப்பாடான வாழ்க்கை முறை மற்றும் குறைந்த அளவிலான கணவனுடனான பேச்சுகள்ää புரியாமை போன்றவை பெண்களுக்கு சரியான துணையை தேர்வுசெய்வது மற்றும் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்வது போன்றவற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் தேசிய அளவிலான இந்த அறிக்கை பெரும்பாலான இளம் பெண்கள் திருமணத்திற்கு பிறகே உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்றாலும் அதிக அளவிலான இரண்டும் கெட்டான் வயதில் உள்ளவர்கள் கற்பழிப்பு மற்றும் முறையற்ற உடலுறவுகளில் அதிகம் ஈடுபடுவதாக கூறுகிறது. எனினும் இதில் சரியான புள்ளி விபரங்களையோ ஆய்வு அறிக்கைகளையோ சொல்லப்படவில்லை.
விளங்காத பருவத்தில் ஏற்படும் ஆர்வத்தின் காரணமாக இந்த வயதினருக்கிடையில் ஏற்படும் இந்த முறையற்ற உறவுகள் நாளடைவில் ஒருவரில் தொடங்கி பலபேரிடம் தொடர்பு வைத்துக்கொள்வது பாலாத்காரம் மற்றும் இன்னபிற வன்முறைகளில் அவர்களை ஈடுபட தூண்டிவிடுகிறது. இது இவர்களுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற உடலுறவையும் வளர்க்கிறது என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. பெரும்பாலான டீன் ஏஜ் ஆண்களும் பெண்களும் கருத்தடை சாதனங்களை எப்படி முறையாக பயன்படுத்துவது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பதாக இந்த அறிக்கைக் கூறுகிறது. 43 சதவிகித மக்கள் மட்டுமே முறையான கருத்தடை சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்திருக்கிறார்கள் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை கூறுகிறது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரம் 'HIV' வைரஸ் தொற்றுள்ளவர்கள் 5 மில்லியன்கள் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கிறது. 10 முதல் 25 வயதிற்குட்பட்ட பிரிவினர் இந்த வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கும் அதே வேளையில் வெறும் 59 சதவிகிதமானவர்களே கருத்தடை சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்கிறார்கள். கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதை பற்றிய விழிப்புணர்வு 27 சதவிகித சிறுவயது பருவத்தினரை இன்னும் அடையவேண்டிய நிலையில் இதில் 16 சதவிகித பெண்களும் அடங்குவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.


THANKS TO:

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகம்

www.seidhialaigal.com

பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (ROHYPNOL) மருந்து

பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (rohypnol) மருந்து
ரோஹிப்னோல் எனும் மருந்து பெண்களை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அறியாமலேயே சீரழிக்க உதவுகிறது. சமீபத்தில் மும்பையில் மேஜிக் எனும் இரவு நேர விடுதியிலிருந்து 5 குண்டர்கள் ஒரு பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்து பேன்ட்ஸ்டான்ட் எனும் இடத்தில் தூக்கி எறிந்து விட்டதாக வழக்கு பதிவாகியது. பாதிப்புக்கு உள்ளான பெண்னை விசாரித்த பொழுது அவருக்கு என்ன நடந்தது என்பது சிறிதளவு கூட ஞாபகத்தில் இல்லை. பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்திய பொழுது அப்பெண்ணுக்கு ரேஹிப்னோல் என்னும் மருந்து கொடுத்து சீரழிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
(rohypnol) மருந்து என்றால் என்ன?
(rohypnol) மருந்து சிறிய வில்லையாக வருகிறது மேலும் இம்மருந்து பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தாகும். இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு தனக்கு கடந்த 10-12 மணிக்கு முன்னால் என்ன நடந்தது என்பதே நினைவில் இருக்காது. மேலும் இதை உட்கொள்ளும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பே கிடையாது அதற்கு மேல் நிரந்தரமாக மலட்டுத்தன்மை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வகையான மாத்திரை வில்லைகள் இந்தியா போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள்ää கல்லூரிகள் போன்ற இடங்களில் இளவயதினரை குறிவைத்து விற்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இவ்வகை மாத்திரைகள் சமுதாயச் சீரழிவை உண்டாக்கும் கயவர்களின் கைகளில் சிக்கியிருப்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.
(ROHYPNOL) மருந்து எப்படி இருக்கும் எவ்வகையைச் சார்ந்தது அடையாளம் காணமுடியுமா?
இம்மருந்து வேலியம் (Valium )மற்றும் ஜனாக்ஸ் (xanox)போன்ற தூக்க மாத்திரை வகையைச் சார்ந்தது. இவ்வகை மருந்து ஆரம்பத்தில் தூக்கம் உண்டவாதற்காகவே உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் இம்மருந்தின் முக்கிய குணமானது இம்மருந்தை வேறொரு திரவமோ அல்லது மருந்துடனோ சேர்த்து உட்கொள்ளும் பொழுது மற்ற மருந்தின் வீரியத்தை கூட்டக்கூடிய சக்தி உடையது. அதன் காரணமாகவே அமெரிக்கா போன்ற மேல் நாடுகளில் கேளிக்கை விருந்துகளின் மது பானங்களுடன் உட்கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் அந்நாடுகளில் அதன் விபரீதத்தை அறிந்து தடை செய்யப்பட்டது. இம்மருந்தை உபயோகித்து கற்பழிப்பு ஏற்படுவதை தடுப்பதற்காகவே Drug Induced Rape Prevention and Punishment Act எனும் சட்டம் அமெரிக்காவில் இயற்றப்பட்டது. அதற்கும் மேலாக அம்மருந்து பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது.
அடையாளம்: (Rohypnol) மருந்து வண்ணம் வாடை சுவை எதுவும் இல்லாதது. அதனால் அம்மருந்தை குடிக்கும் பானத்திலோ வேறு எதிலும் சேர்க்கும் பொழுது உட்கொள்பவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. அக்காரணத்தினாலேயே நயவஞ்சகர்கள் இதைக்கேடான வழிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள. இம்மருந்தை அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் RAPE DRUG என்று அழைக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாத்திரை எங்கு கிடைக்கும் மற்றும் எப்படி உபோயகம் செய்வது என்று பல வலைத்தளங்களிலும் விரிவாக விவரித்து இருப்பது மிகவும் கொடுமையான விசயம். மக்கள் குறிப்பாக பெண் மக்கள் இனிமேலாவது நவ நாகரீகம் என்ற மாய வலையில் விழாமல் விழித்துக் கொள்வார்களா...?
THANKS TO : செய்யத் ஆப்தீன்

தமிழ் இஸ்லாமிய செய்தி ஊடகம்
thanks to : www.seidhialaigal.com

வேண்டுகோள்

வலைப்பதிவுகளை தவறாக பயன்படுத்துவதை; ஒருவருக்கொருவர் குற்றம் கன்டுபிடிப்பதை விடுத்துஆக்கப்பூர்வமான நல்ல இலக்கியங்கள் மலரவும் வளரவும் வழி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி